தமிழ் இந்து கட்டுரை:
நாயரைக் காவிய நாயகனாக்கி
நடேசனாரை மறைத்தது ஏன்?
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் கட்டுரை!
“தமிழ் இந்து” இதழில் 17.07.2020 அன்று கே.கே. மகேஷ் எழுதிய “டி.எம். நாயர் : திராவிட சிந்தாந்த முன்னோடி” என்ற கட்டுரை வந்துள்ளது. டி.எம். நாயர் அவர்கள் நினைவுகூரத்தக்க – பாராட்டத்தக்க நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவர். பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தும் பிராமணரல்லாதார் வகுப்புரிமையைக் கோரியும் இயங்கிய அறிவார்ந்த தலைவர்களுள் ஒருவர்.
ஆனால், கட்டுரையாளர் டி.எம். நாயர் அவர்களை முன்வைத்து தமது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, திராவிடச் சவாரி செய்துள்ளார். அதுபற்றி மட்டும் எனது திறனாய்வை முன்வைத்துக் கொள்கிறேன்.
“ஆனாலும் அவரால் (நாயரால்) அன்றைய காங்கிரசுக் கட்சிக்குள் இருந்த சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் சமமதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், காங்கிரசை விட்டு வெளியேறி, தியாகராயருடன் இணைந்து 1916இல் “தென்னிந்திய நல உரிமைச் சங்க”த்தைத் தொடங்கினார். இந்த அமைப்புதான் இன்றையத் திராவிடக் கட்சிகளின் முன்னோடி” என்கிறார் கே.கே. மகேஷ்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை முன்மொழிந்த மூலவர்கள் மூவர். அவர்கள் நடேச முதலியார், பிட்டி தியாகராயர், டி.எம். நாயர்!
பிட்டி தியாகராயரும், டி.எம். நாயரும் காங்கிரசுக்காரர்கள். இருவரும் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள். இருவரும் பிராமண ஆதிக்க எதிர்ப்பு மற்றும் வகுப்புரிமைக் கோரிக்கையில் ஒத்த கருத்துடையோர். ஆனால், இருவருக்குமிடையே இணக்கமில்லை. சேர்ந்து செயல்படும் நட்பு இல்லை.
அக்காலத்தில், சென்னை மாநிலக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கும் பிராமணரல்லாத மாணவர்களை வரவழைத்துப் பாராட்டி ஊக்கப்படுத்துவது, அரசுப் பணியில் உள்ள பிராமணரல்லாத அலுவலர்களை அழைத்துப் பாராட்டி ஊக்கப்படுத்துவது போன்ற பணிகளை ஒரு மருத்துவர் சென்னையில் தொடர்ச்சியாகச் செய்து வந்தார். அவர்தாம் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் வாழ்ந்து வந்த நடேச முதலியார். பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்காக 1912இல் “மெட்ராஸ் யுனைடெட் லீக்” என்ற அமைப்பை உருவாக்கினார் நடேசனார். மறு ஆண்டே 1913-இல் நடந்த பேரவைக் கூட்டத்தில் அதைத் “திராவிட சங்கம்” (Dravidian Association) என்று நடேசனார் பெயர் மாற்றினார்.
இப்படிச் செயல்பட்டு வந்த நடேசனார்தாம் – பிராமண ஆதிக்க எதிர்ப்பில் ஒத்த கருத்தும் நடைமுறையில் எதிரும்புதிருமான பிணக்கும் கொண்டிருந்த பிட்டி தியாகராயரையும், டி.எம். நாயரையும் அணுகி இருவரையும் இணக்கப்படுத்தினார். இம்மூவரும் சேர்ந்துதான் வகுப்புரிமை நோக்கத்திற்கான அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டனர். இம்மூவரின் அழைப்பின் பேரில்தான் 20.11.1916 அன்று சென்னையில் முக்கியப் பிரமுகர்களும் உணர்வாளர்களும் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. கலந்து கொண்டோரில் 26 பிரமுகர்கள் பெயர் பதிவாகியுள்ளது. மேற்படி மூவருடன் திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், திவான் பகதூர் பி. இராமராய நிங்கார், இராவ் பகதூர் எம்.சி. ராஜா, டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப், ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை, இராவ் பகதூர் டி. எத்திராஜூலு முதலியார், ஆர்க்காடு ஏ. இராமசாமி முதலியார், எஸ். முத்தையா முதலியார் உட்பட 26 பெயர்கள் உள்ளன.
இக்கூட்டத்தில் தான் 20.11.1916 அன்று தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி அமைக்கப்பட்டது. “தியாகராயருடன் இணைந்து டி.எம். நாயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கினார்” என்று கே.கே. மகேஷ் எழுதியுள்ளார். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நிறுவிட முன்முயற்சி எடுத்த மூலவரில் நடேசனார் முதன்மையானவர் என்றே கூற வேண்டும். அப்படிக் கூறாவிட்டாலும் அம்மூவரில் ஒருவராக நடேசனாரைக் கூறியிருக்கலாம் அல்லவா? கே.கே. மகேஷ் நடேசனார் பெயரைக் குறிப்பிடாதது ஏன்? அவர் தமிழ் இனத்தில் பிறந்ததால் கட்டுரையாளர்க்கு ஒவ்வாமை ஏற்பட்டு விட்டதோ?
அதேபோல், இடஒதுக்கீட்டிற்கான வகுப்புவாரி ஆணை (கம்யூனல் ஜி.ஓ.) முதல் முதலாக செயல்படுத்தப்பட்டது. 1928இல் செயல்படுத்தப்பட்டதில் டி.எம். நாயரின் எண்ணமே அது என்கிறார் கட்டுரையாளர். இந்த இடத்திலும் இட ஒதுக்கீட்டிற்காக டி.எம். நாயர் உழைத்ததை நான் மறுக்கவில்லை. மாறாகப் பாராட்டுகிறேன். ஆனால், டி.எம். நாயரால் மட்டுமே சிந்திக்கப்பட்டு, முன்வைக்கப்பட்ட திட்டம் வகுப்புவாரி ஒதுக்கீடு என்பதுபோல் கட்டுரையாளர் கதை கட்டுவது ஏன்? வகுப்புவாரி இட ஒதுக்கீடு திட்டத்தை முன்வைத்த – அதை அன்றைய சென்னை மாகாணத்தில் முதல் முதலாக செயல்படுத்திய தமிழர்களின் பெயர்களைக் கட்டுரையாளர் மறைப்பதேன்?
1928ஆம் ஆண்டு முதல் முதலாக வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணையின் ஒரு பகுதியைச் சென்னை மாகாணத்தில் செயல்படுத்தியது சுப்பராயன் என்ற தமிழரை முதலமைச்சராகக் கொண்ட சுயேச்சை அமைச்சரவை. அப்போது நீதிக்கட்சி ஆட்சியில் இல்லை! அந்த அமைச்சரவையில் எஸ். முத்தையா முதலியார் ஓர் அமைச்சர். அவர்தாம் தமது பத்திரப் பதிவுத்துறையில் முதல் முதலாக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினார். முத்தையா முதலியாரும் தமிழர். இவர் 20.11.1916 அன்று சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டவர்.
வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை - நீதிக்கட்சி தொடங்கப்படும் முன்பே -பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், நடேச முதலியார் போன்றோர் குழந்தைப் பருவத்தில் இருந்தபோதே, பாதிக்கப்பட்ட வகுப்புகளில் பிறந்த அறிவாளிகளால் முன்வைக்கப்பட்டது.
அக்கோரிக்கைகளைப் பரிசீலித்துத்தான் ஆங்கிலேய அரசும் அதிகாரிகளும் இட ஒதுக்கீட்டிற்கான முன்னெடுப்புகளை அக்காலத்தில் செய்தார்கள். சென்னை மாகாண ஆங்கிலேய அரசின் வருவாய் வாரியம் (Revenue Board) 1854ஆம் ஆண்டே ஒரு நிலை ஆணை வெளியிட்டது.
நிலை ஆணை எண் : 128/2 பின்வருமாறு கூறியது :
“மாவட்ட அளவிலான அலுவலர்கள் நியமனத்தில் செல்வாக்குள்ள சில குடும்பங்களுக்கு ஏகபோக உரிமையாக ஆகிவிடாமல் மாவட்ட ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மையாக – (அதிகமாக) உள்ள சாதிகளுக்கு வேலைகளைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்”.
ஆனால், இந்த ஆணை சரிவரக் கடைபிடிக்கப்படவில்லை.
1871-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கண்காணிப்பாளராக இருந்த டபுள்யு. ஆர். கார்னிஷ், “நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்ப்பனக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையான கொள்கை - அரசு அலுவலர்களில் பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு கட்டுவதாகவும், பார்ப்பனரல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவல்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்; எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியத்துவம் தருவதாக இருக்கக் கூடாது”.
- Report on the Census of Madras Presidency, 1871. Vol – I, Page 197.
இம்மேற்கோள் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் “வகுப்புவாரி வரலாறு” – மூன்றாம் பதிப்பு, 2000 – நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
இட ஒதுக்கீட்டிற்கான விதை வெள்ளையராட்சியிலேயே ஊன்றப்பட்டது. அது நீதிக்கட்சியின் புதிய கண்டுபிடிப்பன்று. வகுப்புவாரி உரிமையை முதன்மைப்படுத்தி நீதிக்கட்சித் திட்டம் வகுத்ததற்குப் பாராட்டலாம்; அவ்வளவே! அதற்கு மேல் ஆதியும் அந்தமும் நீயே என்று நீதிக்கட்சிக்குப் பாசுரம் பாட வேண்டியதில்லை.
சென்னை மாகாணத்திற்கு வெளியே மராட்டியத்தின் ஒரு பகுதியில் மன்னர் சாகு மகாராசா 1901-இல் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கினார். அதன்பிறகு, 1920க்கு சற்றுமுன் திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதேபோல் மைசூர் மகாராசா அரசிலும் வகுப்பு அடிப்படையில் இ்ட ஒதுக்கீடு அக்காலகட்டத்தில் வழங்கிட ஏற்பாடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இவையெல்லாம் காட்டுவதென்ன? பிராமண ஆதிக்கத்தால் வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்ட பிராமணரல்லாதார்க்கு வகுப்புரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் 19ஆம் நூற்றாண்டில் வெள்ளை அதிகாரிகளால் முன்மொழியப்பட்டது; அதன்பின்னர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் – நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்னரும், அது ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சென்னை மாகாணத்திற்கு வெளியே சமஸ்தான அரசுகளில் இட ஒதுக்கீடு பேசப்பட்டது; வழங்கப்பட்டது.
வகுப்புவாரி இட ஒதுக்கீடு, கருக்கொண்டது, உருக்கொண்டது எல்லாமே – நீதிக்கட்சியினால் மட்டுமே என்பதும், அந்த நீதிக்கட்சிதான் திராவிடக் கட்சியின் தாய்க்கட்சி என்பதும் மாய்மாலம்!
நீதிக்கட்சி – திராவிடக் கட்சியா?
-------------------------- -------------------------- -
தென்னிந்திய நல உரிமைச் சங்கத் தொடக்க மாநாட்டில், புதிய அமைப்பின் பெயரில் “திராவிடர்” என்ற சொல் இருக்க வேண்டும் என்று சிலர் கூறியபோது, அது கூடாது என்று கூறித் தவிர்த்துவிட்டுத்தான் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற பெயரைச் சூட்டினார்கள்.
நடேச முதலியார் (1913-லேயே) திராவிடர் சங்கம் (Dravidian League) என்ற பெயரைத் தமது அமைப்பிற்கு வைத்திருந்தாலும் பிட்டி தியாகராயர் உள்ளிட்ட பெரும்பாலோர் அப்பெயரை ஏற்கவில்லை. எனவேதான் “தென்னிந்தியா” என்ற தலைப்பில் தங்கள் அமைப்பிற்குப் பெயர் சூட்டினர்.
ஆந்திரத் தெலுங்கர்கள் தங்களின் புதிய கட்சிக்காகத் தொடங்கிய தெலுங்கு இதழின் பெயர் ஆந்திரப்பிரகாசிகா (ஆந்திர ஒளி); கட்சித் தலைமை தொடங்கிய ஆங்கில இதழின் பெயர் ஜஸ்ட்டிஸ் (நீதி). (இதன் பெயரில்தான் பின்னர் கட்சி அழைக்கப்பட்டது). ஆனால், தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் தமிழ்நாட்டுக் கிளை தொடங்கிய இதழின் பெயர் “திராவிடன்!” இப்பொழுதாவது, புரிகிறதா தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் திராவிடக் குழப்பத்தை!
இந்தத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்தான் (நீதிக்கட்சிதான்) திராவிடத்தின் தாய்க் கட்சியா?
அலுவல்களில் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி பிராமணிய வர்ணாசிரமத்தையோ, சமூகத்தில் நிலவும் பிராமணிய ஆதிக்கத்தையோ எதிர்க்கவில்லை. இதைப் பெரியாரே கூறுகிறார். திருவரங்கம் நகராட்சி கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்ட அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர்க்கு (இராமராய நிங்கார்க்கு) பிராமணர்கள் சமற்கிருதத்திலேயே அச்சிடப்பட்ட வரவேற்பு மடலை வாசித்துக் கொடுத்தனர். நன்றி தெரிவித்துப் பேசிய பனகல் அரசர் சமற்கிருதத்திலேயே பேசினார் என்பதைக் கண்டித்துப் பெரியார் எழுதினார். பனகல் அரசர் பூணூல் போட்டிருந்தார் என்ற விமர்சனமும் உண்டு.
பெரியார் 1919இல் அரசியலில் நுழைகிறார். நேரடியாகக் காங்கிரசில் சேர்கிறார். அவர் நீதிக்கட்சியில் சேரவில்லை. 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார். அப்போதும் அவர் நீதிக்கட்சியில் சேரவில்லை. தனி அமைப்புத் தொடங்கினார். பிறகு எப்படி நீதிக்கட்சி – திராவிடர் கழகத்தின் தாயாகும்? திராவிடமே ஒரு புனைவு! திராவிடக் காதலர்களின் புனைவோ கொஞ்ச நஞ்சமல்ல!
தொடங்கப்பட்டு மிகக்குறுகிய காலத்திலேயே நீதிக்கட்சி 1920இல் ஆட்சியைக் கைப்பற்றியது என்று கே.கே. மகேஷ் களிப்பெய்துகிறார். காரணம் என்ன? காங்கிரசுக் கட்சி தேர்தலில் பங்கெடுக்காததுதான்! வேறு போட்டிக் கட்சி இல்லை!
1937இல் காங்கிரசுக் கட்சி முதல் முதலாகத் தேர்தலில் போட்டியிட்டது. நீதிக்கட்சி காணாமல் போய்விட்டது. நீதிக்கட்சிக்குக் காங்கிரசு சாவுமணி அடித்துவிட்டது என்றவுடன், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று நீதிக்கட்சியின் தலைமையில் இருந்த ஆந்திரத்து சமீன்தார்களும் கனதனவான்களும் ஓடி விட்டனர். இந்தத் தலைமையை யாரிடமாவது ஒப்படைத்துவிடுவோம் என்று தேடி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் இருந்த பெரியாரை இவர்கள் தலைவராகத் “தேர்ந்தெடுத்தனர்”. அந்தக் கனவான்கள் நீதிக்கட்சிக் கூடாரத்தைக் காலி செய்தார்கள். பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஏற்பட்ட இணைப்பு ஒரு விபத்து போல் ஏற்பட்டதுதான்.
பெரியார் அக்கட்சியின் பெயரை நீக்கிவிட்டார். தமது சுயமரியாதை இயக்கத்திற்குப் பின்னர் “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றினார்.
திராவிட விரிவாக்க ஆசை
-------------------------- ------------------
டி.எம் நாயர் – மாபெரும் மக்கள் தலைவராக விளங்கியவர் என்பதுபோல் சித்தரிக்க முயல்கிறார் கே.கே. மகேஷ்.
“ஒரு மலையாளியான டி.எம். நாயர், அன்றைய சென்னை மாகாணம் பிரதிபலித்த தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளச் சமூகங்களின் கூட்டுச் சக்தியாகவே நீதிக்கட்சியைக் கனவு கண்டார். பிற்பாடு, “திராவிட நாடு” முழக்கம் வரை சென்ற திராவிட இயக்கத்தின் வரையறையும், தென்னிந்தியச் சமூகங்களின் புள்ளியில் சந்திப்பவை. நாயர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் என்னவாகி இருக்கலாம்? திராவிட இயக்கம் குறைந்தபட்சம் தென்னிந்தியா தழுவிய அமைப்பாகக் கூட விரிவடைந்திருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற புள்ளியிலிருந்தும் கூட, அது அற்றுப் போய்விடவில்லை என்பதே முக்கியமான செய்தி. இதற்குக் காரணம் இந்த மண்ணின் இயல்போடு இணைந்த ஒரு அரசியலை அவர் அடையாளம் கண்டார். அந்த வகையில் இந்திய அரசியலின் முக்கியமான தொலைநோக்கர்களில் ஒருவராக அவர் ஆகிறார்”.
மேலே கண்டது கே.கே. மகேஷின் முடிவுரை.
டி.எம். நாயர் குறைந்த அகவையில் இறந்தது துயராமனது. ஆனால் அவர் கூடுதல் ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தெலுங்கு, கன்னட, மலையாள மாநிலங்களிலும் திராவிடக் கட்சி ஓங்கி வளர்ந்து செழித்திருக்கலாம் என்று கே.கே. மகேஷ் கதை சொல்வதுதான் முரண்பாடு!
பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் அவர்கள் கூறிய மற்ற மூன்று திராவிட மாநிலங்களில் திராவிட இயக்கத்தை வளர்க்க முடியவில்லை. ஆனால் நாயர் இருந்திருந்தால் அதைச் சாதித்திருப்பார் என்று கூறுகிறார் கட்டுரையாளர்.
நீதிக்கட்சி தொடங்கப்பட்டவுடன் – அதற்கென ஆந்திரத்திற்கு தெலுங்கில் ஆந்திரப் பிரகாசிகா ஏடும், தமிழில் திராவிடன் ஏடும் தொடங்கப்பட்டன. நாயர் உயிரோடு இருந்த காலத்திலேயே அவரது தாய்மொழியான மலையாளத்தில் ஏன் இயக்க ஏடு தொடங்கவில்லை? கேரளத்தில் படிக்க ஆளில்லை! அதுதான் காரணம்!
நாயர் விட்டுச் சென்ற புள்ளியிலிருந்து தொடங்கி தென்னிந்தியா முழுவதும் திராவிட இயக்கத்தைக் கொண்டு போகலாம் என்கிறார் மகேஷ். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமைகளைப் பறித்துவரும் மற்ற மாநிலங்களில் போய் அவர்கள் மொழிகளில் இந்த “அறிவுரையை” மகேஷ் போன்றவர்கள் பரப்ப வேண்டும்; தமிழ்நாடு இவ்வளவு காலமாகத் திராவிடத்தைச் சுமந்ததுபோதும்! அது மற்ற மாநிலங்களுக்குப் போகட்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment