உடனடிச்செய்திகள்

Wednesday, November 14, 2012

கிருட்டிணகிரியில் எழுச்சியுடன் நடந்த தமிழகப் பெருவிழா


கிருட்டிணகிரியில் எழுச்சியுடன் நடந்த தமிழகப் பெருவிழா


1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைக்கப்பட்ட நாள். தமிழ்நாடு இழந்த பகுதிகளை மீட்கவும், தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதியேற்கும் வகையில் அந்நாளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகப் பெருவிழாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

இவ்வாண்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழக இளைஞர் முன்னணியும் இணைந்து, 11.11.2012 ஞாயிறு கிருட்டிணகிரியில் பேரணி, கலை நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளோடு இவ்விழாவை நடத்தின.

11.11.2012 அன்று மாலை 5.30 மணியளவில், மொரப்பூர் பாரதி கிராமியக் கலைக்குழுவினரின் சுழன்றடிக்கும் தப்பாட்டத்துடன் தமிழர் எழுச்சிப் பேரணி தொடங்கியது.தோழர் வ.பாண்டியன் பேரணிக்குத் தலைமையேற்றார். ஆசிரியர் சி.மாணிக்கம் தொடங்கி வைத்தார்.திரளான பெண்களும், குழந்தைகளும் பேரணியில் பங்கேற்றனர்.

மாலை 6 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பெ.ஈசுவரன் தலைமையேற்றார். த.இ.மு. துணை அமைப்பாளர் தோழர் இரா.விஜய் வரவேற்புரையாற்றினார்.மேடையில் தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், மான்கொம்பு, கோலாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “சந்தனக்காடு” இயக்குநர் வ.கௌதமன், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் தோழர் இரா.முருகேசன் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்தினர்.

கூடங்குளம் அணுவுலையை இழுத்து மூட வேண்டும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும், தமிழக மின்வெட்டு தீர நெய்வேலி மின்சாரம் முழுமையும் தமிழகத்திற்கே கேட்டுப்பெற வேண்டும், கிருட்டிணகிரி மாவட்டத்தின் நீர் ஆதாரமான தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கன்னட அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை தோழர்கள் ம.கலையரசன், பெ.செகதீசுவரி, ஜோ.சீனிவாசன், செ.சின்ராசு ஆகியோர் முன்மொழிந்தனர். த.இ.மு. காட்டூர் கிளைச் செயலாளர் தோழர் இரா.குணசேகரன் நன்றி நவின்றார்.

இந்நிகழ்வில், திரளான த.தே.பொ.க. – த.இ.மு. தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : ஆனந்தன்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT