உடனடிச்செய்திகள்

Friday, July 1, 2016

அரித்துவாரில் அவமானப்படுத்தப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும்! தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!அரித்துவாரில் அவமானப்படுத்தப்பட்டுள்ள
திருவள்ளுவர் சிலையை மீட்டுத் 
தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும்!

தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!


“விருந்தினராக வீட்டுக்கு அழைத்து மூக்கறுப்பது” என்று ஒரு மரபு வழக்கு தமிழர்களிடையே உள்ளது. அப்படித்தான், தமிழினத்தின் பேராசான் திருவள்ளுவர் சிலையை உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் கங்கைக் கரையில் நிறுவுவதாக எடுத்துச் சென்று, அங்கு திருவள்ளுவர் சிலையை நிறுவக்கூடாது என்று அம்மாநில மக்கள் எதிர்த்ததால்,

அடுத்த மாநிலமான உத்திரப்பிரதேசத்திற்கு சொந்தமான பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையின் (அரித்துவாரில்) ஒரு மூலையில் திருவள்ளுவர் சிலையை வைத்துள்ளார்கள் (29.06.2016). பின்னர் இச்சிலை முறைப்படி அரித்துவாரில் கங்கைக்கரையில் நிறுவப்படும் என்று தருண் விசய் கூறியுள்ளார்.
]
தமிழினத்தின் சான்றோர்கள், நீதி நூல்கள், இலக்கியங்கள், பண்பாடுகள் எதையும் வடநாட்டார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற உண்மையை மறுபடியும் அவர்கள் வெளியுலகிற்குத் தெரிவித்துள்ளார்கள்.


தங்களை இந்தியர் என்றும் தங்கள் தேசம் இந்தியா என்றும் மயக்கத்தில் தவறாகப் புரிந்து கொண்டுள்ள தமிழர்கள், திருவள்ளுவர் பெருந்தகைக்கு நேரிட்ட இந்த அவமான நிகழ்வையொட்டியாவது உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உத்தரகாண்ட் மாநில அரசோ, அந்த மக்களோ திருவள்ளுவர் சிலையை தங்கள் மாநிலத்தின் கங்கைக்கரையில் நிறுவுவதை தொடக்கத்திலிருந்தே ஏற்கவில்லை என்ற உண்மை அச்சிலை திறப்பு விழாவில், உத்தரகண்ட் மாநில ஆட்சியாளர்களோ அதிகாரிகளோ கலந்து கொள்ளாததிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உத்திரப்பிரதேச மாநில ஆளுநர் இராம் நாயக்கும், மேகாலயா ஆளுநர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகநாதனும் அத்திறப்பு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், திறப்பு விழா நடைபெறும் மாநிலத்தவர்கள் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து தடபுடலாக ஊர்வலம் நடத்தி, திருவள்ளுவர் சிலையை எடுத்துச் சென்ற தருண் விசய், அதே உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.


முதலில், கங்கைக்கரையில், அரிக்கிபவுடி என்ற இடத்தில், சிலையை நிறுவ அவர் ஏற்பாடுகள் செய்தார். அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால், அங்கிருந்து வேறோரு இடமான சங்கராச்சாரியார் சவுக் என்ற இடத்திற்கு சிலை நிறுவப் போயிருக்கிறார்கள். அங்கும் சாமியார்களும் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த முயற்சியும் கைவிடப்பட்டது. இறுதியில், உத்திரப்பிரதேச ஆளுநர் இராம் நாயக் முயற்சியில் அவருடைய மாநிலத்திற்குச் சொந்தமான பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையின் ஒரு மூலையில் சிலையை வைத்துள்ளார்கள்.

இராமகிருட்டிணர், விவேகானந்தர் போன்றவர்களின் பெயரில், தமிழ்நாட்டில் நிறுவனங்களையும் அவர்களது சிலைகளையும் ஊருக்கு ஊர் வைத்துக் கொண்டு, சமற்கிருதம் – ஆரியம் – இந்துத்துவா போன்றவற்றை வடவர்கள் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

திருவள்ளுவர் சிலையை அங்கு நிறுவ மறுப்பதற்குரிய காரணம் என்ன? அவர் வடமொழியை இழிவுபடுத்தினாரா? ஆரியர்களை இழிவுபடுத்தினாரா? அல்லது தமிழினத்தின் உயர்வைத்தான் எழுதினாரா? எதுவும் இல்லை!


ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை பொதுநிலையில் எழுதினார். அதனால்தான், உலகத்தில் பல மொழிகளில் திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டு பாராட்டப்படுகிறது. திருவள்ளுவர் செய்த ஒரே குற்றம், வடவர்கள் பார்வையில் அவர் தமிழ் இனத்தில் பிறந்தது மட்டும்தான்!

தமிழர்களுக்கு எதிரான ஆரியத்தின் காழ்ப்புணர்ச்சி இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடிக்கிறது. இன்றும் அது செயல்படுகிறது! இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டுமென்று தமிழ்நாட்டில் சிலர் பேசுவது வெட்கக் கேடான செயல் என்று இனிமேலாவது அவர்கள் உணர வேண்டும். “திருக்குறள்“ - தமிழ்த் தேசிய நூல் என்ற பெருமிதத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உ.பி. மாநிலத்துக்குச் சொந்தமான பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பது போல் இருந்தாலும், அங்கு திருவள்ளுவர் சிலை திறந்திருப்பது, ஒருபடி முன்னேற்றம்தானே என்று கருதக்கூடிய கையாளாகாத மனப்பான்மைக்கும், அண்டி வாழும் உளவியலுக்கும் பலியாகிப் போன தமிழர்கள் சிலர் வாதிடக்கூடும்.ஆனால், உலகின் முதல் இனமான – உலகின் முதல் செம்மொழிக்கு சொந்தக்காரர்களான தமிழினத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஆரியத்துக்கும் தமிழினத்திற்கும் இடையே இணக்கம் காணவே முடியாது என்பதை புரிந்து கொண்டு, வீரத்தமிழினத்தின் செம்மாந்த பிறங்கடையினராக (வாரிசுகளாக) செயல்பட வேண்டும்.

சமற்கிருதத் திணிப்பைக்கூட ஆதரிக்கும் ஏடுகளும், அமைப்புகளும் இங்கு இருக்கின்றன. ஆனால், தமிழ் பேராசான் திருவள்ளுவர் சிலைக்கு 10 சதுர அடி நிலம் கொடுக்கக் கூடிய நிலை வடநாட்டில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, தமிழ்த்தேசியத்தை ஒவ்வொருவரும் நெஞ்சில் ஏந்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசு தலையிட்டு, அவமானப்பட்ட நிலையில் அரித்துவாரில் சிறை வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை மீட்டு, உரிய சிறப்புடன் தமிழ்நாட்டில் வைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT