உடனடிச்செய்திகள்

Friday, December 16, 2011

உரிமையைப் பறிகொடுக்கும் தீர்மானம் - பெ.மணியரசன் கண்டனம்!

 முல்லைப் பெரியாறு அணை:

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியது உப்புச்சப்பில்லாத தீர்மானம் மட்டுமல்ல

உரிமையைப் பறிகொடுக்கும் தீர்மானம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்  கண்டனம்

 

முல்லைப்பெரியாறு அணை உரிமை தொடர்பாக நேற்று (16.12.2011) நடந்த தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் வெறும் வெற்று வேட்டாக நடந்து முடிந்துள்ளது. இன்றைய சூழ்நிலைக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

 

முதலமைச்சர் செயலலிதா முன்மொழிந்து சட்டப்பேரவையில் நிறை வேற்றப் பட்ட தீர்மானம் ஏற்கெனவே அவர் அறிக்கைகளில் குறிப்பிட்ட 142 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு உண்டு என்பதைத்தான் மறுபடியும் கூறுகிறது. நடுவண் காவல் படையை அணைபாதுகாப்பிற்கு அமர்த்த வேண்டும் என்கிறது.

 

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தமிழகம் தண்ணீர் தேக்கிக்கொள்ள உரிமை வழங்கும் வகையில் கேரள அரசு அம்மாநில சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று முதல்வர் செயலலிதா தீர்மானத்தில் கூறியிருப்பது தமிழக உரிமையை விட்டுக் கொடுப்பதாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு  உச்சநீதி மன்றம் அளித்தத் தீர்ப்பில் தமிழகம் முதல் கட்டமாக 142 அடி தண்ணீர்த் தேக்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அத்தீர்ப்பு செல்லாது என்ற வகையில் 2006 ஆம் ஆண்டு கேரள சட்டசபை ஒரு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது.

 

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அவ்வாறு சட்டத்திருத்தம் இயற்றும் அதிகாரம் கேரள அரசுக்கு இல்லையென்று தமிழக அரசு 2006 ஆம் ஆண்டே உச்சநீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தது. அவ்வழக்கு இப்போது விசாரணையில் உள்ளது. அதில் விரைவாகத் தீர்ப்பு வரக்கூடிய சூழலும் உள்ளது. இந்நிலையில் கேரள அரசு புதிதாக ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் 142 அடி தண்ணீர் தேக்கும் உரிமை தமிழகத்திற்குக் கிடைக்கும் என்ற வகையில் தமிழக சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, உச்சநீதிமன்றத்தில் தான் போட்ட வழக்கைத் தானே தோற்கடித்துக்கொள்ளும் செயலாகும்.

 

தமிழக முதலமைச்சரும், தமிழகக் கட்சிகளும் இந்த அபாயத்தை உணர்ந்து இந்தத் தீர்மானத்தைக் கைவிட்டு, புதிய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

 

தண்ணீருக்குத் தமிழகம் கேரளத்தைச் சார்ந்திருக்கிறது என்று மலையாளிகள் கருதுகிறார்கள். உணவுப்பொருள்களுக்கும், கட்டுமானப் பொருள்களுக்கும், மின்சாரத்திற்கும் கேரளம் தமிழ்நாட்டை முழுக்க முழுக்க சார்ந்துள்ளது என்ற உண்மையை உணர்த்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

 

1.           தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள எல்லைப் பகுதிகளில் தமிழ்மக்கள் அன்றாடம் இலட்சக்கணக்கில் குவிந்து கேரளத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அந்த மக்களைத் தமிழகக் காவல் துறை தாக்கி விரட்டி அடிக்கிறது. அன்றாடம் சட்டம் ஒழுங்குச் சிக்கலை தமிழக அரசு சந்திக்க வேண்டியுள்ளது. தமிழக காவல் துறைக்கும் தமிழக மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்குத் தமிழகத்திலிருந்து கேரளத்திற்குச் செல்லும் 13 பாதைகளை மூடி எந்தப்பொருள் போக்குவரத்தும் நடைபெறாமல் தமிழக அரசு தடை விதிக்கக் கூடிய தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியிருக்க வேண்டும்.அத்துடன் இரயில் வழியாகவும் பொருள் போகத் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் எல்லைப்புறத்தில் மட்டுமல்ல தமிழகமெங்கும் இப்பொழுதுள்ள பதற்ற நிலையைத் தணிக்க முடியும்.

 

2.           தமிழகம் மின் பற்றாக்குறையில் தவிக்கிறது. அதே வேளை தமிழகத்தின் நெய்வேலியிலிருந்து ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட் மின்சாரம் கேரளாவிற்குப் போகிறது. இந்த 9 கோடி யூனிட் மின்சாரத்தைக் கேரளத்திற்கு அனுப்பாமல் தமிழ்நாட்டுப் பயன் பாட்டுக்குத் திருப்பி விடுமாறு இந்தியஅரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

 

3.           தமிழக மக்களின் ஒட்டு மொத்தக் கோரிக்கையாக உள்ள இடிக்கி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குரிய தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

 

4.           கேரளத்தில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்க வேண்டும்.தமிழர்களைத் தமிழ்நாட்டுக்கு ஓடிப்போகும்படி விரட்டியும் அடிக்கிறார்கள். கேரளஅரசு இந்த வன்முறைகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது, எத்தனை வழக்குகள் பதிவு செய்தது, எத்தனை பேர் சிறையில் இருக்கிறார்கள் என்ற விவரங்களை அளிக்க வேண்டும்

என்று  தீர்மானத்தில் வலியுறுத்தியிருக்க வேண்டும்.

 

வெற்று வேட்டு சொற்களைக் கொண்டதாக மட்டுமின்றி தமிழக உரிமைக்குப் பாதகம் உண்டாக்கும் கூறுகளைக் கொண்டதாகவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளது. எனவே இங்கு முன் வைக்கப்பட்டுள்ள புதிய கூறுகளைக் கொண்ட புதிய தீர்மானத்தைத் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்ற வேண்டும் அல்லது தமிழக முதலமைச்சர் அமைச்சரவையைக் கூட்டி இவ்வாறான புதிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்

 

                                                                   

                                                                      (பெ.மணியரசன்)

தலைவர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம் : சென்னை

நாள்  : 16.12.2011

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT