உடனடிச்செய்திகள்

Friday, July 22, 2016

வேலையில்லாதோருக்கு வேலையளித்தல், வேளாண் விளைபொருட்களுக்கு இலாப விலை அளித்தல் இரண்டுக்கும் செயல்திட்டம் அறிவிக்க வேண்டும். தோழர் பெ. மணியரசன் கோரிக்கை


வேலையில்லாதோருக்கு வேலையளித்தல்,
வேளாண் விளைபொருட்களுக்கு இலாப விலை அளித்தல்
இரண்டுக்கும் செயல்திட்டம் அறிவிக்க வேண்டும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை

இன்று (21.07.2016) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் 2016-2017 நிதிநிலை அறிக்கையில், தீர்வு காணப்படாத மிக முக்கியமான செய்திகளில் இரண்டை மட்டும் இங்குக் குறிப்பிடுகிறேன்.


1. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடிப் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 92 இலட்சம். இவர்களில் பெரும்பாலோர் உரிய கல்வித் தகுதியும் சிறப்புத் தகுதிகளும் பெற்றவர்கள். இவர்களுக்கு வேலை வழங்குவதற்கான சிறப்புத் திட்டம் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

தமிழ்நாடு அரசின் கல்வித் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்கள் இலட்சக் கணக்கில் உள்ளன. அவற்றை நிரப்ப ஒரு சிறப்புத் திட்டம் தேவை.

அடுத்து, தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை தராமல் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்கள். வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே மிக அதிக எண்ணிக்கையில் வேலை தருகிறார்கள். வேலைக்கான தேர்வு என்பதைச் சூதாக நடத்தித் தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டித் துறை, பி.எச்.இ.எல்., பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், பெட்ரோலியத் தொழிற்சாலைகள், நெய்வேலி அனல் மின் நிலையம், துறைமுகங்கள், வருமான வரி - உற்பத்தி வரி - சுங்கவரி அலுவலகங்கள்,கடவுச் சீட்டு அலுவலகங்கள், கணக்குத் தணிக்கை அலுவலகங்கள், வானூர்தி நிலையங்கள் என இந்திய அரசுத் துறையைச் சேர்ந்த அனைத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மண்ணின் மக்களுக்கு நேர்ந்துள்ள இந்த உரிமைப் பறிப்பைச் சரிசெய்ய, தற்போது கர்நாடகத்தில் செயல்பாட்டிலுள்ள “சரோஜினி மகிசி” குழு பரிந்துரைகள் போல், தமிழ் நாட்டிலும் விதிமுறைகள் தேவை. எனவே மண்ணின் மக்களுக்கு இந்திய அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலைகள் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசு செய்திருக்க வேண்டும். 

தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாகவே மேற்கண்ட இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும். ஏற்கெனவே இந்த முறைதான் செயல்பாட்டிலிருந்தது.


இந்தப் பணிகளுக்கு அனைத்திந்திய அளவில் தேர்வு வைக்கும் முறையைக் கைவிடுமாறு இந்திய அரசைத் தமிழ்நாடு அரசு கோரவேண்டும். இதற்கு முன்னோட்டமாகக் கர்நாடகத்தில் அமைக்கப்பட்ட சரோஜினி மகிசி ஆணையம் போல் ஓர் ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை இந்த நிதி நிலை அறிக்கையிலேயே சேர்க்க வேண்டும்.

2. உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களுக்குக் கட்டுபடியான விலை என்று சொல்லும் மோசடிச் சொற்கோவையை நீக்கி இலாப விலை நிர்ணயிக்க வேண்டும் என்ற கொள்கை அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் ஆகியோருக்குச் சம்பளம் நிர்ணயிக்கும் போது அவர்களின் குடும்பச் செலவையும் கணக்கில் கொள்வது போல் உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு விலை வரையறுக்கும்போது அவர்களின் குடும்பச் செலவையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இந்தக் கோட்பாட்டு அடிப்படையில் வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தில் தகுதியான வல்லுநர்களையும் வேளாண் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும்.

இப்பொழுது இடைக்கால ஏற்பாடாக நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ3000 என்றும், கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ4000 என்றும் விலை நிர்ணயம் செய்து இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும்.

மேற்கண்ட இன்றியமையாத இரு கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நடப்பு நிதி நிலை அறிக்கையில் சேர்க்குமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT