நவம்பர் 17 – குடந்தையில்
தமிழக இளைஞர் முன்னணி
ஆறாவது தமிழக மாநாடு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தோழமை அமைப்பான தமிழக இளைஞர் முன்னணியின் ஆறாவது தமிழக மாநாடு வரும் நவம்பர் 17 அன்று குடந்தையில்நடைபெறுகின்றது.
இம்மாநாட்டு நோக்கத்தை விளக்கி, தமிழக இளைஞர் முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்ட வீடு காலியாகக் கிடப்பது போல், தமிழ்நாடு காலியாகக் கிடக்கிறது.
காவிரியைக் காணோம்; முல்லைப் பெரியாற்றைக் காணோம்; பாலாற்றைக் காணோம்; கச்சத்தீவைக் காணோம்; கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களைக் காணோம்; கரை சேர்ந்த பிணங்களின் எண்ணிக்கை இதுவரை அறு நூறு.
பள்ளிகளிலும் பல்கலைக் கழங்களிலும் தமிழைக் காணோம்; தமிழ்ப் பிள்ளைகளின் அமுதவாயில் அம்மாவைக் காணோம்; அப்பாவைக் காணோம்.
தமிழ் ஈழத்தில் பல இலட்சம் தமிழர்களையே காணோம்; இரண்டு இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். பத்து இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
இந்தக் கொடுமைகளை இன்னும் அடுக்கினால் நெஞ்சு வெடித்து விடும்.
கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் பொருள்கள் போயிருக்கும், வீடு மிஞ்சியிருக்கும். இங்கு அதுவுமில்லை. தமிழ்நாட்டிற்குள் மார்வாடி - குசராத்தி சேட்டுகள்,மலையாளிகள், வடநாட்டவர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என அயல் இனத்தார் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். தொழில், வணிகம்,வேலை வாய்ப்பு, கல்வி அனைத்திலும் அயலார் ஆக்கிரமிப்பு; வெளியார் வேட்டை!
மனித குலத்தை அழிக்கும் அணு உலைக் கூடங்களை தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறது இந்தியா! தமிழ் இளையோரே, தமிழகம் நமக்குத் தாயகமாக மிஞ்சுமா என்பதும் வினாக்குறியாக உள்ளது.
பெருந்தொழில்களையும், பெருவணிகங்களையும் கைப்பற்றிக் கொண்ட வடநாட்டு, பன்னாட்டு முதலாளிகள் இப்போது சிறு வணிகங்களையும் சில்லறைக் கடைகளையும் விழுங்கிட வரப்போகிறார்கள். இதற்கான சட்டத்தை இந்தியா இயற்றியுள்ளது. அன்னையின் மடியில் அனாதை ஆன குழந்தையைப் போல்,தமிழ் மண்ணில் தமிழர்கள் அகதிகளாகும் ஆபத்துகளை இந்தியா ஏவிவிட்டுள்ளது.
நம்மை அடிமை கொண்ட வெள்ளையன் ஆட்சியில் ஆற்றுநீர் உரிமை, கடல் உரிமை, கச்சத்தீவு உரிமை அனைத்தும் நம்மிடம் இருந்தன. நம்மை விடுதலை செய்ததாகச் சொன்ன தில்லியின் ஆட்சியில் இவை அனைத்தும் பறிபோய்விட்டன.
மாறி மாறி வரும் தமிழக ஆட்சியாளர்கள் நமது உரிமைகளைக் காப்பவர்களாக இல்லை. தமிழக அரசியல் காட்டிக் கொடுக்கும் கங்காணி அரசியலாகவே இருக்கிறது. இலவசங்களையும் மதுவையும் வழங்கித் தமிழர்களை நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்தி வருகிறது கங்காணி அரசியல். உள் நோயாகச் சாதி,தமிழினத்தை அரித்து வருகிறது. அந்நோயை நீக்குவதற்கு மாறாக அதைத் தன்னலத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறது கங்காணி அரசியல்.
சனநாயகப் போர்வைக்குள் சர்வாதிகாரத் தலைவர்கள்; பரம்பரைத் தலைமைகள்! கையூட்டும் ஊழலும் கரைபுரண்டு ஓடும் சாக்கடையாக அரசியல்! இவை தில்லிக்கும் தமிழகத்திற்கும் பொதுவானவை. இப்போது புதிய இலட்சியப் பாதை தேவை. பணம், பதவி, விளம்பரம், மூன்றுக்கும் ஆசைப்படாத இளைஞர்களின் அணி வகுப்பு தேவை.
இனியும் இளையோர் ஒதுங்கியிருந்தால் தமிழர்களின் இடுப்புத் துணியும் பறிபோகும். மனித மாண்புகள் புதையுண்டு போகும். எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்வோம்.
சிந்தனை ஆற்றலிலும், செயல் வீரத்திலும், செய்யும் ஈகத்திலும் யாருக்கும் பின் தங்கியவர்கள் அல்லர் தமிழர்கள்.
1965-இல் திணிக்கப்பட்ட இந்தியைத் தடுக்க, தாய்த் தமிழைக் காக்கத் தமிழகத்தைச் சமர்க்களமாக்கியவர்கள் தமிழக மாணவர்களும் இளைஞர்களும்! காங்கிரசு ஆட்சி நடத்திய காட்டுமிராண்டித் துப்பாக்கிச் சூட்டிற்கு முதல் பலியானவன் மாணவன் இராசேந்திரன். முந்நூறு பேர்களுக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இப்போது, “தமிழ்த் தேசியம்” என்ற புரட்சி முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. இழந்துள்ள அனைத்து உரிமைகளையும் அரசுரிமையையும் மீட்க தமிழ்த் தேசியப் பதாகையின் கீழ் படை வரிசையாய் அணி வகுப்போம். வாருங்கள் குடந்தைக்கு; நமக்கான வரலாற்றை உருவாக்குவோம்!”
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17.11.2012 அன்று காலையிலிருந்து மாலை வரை, தமிழக இளைஞர் முன்னணியின் அமைப்புச் செயல்பாடுகள் குறித்தான பேராளர் கூட்டமும், மாலை 5 மணியளவில்குடந்தை மகாமகம் குளம் அருகில் பொது மாநாடும் நடைபெறுகின்றது.
மாநாட்டிற்கு, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, முனைவர் த.செயராமன்,மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, தமிழக இளைஞர் முன்னணி மையக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஆ.குபேரன், பா.சங்கர் உள்ளிட்டோர்சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)
Post a Comment