சிந்தனைத் தளத்தில்
கோவை ஞானி என்றும் வாழ்வார்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சிந்தனையாளர் தோழர் கோவை ஞானி அவர்கள் காலமான செய்தி பெரும் துயரமளிக்கிறது. கொரோனா முடக்கம் தடுப்பதால், நேரில் சென்று கோவை ஞானி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த முடியவில்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கோவை மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் அவர்களும், மாநகரக் குழு உறுப்பினர் தோழர் திருவள்ளுவன் அவர்களும் நேரில் சென்று கோவை ஞானி அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
நாங்கள் தனி இயக்கம் கண்டு, தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்த நிலையில் 1990களின் தொடக்கத்தில் கோவை ஞானி அவர்களோடு எனக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அதற்குமுன் வானம்பாடி கவிஞர்களின் வரிசையில் ஞானி அவர்களை அறிந்திருந்தேன்.
சிறந்த மார்க்சியரான தோழர் ஞானி அவர்கள், வறட்டுத்தனமாக மார்க்சியத்தைப் பார்க்காமல் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மலரச் செய்வதில் பெரும் சிந்தனை உழைப்பு செய்தவர். தமிழ்த்தேசியத்தை முழுமையாக ஏற்று, அது மார்க்சியத்திற்கு இசைவானது என்று பல உரைகள் நிகழ்த்தியுள்ளார்; கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்பது, தமிழ்த்தேசியம் குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு ஆளுமைகளை அழைத்து கோவையில் அடுத்தடுத்து சொற்பொழிவாற்ற வைத்தது. பின்னர், அச்சொற்பொழிவுகளையெல்லாம் எழுத்து வடிவில் தொகுத்து, “தமிழ்த்தேசியப் பேருரைகள்” என்று ஒரு பெரும் நூலை வெளியிட்டார். அந்தச் சொற்பொழிவுகளில் ஒருநாள் என்னையும் அழைத்துப் பேச வைத்தார்.
கருத்தியல் உழைப்பிற்கான முயற்சிகளை கோவை ஞானி அவர்களிடமிருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பிற்காலத்தில், அவருடைய இரு கண்களும் பார்வையிழந்த நிலையில் அவர் அன்றாடம் படித்தறிந்த செய்திகள் ஏராளம்! ஏராளம்! அன்றைய நாளேடுகள் தொடங்கி, புதிது புதிதாக நூல்களைப் படித்தார். படித்தார் என்றால் அவர் நேரடியாகப் படிக்கவில்லை. அவர் மீது அன்பு கொண்ட இளைஞர்கள் அன்றாடம் அவருக்குப் படித்துக் காட்டும் பணியைச் செய்தார்கள்.
செய்திகளைத் தெரிந்து கொள்வதில் – அறிவைத் தேடுவதில் அவருக்கிருந்த பேரார்வம் – விடாமுயற்சி மலைப்புத்தட்ட வைக்கும். தாம் படிப்பது மட்டுமின்றி, மக்கள் படிப்பதற்கு ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
கோவை ஞானி அவர்கள் தம்முடைய திறந்த சிந்தனைகள் – நூல்கள் வழியாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார். அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment