சீராய்வு முடிவுக்காகக் காத்திராமல்
ஏழு தமிழர்களை 161-இன்படி விடுதலை செய்க!
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!
அரசமைப்பு ஆயத் தீர்ப்பின் மீதான சீராய்வு மனுவைக் காரணம் காட்டி, இராசீவ் காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறையாளிகளாக உள்ள ஏழு தமிழர் விடுதலையை தமிழ்நாடு அரசு தள்ளிப்போட்டுவிடக் கூடாது.
குற்றவியல் சட்டப்பிரிவு 435, மாநில அரசுக்கு வழங்கும் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை நடுவண் அரசின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது என உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் கடந்த 02.12.2015 அன்று அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சீராய்வு மனு போட்டுள்ளது.
இச்சிக்கல் ஏழு தமிழரை விடுதலை செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்ததிலிருந்து தொடங்கினாலும், அரசமைப்பு ஆயத் தீர்ப்புக்குப் பிறகு அது ஏழு தமிழர் வழக்கிற்கு நேரடித் தொடர்பற்றதாக மாறிவிட்டது.
குற்றவியல் சட்டப்பிரிவு 435(2) மாநில அரசுக்கு வழங்கியிருந்த தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை இந்திய அரசின் இசைவின்றி செயல்படுத்த முடியாது என அரசமைப்பு அமர்வு அளித்தத் தீர்ப்பே சீராய்வு மனுவில் விவாதிக்கப்படுகிறது. இது மாநில அரசிற்குள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை வெட்டிச் சுருக்குகிறது என்ற ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகார எல்லை குறித்த சிக்கலாகும்.
இப்பொதுவான சட்ட சிக்கலை ஏழு தமிழர் வழக்கோடு நிரந்தரமாக முடிச்சுப் போடக் கூடாது. அவ்வாறு செய்வது, ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவுக்கு உண்மையான அக்கறையில்லை என கருதவே இடமளிக்கும்.
ஏனெனில், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் ஏழு தமிழருக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2011-இல் எழுந்த போது, முதலமைச்சர் செயலலிதா எழுப்பிய ஒரு முக்கியமான ஐயத்தை விவாதத்திற்குரிய இந்த அரசமைப்பு ஆயத் தீர்ப்புகூட தீர்த்திருக்கிறது.
மூன்று தமிழர் தூக்குத் தண்டனை 161-இன்படி கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையையொட்டி, காஞ்சி தழல் ஈகி செங்கொடி உயிரீகம் செய்த சூழலில், 29.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் செயலலிதா, “05.03.1991 நாளிட்ட கடிதத்தில் இந்திய உள்துறை அமைச்சகம் மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில், அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-இன் கீழ் குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரத்தின்படி நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161-இன் படியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 257(1)-இன்படி கட்டளையிடுகிறது” என்பதாகக் கூறினார்.
இவ்வாறான சட்டத்தடை ஏதுமில்லை, உறுப்பு 161-இன்படியான மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது – நீதிமன்றத் தலையீட்டிற்கும் அப்பாற்பட்டது என திட்டவட்டமாக அரசமைப்பு ஆயத் தீர்ப்பு கூறிவிட்டது.
இந்நிலையில் ஒன்றிய – மாநில அதிகாரம் குறித்த பொதுவான அடிப்படை சிக்கல் தீரும் வரை ஏழு தமிழர் விடுதலையை நிறுத்தி வைப்பது தவறான முடிவாகிவிடும். ஏனெனில், ஒன்றிய – மாநில அதிகாரப் பகிர்வு குறித்த இந்த அடிப்படை சிக்கல் சீராய்வு மனு என்ற நிலையைத் தாண்டி, ஏழு நீதிபதிகள் அல்லது ஒன்பது நீதிபதிகள் கொண்ட முழு ஆயத்தின் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய தேவை எழக்கூடும். அது முடிகிறவரை, எந்த ஞாயமுமின்றி ஏழு தமிழர்கள் சிறையில் வாட வேண்டிய அவசியமில்லை.
எனவே, மாநில அரசு அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி உடனடியாக பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிசந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment