உடனடிச்செய்திகள்

Wednesday, November 21, 2012

மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம்!


மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம்!


மருத்துவர் தெய்வநாயகம் அவாகள் மரணமடைந்தது மிகப்பெரும் வேதனையளிக்கிறது. கொடிய எய்ட்சு நோயிலிருந்தும், நெஞ்சக நோய்களிலிருந்தும் பலரின் உயிரைப் பாதுகாத்த மக்கள் மருத்துவர் தெய்வநாயகம் ஆவார்.

வெளிநாடுகளில் ஆங்கில மருத்துவத்துறையில் உயர்க்கல்விக் கற்று பொறுப்புகள் வகித்த அவர், சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகறியச் செய்தார். இனியத் தமிழில் பேசுவதில் மதிப்பும் மகிழ்ச்சியும் கொண்டவர் அவர். ஒரு துடிப்புள்ளத் தமிழ்த் தேசியராக வாழ்ந்தார். தமிழின உணர்வுக் கருத்துகளைப் பரப்பினார். ஈழத்தமிழர்களுக்கு துணையாய் செயல்பட்டார்.

இந்திய அரசின் துணையோடு, சி்ங்கள இனவெறி அரசு, தமிழின அழிப்புப் போர் நடத்திய 2008-2009ஆம் ஆண்டுகளில், போர் நிறுத்தம் கோரிய, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தோ, பொதுக் கூட்டங்கள் நடத்த சென்னையில் தி.மு.க. அனுமதி மறுத்தது. அப்போது, தனது தலைமையிலுள்ள தியாகராயர் நகர் செ.தே.நாயகம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டங்களையும், தமிழின உணர்வுக் கூட்டங்களையும் நடத்த அனுமதி தந்தார். இந்த வகையில் தமிழினத்திற்கு ஆதரவான கருத்துப் பரப்பலுக்குப் பெருந்துணையாய் நின்றார்.

மருத்துவர் தெய்வநாயகம் அவர்களுடைய இறப்பு, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமின்றி ஈழத்தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். மருத்துவர் சி.என்.தெய்வநாயகம் அவர்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து துயருற்றிருக்கும் அவரது இல்லாத்தாருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை காலை 10 மணியளவில், சென்னை தியாகராயர் நகர், 101 - மகாலட்சுமி தெருவிலுள்ள (ரெங்கநாதன் தெருவுக்கு எதிரில்) அவரது இல்லத்திலிருந்து, அன்னாரது இறுதி வணக்க நிகழ்வு நடைபெறுகின்றது. அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT