“புலவர் இறைக்குருவனார் கருத்தியல் பங்களிப்பைக்
கற்றும் போற்றியும் செயல்படுவோம்!”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை
தனித்தமிழ் இயக்கத்தின் சமகாலப் பேரறிஞரும், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழிவந்து உலகத் தமிழ்க் கழகத்தின் பொறுப்பேற்று செயல் பட்டவரும், ‘தென்மொழி’ ஆசிரியருமாகிய ‘திருக்குறள்மணி’ புலவர் இறைக்குருவனார் அவர்கள், 23.11.2012 அன்று பின்னிரவில், தஞ்சையில் மாரடைப்பால் திடீரென்று காலமான துயர நிகழ்வு நெஞ்சத்தை வாட்டுகிறது.
பட்டுக்கோட்டையில் தமிழர் முறைத் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு இரவு சென்னைக்கு திரும்பும் பொழுது நெஞ்சுவலி ஏற்பட்டு, தஞ்சையில் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டார் அவர். நெஞ்சுவலியால் அவர் துடிக்கும் செய்தி பெருஞ்சித்தரனார் அவர்களின் மூத்த மகன் பூங்குன்றன் வழியாக எனக்கு வந்தது.
உடனடியாக தமிழ் அன்பர்கள் பேராசிரியர் வி.பாரி, பொறியாளர் கென்னடி, இ.தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர் நல்லதுரை, முனைவர் இளமுருகன் மற்றும், தோழர்களுடன் இறைக்குருவனார் அவர்கள் இருக்குமிடத்திற்கு சென்றோம். அவரை, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தோம்.
மருத்துவர்கள் ஆய்வுசெய்து விட்டு, இறைக்குருவனார் இறந்துவிட்டார் எனக் கூறினார்கள். அதன்பிறகு, மருத்துவ வாகனத்தில், திருச்சித் தோழர் ஈகவரசன் பாதுகாப்பில் இறைக்குருவனாரை சென்னைக்கு அனுப்பிவிட்டோம்.
புலவர் இறைக்குருவனார் அவர்கள், தனித்தமிழ்க் கொள்கையை, தமிழியக் கொள்கையை தம் குடும்பத்தினர் அனைவருக்கும் உரியதாக்கி எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர். சாதி மறுப்புக் கொள்கையை தாமும் செயல்படுத்தி தம் மக்களையும் செயல்படுத்தச் செய்தவர். சிறந்த தமிழர் மரபுச் சிந்தனையாளர். அவரது திடீர் மறைவு தமிழ்க் கூறும் நல்லுலகத்திற்கு பேரிழப்பாகும்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, ஐயா இறைக்குருவனார் அவர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து துடிக்கும், அவர் துணைவியார் அன்புச் சகோதரி பொற்கொடி அவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாளை(25.11.2012) காலை 10 மணிக்கு, சென்னை மேடவாக்கம் கூட்டுச் சாலையில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவிடம் அமைந்துள்ள தமிழ்க்களத்தில் நடைபெறும், இறுதி நிகழ்ச்சியில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
தனித்தமிழை வளர்க்க, தமிழ்த் தேசியத்தை வளர்க்க திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் வழங்கியப் பங்களிப்புகளை கற்றும், போற்றியும், தொடர்ந்து செயல்படுவோம். அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
நாள்: 24.11.2012
இடம்: சென்னை
Post a Comment