உடனடிச்செய்திகள்

Monday, November 19, 2012

தமிழக இளைஞர் முன்னணி மாநாட்டில் முடிவு! சனவரி 4 - இல் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம்!

தமிழ்நாட்டு இளைஞர்களை சீரழித்து வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டம், வரும் சனவரி 4 இல் தமிழகமெங்கும் நடைபெறும் என தமிழக இளைஞர் முன்னணியின் ஆறாவது தமிழக மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணியின் ஆறாவது தமிழக மாநாடு நேற்று (17.11.2012) குடந்தையில் எழுச்சியுடன் நடைபெற்றது. காலையில், குடந்தை தாராசுரம் நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டிற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணியின் புதிய கொடியை ஏற்றி வைத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார்.

மாநாட்டை வழிநடத்துவதற்காக, த.இ.மு. தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ரெ.சிவராசு, தமிழக இளைஞர் முன்னணி கோவை பொறுப்பாளர் தோழர் பா.சங்கரவடிவேல், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி ஆகியோர் அடங்கிய தலைமைக்குழு அமைக்கப்பட்டது. தமிழகமெங்கிலிருந்தும் திரண்டு வந்திருந்த தமிழக இளைஞர் முன்னணியின் முன்னணி நிர்வாகிகள் இப்பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் முடிவில், 12 பேர் கொண்ட புதிய நடுவண் குழுவும், நடுவண் குழு நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழக இளைஞர் முன்னணியின் புதிய தலைவராக தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளராக தோழர் க.அருணபாரதி, பொருளாளராக தோழர் பா.தமிழரசன், துணைத் தலைவராக தோழர் செந்தில்குமார், துணைப் பொதுச் செயலாளராக தோழர் ஆ.குபேரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாலை குடந்தை மகாமகக் குளம் அருகில், எழுச்சியுடன் நடைபெற்ற பொது மாநாட்டில், தமிழர்களின் மரபுக் கலைகளான தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. குடந்தை நகர தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் வரவேற்புரை நிகழ்த்த, த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை மாநாட்டிற்குத் தலைமையேற்றார்.

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்த கேரளாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2011 திசம்பா மாதத்தில் தமிழகத்திலுள்ள மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டுப் போராடி சிறை சென்ற தோழர்கள் அனைவரும் நினைவுப் பரிவு வழங்கி பாராட்டப்பட்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய த.இ.மு. புதிய பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழகத்தில் அதிகளவுக் குடியேறி வரும் வெளியாருக்கு எதிராகவும், வாக்காளர் - குடும்ப வரும் திசம்பர் மாதத்தில் தமிழகம் தழுவிய அளவில் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் பரப்புரை நடத்தப்படும் என அறிவித்தார்.

த.இ.மு. புதிய தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழக இளைஞர்களை சீரழிக்கும் மதுக்கடைகளை எதிர்த்து, வரும் சனவரி 4ஆம் நாள் தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை அறிவித்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, முனைவர் த.செயராமன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் ஹரிஹரன், மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

தர்மபுரி தீ வைப்பு நிகழ்வுக்கு நீதி விசாரணை வேண்டும், பரமக்குடி – மதுரை படுகொலைகளில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும், தமிழீழம் குறித்து ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பும், இனப்படுகொலைப் போர்க் குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தவும் ஐ.நா. மன்றம் முன்வர வேண்டும், கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டை நிறைவு செய்து பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உரையாற்றினார். 1938இல் தமிழகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து சிறை சென்று, சிறையிலேயே மாண்ட குடந்தையைச் சேர்ந்த மொழிப் போர் ஈகி தாளமுத்து அவர்களுக்கு குடந்தையிலேயே தமிழக அரசு மணிமண்டபம் எழுப்ப வேண்டும் என்ற மாநாட்டுத் தீர்மானத்தை தானும் வழிமொழிவதாக அறிவித்த தோழர் பெ.மணியரசன்,  “ஈழத்தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இந்தியா பகையினமாகவேக் கருதுகிறது. இதற்கு அடுக்கடுக்கான சான்றுகள் வந்து கொண்டே இருக்கின்றன. 15.11.2012 அன்று தி்ல்லியில் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அரசு சார்பில் பேசிய அதிகாரிகள், கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய பாக்கித் தண்ணிர் 52 டி.எம்.சி. என ஆதாரங்களோடு குறிப்பிட்டார்கள். இந்த கணக்கை பற்றாக்குறைக் காலப் பகிர்வு என்ற திட்டத்தின்படி தமிழக அரசு சொன்னாது. 40 விழுக்காடு பருவமழை கர்நாடகத்தில் பொய்த்துவிட்டது என்றார்கள். தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீர் அளவில், அந்த 40 விழுக்காட்டைக் கழித்துக் கொண்டு பாக்கியைத் தான் தமிழக அரசு அதிகாரிகள் கோரிக்கையாக வைத்தார்கள்.

ஆனால், காவிரி கண்காணிப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும் நடுவண் நிறுவனத்துறைச் செயலாளர் துரு விஜய்சிங், கர்நாடக அணைகளில் எவ்வளவு தண்ணீர் என்ற அளவு தெரியாது, எவ்வளவு தமிழகத்திற்கு திறந்து விட்டார்கள் என்ற அளவும் தெரியாது, எனவே, தமிழக அரசன் 53 டி.எம்.சி. கோரிக்கை பற்றி நாங்கள் எதுவும் முடிவு சொல்ல முடியாது என்று அறிவித்துவிட்டார்.

கடந்த மாதம்தான், இதே துரு விஜய்சிங் தலைமையில் கண்காணிப்புக்குழு அதிகாரிகள், தமிழக - கர்நாடக அணைகளையும் சாகுபடி நிலங்களையும் நேரில் பார்வையிட்டு எவ்வளவு தண்ணீர் இருக்கிறது, எவ்வளவு தண்ணீர் தேவை என்று கணக்கெடுத்துப் போனார்கள். இப்போது எங்களிடம் விவரமில்லை என துரு விஜய்சஙி சொல்வது பச்சைப் பொய். ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கக்கூடிய வஞ்சக செயல்.
வெறும் 4.81 டி.எம்.சி. தண்ணீர் நவம்பர் மாதம் வரை தந்தால் போதும் என்று, கண்காணிப்புக் குழுக் கூறியுள்ளது. இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? அந்த 4.81 டி.எம்.சி.யையும், தர மறுக்கிறது கர்நாடகம்.

நேற்று(16.11.2012), பெங்களுரில் தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டம் நடுவண் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டெ தலைமையில் நடந்தது. தமிழக முதலமைச்சர் செயலலிதா சார்பில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில், செயலலிதாவின் அறிக்கையை அவர் படித்தார். தமிழக முதலமைச்சர் சொல்வதைப் பாருங்கள்.

தமிழ்நாட்டிற்கு, 1076 கிலோ மீட்டர் நீள கடல் உள்ளது. ஆனால், இந்த கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியவில்லை. தெற்கே மீன்பிடிக்கப் போனால், சிங்களப் படை சுட்டுக் கொல்கிறது. வடக்கே ஆந்திரக் கடலோரம் சென்றால், எல்லை தாண்டி வந்துவிட்டதாக ஆந்திரா மீனவர்கள், தமிழக மீனவர்களை கடத்திக் கொண்டு போகிறார்கள். பணயத் தொகை வாங்கிக் கொண்டு தமிழக மீனவர்களை பின்னர் விடுதலை செய்கிறார்கள். இதை தட்டிக் கேட்டு நடுவண் அரசு தடுப்பதில்லை என்று சொல்கிறார் செயலலிதா. இந்தப் பக்கம் தென்மேற்கே கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாப் பகுதிக்கு சென்று விட்டால், அங்கே கேரள மீனவர்கள் தமிழக மீனவர்களைத் தாக்குகிறார்கள். இந்த உண்மைகளை தமிழக முதலமைச்சரே சொல்கிறார்.

இந்தியா ஒரு தேசமா? இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் போய் தொழில் செய்யலாம் என்கிறார்களே? தமிழர்களுக்கு அந்த உரிமை கிடையாதா? தமிழ்நாட்டில் மார்வாடிகளும், குஜராத்தி சேட்டுகளும் மலையாளிகளும், வடநாட்டவரும் புகுந்து, தொழி்ல் வணிகம் அனைத்தையும் கைப்பற்றிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த பாழ்பட்ட தமிழின மீனவர்கள் ஆந்திரக் கேரளப் பகுதிகளிலே போய் மீன்பிடிக்க உரிமையில்லை. புயல் காற்றில் வழி தவறிப் போனாலும் மீனவர்களைத் தாக்குகிறாகள்.

தமிழர்களே, இந்திய அரசு இதை ஏன் தட்டிக் கேட்கவில்லை? இந்தியா தமிழர்களையும், மற்ற இனத்தவரையும் சமமாக கருதவில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

எதிர்காலம் இளைஞர்களுக்குரியது. முதியவர்கள் இளைஞர்களுக்கு உரிமைகளை தக்கவைத்து கையளித்துச் செல்ல வேண்டும். ஆனால், என் போன்றவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் தமிழ்நாட்டிற்கு இருந்த உரிமைகளை, இன்றைய இளைஞர்களுக்குதக் கையளித்துத் தரமுடியாத அவலநிலை உள்ளது. நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது, காவிரி தமிழ்நாட்டில் கரைபுரண்டு ஓடியது. அந்த உரிமை நமக்கு இருந்தது. முல்லைப் பெரியாற்றில் 152 அடி தண்ணீர் தேக்கி, தென் மாவட்டங்களுக்கு பாசன நீர் தர முடிந்தது. கச்சத்தீவு தமிழ்நாட்டில் இருந்தது. மீன்பிடி உரிமை இருந்தது. பாலாற்று உரிமை இருந்தது.

ஆனால், இவையெல்லாம் இன்று இல்லை. சுதந்திர இந்தியா தமிழ்நாட்டிற்கு அளித்த பரிசுகள் இவை தான். இந்த உரிமைகளை மீட்க இளைஞர்கள் களம் காண வேண்டியத் தேவை இருக்கிறது. பெரியவர்களும் இளைஞர்களோடு சேர்ந்து போராட வேண்டியத் தேவை இருக்கிறது. தமிழக இளைஞர் முன்னணி, தமிழ்த் தேசத்தின் அடிமைத் தளையை அறுத்து,  தமிழ்த் தேசக் குடியரசு நிறுவ, தமிழக மரபுரிமைகளை மீட்க உறுதியேற்க வேண்டும்.

தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட இந்த உரிமை இழப்புகள், தமிழ் இனத்தின் அனைவருக்குமான உரிமை இழப்புகள். ஆனால் இந்த உரிமைகளை மீட்கின்ற திசையில் இளைஞர்களை செலுத்தாலமல், தேர்தல் அரசியலில் உள்ள தன்னலக் கட்சிகள் சாதி வெறியைத் தூண்டி விடுகின்றன. தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை மனிதர்கள் அனைவரும் சமம் - தமிழர்கள் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது. சாதி ஒடுக்குமுறையையும், தீண்டாமைக் கொடுமையயும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறவே வெறுக்கிறது; எதிர்க்கிறது. இந்த வேளையில் தமிழ்நாட்டில் சாதியச் சிக்கல்கள் தீவிரமாகி தன்னல சக்திகள் மக்களை பிளவுபடுத்துகிறார்கள். தமிழர்கள் அனைவரும் ஓரினம் - ஒரு குலைக்காய்கள் என்ற உணர்வோடு, சமத்துவமாக, சமூக சமத்துவத்திற்கு, வழிகாட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் இளைஞர்களுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இளைஞர்களுடன் சேர்ந்து மேற்கொள்ளும்! போராடும்” என பேசினார்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழகமெங்கிலுமிருந்து தமிழக இளைஞர் முன்னணித் தோழர்களும், த.தே.பொ.க. தோழர்களும் பெண்களும், பல்வேறு வாகனங்களில் திரண்டு வந்திருந்தனர்.
(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள் : அருணபாரதி, கோபிநாத், ஸ்டாலின்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT