உடனடிச்செய்திகள்

Monday, July 25, 2016

அனகாபுத்தூரில் எளிய மக்களை வெளியேற்றும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம்!



அனகாபுத்தூரில் எளிய மக்களை வெளியேற்றும்
தமிழ்நாடு அரசைக் கண்டித்து மக்கள் போராட்டம்!


கடந்த 2015ஆம் ஆண்டின் இறுதியில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது தமிழ்நாடு அரசு, செம்பரம்பாக்கம் ஏரியை இரவு நேரத்தில் முன்னறிவிப்பின்றி திறந்து விட்டது. இதன் காரணமாக, பெருமளவிலான வெள்ள நீர் சென்னை மாநகரக்குள் புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது.
செம்பரபாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரும், கனமழையால் வந்த மழை நீரும் அடையாறு ஆற்றில் வெள்ளமென வந்த நிலையில், நீரின் போக்கைத் தடுத்து சென்னை மாநகருக்குள் கட்டப்பட்டிருந்த பெரு நிறுவன ஆக்கிரமிப்புக் கட்டங்களின் காரணமாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.


செம்பரம்பாக்கம் ஏரியை இரவு நேரத்தில் திடீரென திறந்துவிட்டது குறித்து தமிழ்நாடு அரசின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை நிலுவையிலுள்ளது.

இந்நிலையில், தனது நிர்வாகத்திறமையின்மை மற்றும் இரவு நேரத்தில் திடீரென செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதுதான் சென்னை மாநகரின் வெள்ளப் பெருக்கிற்கு முதன்மைக் காரணம் என்பதை மறைத்துவிட்டு, ஒட்டு மொத்த பாதிப்புகளுக்கும் எளிய மக்களின் குடியிருப்புகள் மட்டுமே காரணம் என்று கூறிக் கொண்டு, தமிழ்நாடு அரசு திசைதிருப்பும் பணிகளைச் செய்து வருகின்றது.

சென்னை மாநகருக்குள் அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரைகளிலும், மாநகருக்குள் உள்ள பல்வேறு ஏரிகளிலும் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டுமானங்கள் மீது கைவைக்க விரும்பாத தமிழ்நாடு அரசு, ஆற்றின் போக்கைத் தடுக்காமல் கரைகளில் வீடுகட்டி பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் எளிய மக்களின் குடியிருப்புகளை இடித்து நொறுக்கத் திட்டமிட்டு வருகின்றது.

அடையாறு ஆறு சென்னை மாநகருக்குள் பயணிக்கத் தொடங்கும் நந்தம்பாக்கம் தொடங்கி, கடலோடு கலக்கும் பட்டினப்பாக்கம் வரையிலான 12 கிலோ மீட்டர் தொலைவில்தான் பெரும் கட்டுமானங்கள் ஆற்றின் போக்கைத் தடுக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ளன என்று பல்வேறு வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மிக முகாமையாக, சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் ஓடு தளமே, அடையாறு ஆற்றின் போக்கைத் தடுத்து உருவாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான செய்தி! மேலும், மணப்பாக்கம் மியாட் தனியார் மருத்துவமனை, நடுவண் அரசின் பறக்கும் தொடர்வண்டிக் கட்டுமானம் உட்பட பல கட்டிடங்களும் பல மென்பொருள் நிறுவனக் கட்டிடங்களும் வணிக வளாகங்களும் சென்னை மாநகருக்குள்தான் ஆற்றின் போக்கைத் தடுத்துக் கட்டப்பட்டுள்ளன.

அதிலும் முகாமையாக, அடையாறு ஆற்றின் நீர் கடலுக்குள் சேரும் பட்டினப்பாக்கம் பகுதியில் லீலா பேலஸ் நட்சத்திர விடுதி, செட்டிநாடு நிறுவனங்களின் கட்டடங்கள் காரணமாக, ஆற்றின் ஆழம் மிகவும் குறைந்து மேடாக இருப்பதும், பல்லாண்டுகளாக முகத்துவாரப் பகுதி தூர் வாரப்படாததும்தான், ஆற்று நீர் கடலுக்குள் போக முடியாமல் தண்ணீர் பல கிலோ மீட்டர் அளவிற்கு நகருக்குள் தேங்கி நிற்பதற்கு முதன்மைக் காரணம் என சுட்டிக் காட்டப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு அரசோ இந்த நிறுவனங்களின் கட்டுமானங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடையாறு ஆறு பயணித்து வரும் பகுதிகளில் “ஆக்கிரமிப்பு” என்ற பெயரில், எளிய மக்களை வெளியேற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.
2015 _- பெருவெள்ளத்தைக் காரணம் காட்டி, காஞ்சி மாவட்டம், அனகாபுத்தூரிலுள்ள சாந்தி நகர், மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், டோபிகானா உள்ளிட்ட பகுதிகளை இடித்துத் தள்ள தற்போது தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இதனைக் கண்டித்து, இப்பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் 650-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதற்கெதிரானப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே, சென்னை பெருவெள்ளம் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே 2012ஆம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியின்போது, இதே பகுதி மக்களின் வீடுகளை இடித்துத் தள்ளிவிட்டு, அதன்மேல் அடுக்ககங்களில் வசிக்கும் பணம் படைத்தோர் நடைபயணம் செல்வதற்கு ஏதுவாக, ஆற்றோர நடைபாதை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது சென்னை பெருவெள்ளத்தை காரணமாகக் கூறிக் கொண்டு, இதே பகுதியை முற்றிலும் இடித்து நொறுக்க திட்டமிடப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதிக்கு நேர் எதிராக அடுத்த கரையில் அமைந்துள்ள மாதா பொறியியல் கல்லூரியின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீது, ஒரு அடியைக்கூட மீட்கத் தயங்கும் தமிழ்நாடு அரசு, கரையின் இன்னொரு பகுதியில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டுள்ள பகுதியை, இடித்து நொறுக்கத் திட்டமிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
அனகாபுத்தூர் பகுதி மக்களை வெளியேற்றக் கூடாது என்று கோரி, 22.07.2016 அன்று காலை, அனகாபுத்தூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில், அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்தை அப்பகுதி இளைஞர்கள் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
பெண்களும் ஆண்களும் என நூற்றுக்கணக் கானோர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டு நின்று, அரசின் முடிவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தே.மு.தி.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அனகை முருகேசன், சி.பி.எம். பகுதிச் செயலாளர் தோழர் பாலன், புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் தோழர் தமிழ்வாணன், புரட்சி பாரதம் மாநிலத் துணைச் செயலாளர் திரு. அன்பரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கண்டன உரையாற்றினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி உரையாற்றினார். பேரியக்கத் தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்களும், அப்பகுதி இளைஞர்கள் இராசேசு, மாரி, கோபி, குப்பன், வேல், நாகராசு, மாரியப்பன், குமார், ஞானவேல் உள்ளிட்ட திரளானப் பொது மக்களும் பங்கேற்றனர்.
அனகாபுத்தூர் மக்களை வெளியேற்றும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு, உடனடியாகக் கைவிட வேண்டும். அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி, கரைகளை வலுப்படுத்தி, சென்னை மாநகருக்குள் உள்ள தனியார் நிறுவனக் கட்டுமானங்களை அகற்றினாலே அடையாறு ஆறு தடைபடாமல் ஓடும். எனவே, தமிழ்நாடு அரசு அதைச் செய்ய வேண்டும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT