உடனடிச்செய்திகள்

Monday, December 12, 2011

பாலை - தேசிய இனத்தைக் கருவாகக் கொண்ட முதல் திரைப்படம் ! - கவிஞர் காசி ஆனந்தன்


 

                                       பாலை

 தேசிய இனத்தைக் கருவாகக் கொண்ட முதல் திரைப்படம் !                                                 - கவிஞர் காசி ஆனந்தன்

 

 

 

 

ழமையான தமிழ்த்திரைப்படப் போக்கிலிருந்து வழி விலகி 'பாலை' திரைப்படத்தை வரைந்திருக்கிறார் இயக்குநர் ம.செந்தமிழன்.

 

முல்லை- குறிஞ்சி- மருதம்- நெய்தல்-பாலை எனும் ஐந்திணை நிலமாய்த் திகழ்ந்த தமிழ்நாட்டில் முல்லை மண்ணின் ''ஆயர் குடி'' வாழ்க்கை திரைப்படமாகி இருக்கிறது.

 

தமிழினம் பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடும் எதிரியோடும் மோதி மோதித் தன்னை எதிர்கொண்ட பேரழிவுகளைத் தடுத்து நிறுத்திய தமிழினத் தற்காப்பு வரலாறுதான் செந்தமிழனின் ''பாலை''.

 

இயற்கை கொதித்தாலும் முல்லை பாலையாகி விடுகிறது; எதிரி மிதித்தாலும் முல்லை பாலை யாகிவிடுகிறது.

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மண்ணைச் செந்தமிழன் உயிர்த்துடிப்போடு பதிவு செய்திருக்கிறார்.

 

அம்மணமாய் உலக மக்கள் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த காலத்தில் ஆடை கட்டி, வீடமைத்து வாழ்ந்த அற்றைத் தமிழினத்தின் கதை.

 

தலைவன் ஒருவனைக் கொண்டு, மண்ணும் மொழியும் இனமும் காத்து வாழ்ந்த தமிழினத்தின் பண்டை வரலாறு.

 

உடன் போக்கு,- ஆநிரை கவர்தல், - மழைக்குறி பார்த்தல், - மீன்வேட்டை,- கவண் எறிதல் போன்ற முந்தையத் தமிழர் பழக்க வழக்கங்கள் பற்றிய உயிர்ப்பான பதிவு.

 

முற்றிலும் வேறுபட்ட ஒரு திரை இலக்கியத்தைப் படைக்கும் முயற்சியில் செந்தமிழன் முழுமையாய் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

உயர்ந்த தொழில் நுட்பத்தின் துணை கொண்டு மேனாட்டார் உருவாக்கும் திரைப் படங்களைக்கூட 'பாலை'யின் உயிர்த்துடிப்பான சில காட்சிகள் மிஞ்சி நம் நெஞ்சங்களை அசைப்பதை உணர்கிறோம்.

 

காயாம்பூ பண்டைத் தமிழர் காதலுக்கு இலக்கணமாய்க் காட்சி தருகிறார். முல்லை மண்ணின் ஆயர்குடி வரலாற்றை அவளே பனை ஓலையில் பதிவு செய்வதாய்ச் செந்தமிழன் காட்டுவது- பண்டைத் தமிழ்ப்பெண் தமிழ் மண் மீது கொண்டிருந்த காதலையே பறை சாற்றுகிறது.

 

தமிழ்த் திரைப்படங்களில் வரும் குத்துப் பாட்டுகள் - உடன் வெறிக் கூத்துகள்- கொச்சை இரட்டைப்பொருள் உரையாடல்கள் - அருவருப்பான கட்டிப் புரள்தல்கள் 'பாலை' யில் முற்று முழுதாய்த் தவிர்க்கப்பட்டுள்ளன.

 

வஞ்சகன், கொடியவன், கயவன், முரடன்  என்று எப்படி அழைத்தாலும் ''வில்லன்'' என்று திரைப்படத்தில் வருகிறானே.. பாலையில் அவன் யார்? என்றால்- 'வந்தேறி' தான் அவன் என்கிறார் செந்தமிழன். வந்தேறிகள் நேற்றும் இன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றுப் பகைவர்கள்; அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதையே ' பாலை' வலியுறுத்துகிறது.

 

'பாலை' திரைப்படம் பார்ப்பவர்கள் ஒளிப்பதிவாளர் அபி நந்தனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பல இடங்களில்- உலகத் தரத்துக்கு அவர் ஒளிப்பதிவு கருவியின் வெளிச்சம் பாய்ந்திருக்கிறது. என் இனிய நண்பர் பாலு மகேந்திராவே மெய்சிலிர்த்துப் பாராட்டிதாகச் சொன்னார்கள். உண்மை. அபி நந்தனைத் திரை உலகில் இனி அடிக்கடி பார்க்கலாம்.

 

இயல்பாக எல்லாத் திரைப் படங்களிலும் இருப்பதைப் போலவே பாலையிலும் குறைகள் இல்லாமல் இல்லை.

 

ஆயர் குடிக்கும் வந்தேறிகளுக்கும் இடையிலான போர் பத்து- இருபது பேர்களுக்கு இடையிலான சண்டையாகக் காட்டுவது ஆழமான ஒரு திரைப்படத்தில் குறையே ஆகும். இரண்டு குடும்பங்களின் சண்டை போல் இது இருக்கிறது.போரின் இடை இடையே எழும் அளவு மீறிய 'கத்தல்'கள் வேறு இயல்பாக இல்லை.

 

முதுவன், - விருத்திரன், - ன், - காயாம்பூ - அனைவரும் திரை உலகத்துக்குப் புதியவர்கள் எனினும் முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

 

'பாலை'யில் செதுக்கப்பட்ட  செந்தமிழனின் பாடல்கள்- வேத் சங்கரின் இசைக் காற்றில் மிதந்து வரும்போது சங்க இலக்கிய சொற்கள் தேனாகின்றன. பின்னணி இசைக் கோர்ப்பில், தமிழர் தொல்மரபு இசையை வார்க்கிறார் வேத் சங்கர்.

 

இயக்குநர் செந்தமிழனின் 'பாலை' திரைப்படத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் பறித்திருக்கிறார்.

 

தமிழ்நாட்டின் விடுதலை பற்றியும் இத்திரைப்படம் பேசுகிறது. தமிழீழத்தின் விடுதலை பற்றியும் இத்திரைப் படம் பேசுகிறது.

 

ஒரு தேசிய இனத்தைக் கருவாகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் பாலை என்பது திரைத்துறையினரே ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

 

இயக்குநர் செந்தமிழன் எப்படிப் பார்த்தாலும்- தமிழ்த் திரை உலகில் ஒளி மிக்க எதிர் காலம் கொண்ட ஓர் இணையற்ற இளம் இயக்குநராகக் கனிந்திருக்கிறார்.

 

 


--
தோழமையுடன்,
க.அருணபாரதி
 
ஆசிரியர் குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்,
தமிழ்த் தேசிய மாதமிருமுறை இதழ்
| பேச: 9841949462 | இணையம்: http://tamizharkannotam.blogspot.com |

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT