உடனடிச்செய்திகள்

Saturday, July 2, 2016

பாலாற்றுத் தடுப்பணையை உயர்த்துவதைத் தடுக்க ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!




பாலாற்றுத் தடுப்பணையை உயர்த்துவதைத் தடுக்க
ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்!

தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள புல்லூரில், பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே உள்ள 5 அடி உயர தடுப்பணையை, 12 அடியாக உயர்த்திட ஆந்திர அரசு கட்டுமானப் பணிகள் நடத்துவதையும், புல்லூர் கரையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கனக நாச்சியார் அம்மன் கோவிலை அபகரிக்க – ஆந்திர அரசே ஊர்திகள் நிறுத்துவதற்கான கட்டணச் சீட்டு ஏலம் விட்டதையும் கண்டு கொதித்தெழுந்த புல்லூர் பகுதி உழவர் பெருமக்களும் கிராமத்தினரும் தமிழர்களின் உரிமைப் பறிப்பை எதிர்த்துப் போராடி இருக்கிறார்கள். ஆந்திர அரசின் அத்துமீறல்களை – ஆக்கிரமிப்புகளை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

ஆந்திராவில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள பல்வேறு தடுப்பணைகளின் காரணமாகக் தமிழ்நாட்டில் பாலாறு வறண்டு கிடக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டு எல்லையிலுள்ள புல்லூர் தடுப்பணையை உயர்த்துவதன் மூலம், மழை வெள்ளக் காலங்களில் தமிழ்நாட்டிற்கு வழிந்து வரும் பாலாற்று நீர்கூட தடைபட்டு, பாலாற்றிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட பெற முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் குடிநீருக்கும், வேளாண்மைக்கும் மிகப்பெரும் ஆபத்து ஏற்படும்.

இந்தச் செய்தி, இன்று (01.07.2016) ஏடுகளில் வந்த பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், பாலாற்றில் புல்லூர் தடுப்பணை உயரத்தை அதிகரிக்கக் கூடாது என்றும் அப்படி அதிகரித்தால், தமிழ்நாட்டு உழவர்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி பரப்புப் பாலைவனமாகிவிடும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

ஆனால் ஆந்திர அரசு, பல நாட்களுக்கு முன்பாகவே தமிழ்நாடு பொதுப்பணித்துறைச் செயலாளருக்கு, தான் புல்லூர் தடுப்பணை உயரத்தை அதிகப்படுத்தும் கட்டுமானப் பணியைத் தொடங்கவிருப்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்துவிட்டு, மக்கள் போராடி அப்போராட்டச் செய்தி ஊடகங்களில் வந்த பின்னர், கடிதம் எழுதுவது கடமை தவறிய செயலாகும். இது கண்டனத்திற்குரியது.


இப்பொழுதாவது கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் உரிய அதிகாரிகள் குழுவை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க அனுப்பி அவரிடம் நேரில், பாலாற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை வலியுறுத்தும் 1892 சென்னை – மைசூரு ஒப்பந்தம், ஆந்திர அரசு ஏற்கெனவே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே புதிதாக அணை கட்ட முயன்றதைத் தடுக்கும் வகையில் தமிழ் நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளதையும் எடுத்துரைப்பதுடன், புல்லூர் தடுப்பணையை உயர்த்துவதன் மூலம் தமிழ்நாட்டு உழவர்களுக்கு ஏற்படும் வேளாண்மை இழப்பையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் குடிநீர் பாதிப்பையும் விளக்கி தடுப்பணையை உயர்த்துவதை உடனடியாகக் கைவிட வலியுறுத்த வேண்டும்.

அதேபோல், புல்லூர் கனக நாச்சியம்மன் கோவிலில் ஆந்திர அரசின் ஆக்கிரமிப்பையும் விலக்கிக் கொள்ள வலியுறுத்த வேண்டும். இதன்பிறகும் நடவடிக்கை இல்லையென்றால், தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, ஆந்திர அரசின் பணிகளுக்குத் தடை ஆணை பெற வேண்டும்.

புல்லூர் தடுப்பணை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை மனத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கணமும் தாமதிக்காமல் மேற்கண்ட இருவகை உரிமைக் காப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT