உடனடிச்செய்திகள்

Saturday, July 16, 2016

தமிழக மருத்துவ மேற்படிப்பில் மண்ணின்மாணவர்களுக்கு முன்னுரிமை கூடாதாம்! உச்ச நீதிமன்றத்தின் அநீதி! தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

தமிழக மருத்துவ மேற்படிப்பில் மண்ணின்மாணவர்களுக்கு முன்னுரிமை கூடாதாம்! உச்ச நீதிமன்றத்தின் அநீதி! தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளிலும், தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ மேற்படிப்பில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என்றும், வெளி மாநில மாணவர்களுக்கு தங்கு தடையற்ற இடம் வழங்க வேண்டும் என்றும் நேற்று (14.07.2016) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.


நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள இத்தீர்ப்பு, சமூகநீதிக்கு எதிரானது, வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்புக்கு வழித் திறந்து விடுவது, தமிழ்நாட்டு மாணவர்களைப் புறக்கணிப்பது மற்றும் தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை மறுப்பது ஆகும். எனவே, எல்லா வகையிலும் அநீதியானது.

நரம்பியல், குழந்தை மருத்துவம், இதய மருத்துவம் போன்ற மருத்துவ சிறப்பு உயர் படிப்புகளில் தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட கல்லூரிகளில் மண்ணின் மாணவர்களுக்கு அளித்து வந்த முன்னுரிமையை இத்தீர்ப்பு இரத்து செய்கிறது.

“இது தமிழக மாணவர்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு அல்ல. மாநில மாணவர்களை கைதூக்கி விடுவதற்கான முன்னுரிமை ஏற்பாடுதான். தகுதியான தமிழக மாணவர்கள் இல்லாத போது, அந்த இடத்தில் வெளி மாநிலத்து மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முற்றிலும் வெளி மாணவர்கள் மேற்படிப்பில் தடை செய்யப்படவில்லை” என தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர் எடுத்துக் கூறியதை உச்ச நீதிமன்றம் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

ஏற்கெனவே, மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனைத்திந்திய நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நுழைவுத் தேர்வு ஆங்கிலத்திலும் இந்தியிலும் நடைபெறுவதால், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வடமாநில மாணவர்கள் கூடுதல் வாய்ப்புப் பெறுவார்கள். தமிழ்நாட்டு மாணவர்களைப் பொறுத்தளவில், இந்தி – ஆங்கிலம் இரண்டுமே அயல்மொழிகள். இந்த வகையில், மருத்துவப் பட்டப்படிப்பில் தமிழ்நாட்டிற்குள்ளேயே தமிழ்நாட்டு மாணவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இப்போது வந்துள்ள தீர்ப்பு, மருத்துவ மேல் படிப்பிலும் இதே நிலையை உண்டாக்குகின்றது.

ஒரு மாநில அரசு தனது மாநில மாணவர்களை கைதூக்கி விடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யம் அதிகாரத்தையும் இத்தீர்ப்பு தட்டிப் பறிக்கிறது. மொழிவழி மாநிலம் உருவாக்கிய மாநிலச் சீரமைப்புச் சட்டத்திற்கு இது எதிரானது!

எனவே, தமிழ்நாடு அரசு அநீதியான அத்தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும், மாநில அரசின் அதிகாரத்தையே பறிக்கும் வகையில் உள்ளதால், இச்சிக்கலை அரசமைப்பு ஆயகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT