தர்மபுரி சம்பவத்திற்கு
நீதி விசாரணை வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்
தலைவர்
தோழர் பெ.மணியரசன் அறிக்கை
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளவரசனும், வன்னியர்
வகுப்பைச் சேர்ந்த திவ்யாவும், காதலித்து முறைப்படி
திருமணம செய்து கொண்டார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தர்மபுரி மாவட்டம்
நாயக்கன் கொட்டாய் பகுதியிலுள்ள, நத்தம், அண்ணா நகர்,
கொண்டம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியும், கடப்பாறை, இரும்புத் தடி போன்ற கருவிகளால் வீடுகளைத் தகர்த்தும், வீடுகளில் இருந்த பணம், தங்க நகை ஆகியவற்றைக் கொள்ளையடித்தும் சாதி
வெறியர்கள் அட்டூழியம் புரிந்துள்ளனர்.
அப்பகுதிகளை இன்று(12.11.2012) முற்பகல், தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து,
கிருட்டிணகிரி தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் பெ.ஈசுவரன், த.தே.பொ.க தோழர் வேலாயுதம்,
மகளிர் ஆயம் தோழர் இலட்சுமி, கலையரசன், ஆகியோருடன் சென்று பார்த்தேன்.
நேரில் பார்க்கும் பெர்ழுது நெஞ்சம்
பதறியது. வீடுகளின் குடும்ப அட்டைகள், மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்த
நாசமாகிவிட்டன. இந்த அட்டூழியங்கள், திடீரென்று ஏற்பட்ட ஆவேசத்தினால் நடந்த
நாசவேலைகள் அல்ல, திட்டமிட்டு செயல் படுத்தப்பட்ட அழிவு வேலைகள் என்பதே
பளிச்சென்று புரிந்தது.
நத்தம் என்ற பகுதி வெள்ளாளப்பட்டி
ஊராட்சியைச் சேர்ந்தது. அண்ணா நகர் பகுதி, ஆண்டிஅள்ளி ஊராட்சியைச் சேர்ந்தது. கொண்டம்பட்டி,
தனி ஊராட்சி. நத்தத்திற்கும், கொண்டம்பட்டிக்கும் இடையே மூன்றரை கிலோ மீட்டர்
இடைவெளி இருக்கிறது. மேற்படி காதல் திருமணத்தின் மணமகன் இளவரசன், நத்தம் கிராமத்தைச்
சேர்ந்தவர். அதே போல், திவ்யா நத்தம் கிராமத்தை உள்ளடக்கிய வெள்ளாளப்பட்டியைச்
சேர்ந்தவர்.
இவர்களுக்குத் தொடர்பில்லாத, அண்ணா
நகர் மற்றும் கொண்டம்பட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகள்,
தகர்க்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பகுதியில் உள்ள, தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள்
தாக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது, சாதி ஆதிக்கம் செலுத்த
விரும்பிய சில சக்திகளுக்கு, ஒரு வன்மம் இருந்திருக்கிறது. அந்த வன்மத்தை இந்தக்
காதல் திருமண சிக்கலை ஒரு சாக்காக வைத்து, தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலும்,
இராணுவம், காவல்துறை மற்றும் பல்வேறு தொழில்களில் பணிபுரிகிறார்கள். அவர்களில்
பலர் ஓரளவுக்கு வசதியாக இருக்கிறார்கள். படித்திருக்கிறார்கள். பழைய காலங்களைப்
போல, கூனிக்குறுகி, அடிமை வேலை செய்யும் நிலையில் அவர்கள் இல்லை. ஓரளவு வசதியாக
வீடுகள் பல கட்டி வசித்து வருகிறார்கள்.
இவையெல்லாம், சாதி ஆதிக்கவாதிகளின்
கண்ணை உறுத்தத் தொடங்கின. இரு தரப்பினரும் அவரவர் சாதியை மையமாக கெண்ட அரசியல்
கட்சிகளில் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் பிறர் தயவின்றி தன் காலில்
நிற்பதே, சாதி ஆதிக்கம் செய்ய விரும்பும் சிலருக்கு மன எரிச்சலைத் தருகிறது.
மேற்படி காதல் திருமணம் ஒரு மாதத்திற்கு
முன்பு நடந்துள்ளது. பெண்ணின் தந்தையார் நாகராசன், காவல்துறையில் புகார் கொடுத்து,
காவல்துறையினர் விசாரணை நடத்தி, மணமக்கள் இருவரும் வயது வந்தவர்கள், எனவே இதை
தடுக்க முடியாது, பிரிக்க முடியாது என கூறிவிட்டார்கள்.
இந்நிலையில், பெண்ணின் தகப்பனாரை அவர்
வகுப்பைச் சேர்ந்தவர்கள், எப்படியாவது அந்த திருமணத்தை முறித்து, உன் மகளை அழைத்து
வந்துவிடு என நிர்பந்தித்து இருக்கிறார்கள். அவர்கள் ஊர் பஞ்சாயத்து என்று கூடி, பெண்ணின்
தகப்பனாருக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
அதற்காக பெண்ணின் தரப்பில் 7 பேரும்
மணமகன் தரப்பில் 7 பேரும் தொப்பூரில்
பஞ்சாயத்துப் பேசியுள்ளனர். அப்போதும் அந்தப் பெண், பிரிந்து வர உறுதியாக
மறுத்துவிட்டார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, பெண்ணின் தகப்பனார் தற்கொலை
செய்து கொண்டார். உண்மையில், இந்த தற்கொலைக்கு தூண்டியவர்கள், சாதியத்
தீவிரவாதிகளே ஆவர்.
தற்கொலை செய்து கொண்ட நாகராசனின் பிணத்தை
சாலையில் வைத்துக் கொண்டு, கூட்டத்தைக் கூட்டி நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி
தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளை பெட்ரோல் குண்டு வீசியும், தீ வைத்தும்,
கடப்பாறையில் இடித்தும் தகர்த்துள்ளனர். அதன் சேதங்களை நேரில் பார்க்கும் போது, ஈழத்தில்
சிங்களப்படையினர், தமிழர் குடியிருப்புகளை அழித்தது பற்றி நாம் பேசுகிறோமே, அந்த
நினைவு தான் வந்தது.
அங்கே ஓரு பகையினம் தமிழ்
இனத்தின் மீது தாக்குதல் தொடுத்தது. ஆனால் இங்கே, ஒரே தமிழினத்தைச் சேர்ந்த ஒரு
சாதியினர் ஆதிக்க வெறி கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கியுள்ளனர்.
தமிழர் இன ஒற்றுமையையும் தமிழின
உரிமை மீட்பையும் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் சாதி ஆதிக்கத்தை முற்றிலுமாக
எதிர்க்கிறது. எனவே, தர்மபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி
வெறியர்களால் தாக்கப்பட்டிருப்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாக
கண்டிக்கிறது.
இந்த தீ வைப்பு, வீடுகள் தகர்ப்பு
மற்றும் கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபட்ட அனைவரையும், வன்கொடுமைத் தடுப்புச்
சட்டத்தில் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். அச்சட்டத்தின்படி,
பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்க
வேண்டும். அது மட்டுமின்றி, முழுபாதிப்பு என்று மட்டுமில்லாமல், பாதி பாதிப்பு இருந்தாலும்,
அனைத்து வீடுகளுக்கும் மாற்றாக புதிய வீடுகளை அரசு கட்டித் தர வேண்டும். அத்துடன்
அவர்களுக்கு உடனடியாக அவர்கள் குடும்பம் நடத்துவதற்குப் பொருட்கள் வாங்க நிதி உதவி
வழங்க வேண்டும்.
காவல்துறையினருக்கு, செல்லன்
கொட்டாய் பகுதியில் மேற்படி சாதி மறுப்புத் திருமணத்தையொட்டி, கடந்த 1 மாத காலமாக
அங்கு பதட்டம் இருப்பதும், சாதி மோதலுக்கான வாய்ப்பு இருப்பதும் தெரியும்.
அதற்காகவே, நாயக்கன் கொட்டாய், நத்தம் ஆகிய கிராமங்களில் காவல்துறையினரை
பாதுகாப்புக்கு அமர்த்தி யிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களது வீடுகள் தகர்க்கப்பட்ட
போதும் கூட, ஏற்கெனவே அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவல்துறையினர் இருந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்கள் சிறு
எண்ணிக்கையில் இருந்ததால், ஆயிரக்கணக்கில் வந்தவர்களை தடுக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட
மக்களும் அங்கு காவலில் இருந்த காவல்துறையினரும், மேலதிகாரிகளுக்கு தொலைபேசியில்
சம்பவம் நடப்பதைச் சொல்லி உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறு கேட்டிருக்கிறார்கள். மூன்றரை
மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலைத் தடுக்க, காவல் பட்டாளம் வரவில்லை.
மாவட்டத் தலைநகரம் தர்மபுரி, மிக
அருகாமையில் 10 நிமிடப் பயணத் தொலைவில் இருந்தும் ஏன் வரவில்லை என்ற கேள்வி
எழுகிறது. இதற்கு விடை காண வேண்டும்.
கடந்த சில மாதங்களாக, மிகவும்
பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சங்கத் தலைவர்கள் சாதி மறுப்புத்
திருமணத்திற்கு எதிராக, கொடூரமாகப் பரப்புரை செய்து வருகிறார்கள். தங்கள் சாதிப்
பெண்ணை வேறு சாதியினர் திருமணம் செய்தால் வெட்ட வேண்டும், குத்த வேண்டும் என்று
பேசுகிறார்கள். இப்படி பேசுவது, தண்டனைக்குரியக் குற்றச் செயலாகும். அப்படி
பேசியவர்கள் மீது அரசு குற்றவியல் சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வாறான
பேச்சுகளால்தான், நாய்க்கன்கொட்டாய் பகுதி சம்பவம் நிகழ்ந்ததா என்பதையும் கண்டறிய
வேண்டும்.
இவ்வினாக்களுக்கு விடை காணவும், இது
போன்ற சிக்கல்களுக்கு தீர்வுகள் காணவும் விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்கு உயர்நீதிமன்றத்தில்
பணியிலிருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
தமிழர்கள் காவிரி, முல்லைப்
பெரியாறு, பாலாறு, கட்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை தொடர்ந்து இழந்து
வருகிறார்கள். தமிழ் மீனவர்கள், நடுக்கடலில் கொல்லப்படுகிறார்கள். இந்த இழப்புகள்
அனைத்தும், தமிழ் இனத்தில் பிறந்த அனைத்து சாதியினருக்கும் ஏற்பட்ட இழப்புகள்
தான்.
இப்படிப்பட்ட வேளையில், தமிழர்கள்
ஒற்றுமையாய் இருந்து உரிமைகளை மீட்பதற்குப் போராடுவதற்கு மாறாக, சாதியின்
அடிப்படையில் தங்களுக்குள் அழிவுகளை உண்டாக்கிக் கொள்வது, தன்னழிவுப் பாதையாகும்.
சாதி உணர்ச்சி மேலோங்கிவிட்டால், அது
வெறியாக மாறும். சாதி என்பதே பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு கொண்டது தான்.
தொழில் அடிப்படையில், சமூகப் பிரிவுகளாக இருந்த மக்களை, பிறப்பு அடிப்படையிலான சாதிப்
பிரிவுகளாக வர்ணாசிரம தர்மக் கொள்கைக் கொண்டப் பார்ப்பனியம் மாற்றியது.
பிறப்பின் அடிப்படையிலான உயர்வு
தாழ்வு என்பது தமிழர் நெறிக்கும், அறத்திற்கும் புறம்பானது. அனைத்து சாதிப்
பிரிவுகளிலும் உள்ள, இளைஞர்கள், பெரியவர்கள், சாதியை மறந்து தமிழர்கள் என்ற தங்கள்
இனத்தின் அடையாளத்தை உணர்ந்து, சமத்துவ வாழ்க்கை வாழ, சிறந்த கருத்துகளை பரப்ப வேண்டும்.
பண்பாட்டு மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும். அதே வேளை, குற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின்
முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும்.
மேலும் மேலும் சாதி மோதல்களை
வளர்த்துக கொள்ளாமல், சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்க தமிழ் மக்கள் அனைவரும் முன்வர
வேண்டும என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். நாய்க்கன்
கொட்டை சம்பவங்களுக்கு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென்று தமிழக அரசைக்
கேட்டுக் கொள்கிறேன்.
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
நாள்: 12.11.2012
இடம்: தர்மபுரி
Post a Comment