உடனடிச்செய்திகள்

Sunday, July 17, 2016

சேலம் சிறைக்குள் சூழலியல் செயல்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது கொடூரத் தாக்குதல்! தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

சேலம் சிறைக்குள் சூழலியல் செயல்பாட்டாளர்
பியூஸ் மனுஷ் மீது கொடூரத் தாக்குதல்!
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் 
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


சேலம் முள்ளுவாடி பகுதியில், பொது மக்களுக்கு முறைப்படி அறிவிப்பு செய்து – இழப்பீடோ மாற்று இடமோ வழங்காமல், தொடர்வண்டிப் பாதையைக் கடக்கும் வகையில் மேம்பாலம் கட்டும் முயற்சியில் இறங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்துப் போராடிய, சேலம் மக்கள் மன்ற அமைப்பாளரும், சூழலியல் செயல்பாட்டாளருமான பியூஸ் மனுஷ் மற்றும் தோழர்கள் கார்த்திக், முத்து ஆகியோர் கடந்த 08.07.2016 அன்று, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இத்தோழர்கள் தொடர்ந்து சேலம் பகுதியில் நீர் நிலைகள் மீட்பு உள்ளிட்ட சூழலியல் சார்ந்த பணிகளையும் விழிப்புணர்வையும் மேற்கொண்டு வருபவர்கள் ஆவர்.

சேலத்திலுள்ள மூக்கனேரி, அம்மாபேட்டை, குண்டுகள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி ஆகிய ஏரிகளையும், அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி ஆகிய இரண்டு தெப்பக்குளங்களையும் தன்னார்வ முயற்சியில் இறங்கி, அவற்றை அழிவில் இருந்து மீட்டெடுத்து அரும்பணியாற்றியத் தோழர்கள் இவர்களே! மேலும், தர்மபுரியில் வற்றிப்போன எட்டிமரத்துப்பட்டி ஓடையை மேம்படுத்தி, இன்று அதை வற்றாத நீரோடையாக மாற்றி சாதித்துக் காட்டியும், சேலத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான மேட்டூர் அணையில் கேம்பிளாஸ்ட் நிறுவனம் கொட்டும் வேதியியல் கழிவுகளில் சயனைடு இருப்பதை அறிந்து, தொடர் போராட்டத்தால் அதைத் தடுத்து நிறுத்தியதும் இவர்களே!

இப்படி தன்னார்வத்தோடு பணியாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, தற்போது பொய் புகாரின் பேரில், பிணையில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து, இத்தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

முகநூலில் தன்னைத் தவறாகச் சித்தரித்து படம் வெளியிட்டதன் காரணமாக, சேலம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட சிக்கலில், மெத்தனமாகச் செயல்பட்ட சேலம் மாவட்டக் காவல்துறையினர் மீது இதே தோழர்கள் கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். அந்தக் காழ்ப்புணர்வின் காரணமாகவே, காவல்துறையினர் இத்தோழர்களைக் கைது செய்திருக்கக் கூடும் என்ற வலுவான ஐயம் எமக்கு எழுகின்றது.

கடந்த 14.07.2016 அன்று, தோழர்கள் கார்த்திக் மற்றும் முத்து ஆகியோர் பிணை வழங்கப்பட்டு விடுதலையாகிவிட்ட நிலையில், பியூஷிற்கு பிணை வழங்க தமிழ்நாடு காவல்துறையினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து பிணை கிடைக்காமல் செய்துள்ளனர்.

இதைவிடக் கொடுமையாக, நேற்று (15.07.2016) பியூஷை அவரது மனைவி மோனிகா, சூழலியல் செயற்பாட்டாளர் ஈஸ்வரன், தருமபுரி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் பாலா ஆகியோர் சிறைக்கு சென்று சந்தித்து போது, சிறைக் காவலர்கள் தம்மைக் கடுமையாகத் தாக்கி உள்ளதாக பியூஷ் தெரிவித்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

தோழர் பியூஷ் மனுஷ் ஊழல் செய்தோ – கையூட்டு பெற்றோ சிறை சென்றவர் அல்ல. மக்களுக்காகச் சிறை சென்றவர். நீதிமன்ற சிறைக் காவலில் உள்ள அவரையே, சட்டத்தின் மீதோ அரசின் மீதோ அச்சம் கொள்ளாமல் சிறைக்காவலர்கள் தாக்கியிருக்கின்றனர் என்றால், தமிழ்நாடு காவல்துறையினரின் திட்டமிட்டே அவரைத் தாக்கியிருப்பதாகத் தோன்றுகிறது.

எனவே, மக்களுக்காகச் சிறை சென்றுள்ள தோழர் பியூஷை, இனியும் கால தாமதம் செய்யாமல் தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சிறையில் அவரைத் தாக்கிய சிறைக் காவலர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT