ஓங்கி வரும் உள் மோதல்கள்-2
இந்துத்துவா பேசிய சிவசேனையின்
இன அரசியல்!
ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்
“ஒற்றை அதிகார பாசிசத்தை - இந்தியாவின் உள் மோதல்கள் உடைக்கும்” என்ற தலைப்பில் 11.11.2020 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.”
இந்தியத் தேசியம் பேசுவோரிடையே உள்ள மோதல்களையும், இந்துத்துவா பேசுவோரிடையே உள்ள மோதல்களையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த உள் மோதல்களில் பெரும்பான்மையாய் உள்ளவை இன அடிப்படையிலான மோதல்களே!
இந்துத்துவா அரசியல் பேசுவதில் பாசகவும் சிவசேனையும் பங்காளிக் கட்சிகள். ஆனால் பாசக - ஆரியத்துவா அடிப்படையிலும், சிவசேனை மராத்திய இன அடிப்படையிலும் செயல்படும் கட்சிகள். இப்போது, மராட்டிய முதலமைச்சர் பதவியில் சிக்கல் ஏற்பட்டு – பாசக – சிவசேனைக் கூட்டணி உடைந்து விட்டது. தேசியவாதக் காங்கிரசு – காங்கிரசுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து – அக்கூட்டணி அமைச்சரவையின் முதலமைச்சராக சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே உள்ளார்.
பாசகவையும் தலைமை அமைச்சர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறது சிவசேனை.
மும்பை அலிபாக்கைச் சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் அன்வய் நாயக் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி முதலாளி அருணாப் கோசுவாமி என்ற குற்றச்சாட்டில் வழக்குப் பதிவாகியுள்ளது. அவ்வழக்கில் அண்மையில் அருணாப் தளைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரைச் சிறையில் அடைத்தது உத்தவ் தாக்ரே அரசு.
அந்த ஆத்திரத்தில், உத்தவ் தாக்ரே மனைவி, மேற்படி அன்வய் நாயக்கிடம் நிலம் வாங்கிய போது குறைந்த விலை கொடுத்து ஏமாற்றிவிட்டார். அதனால் அன்வய் தற்கொலை செய்து கொண்டார் என்று பாசகவின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கிரீட் சோமையா குற்றம் சாட்டியுள்ளார்.
இக்குற்றச் சாட்டை மறுத்த சிவசேனையின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத் பாசக தலைமையை இன அடிப்படையில் கண்டனம் செய்தார்.
“பாசக ஒரு சேட்ஜி கட்சி, கிரீட் சோமையா ஒரு வணிகர். கட்டட வடிவமைப்பாளரின் மனைவி கணவனை இழந்து அழுது கொண்டிருக்கிறார். அவருக்கும் அவர்கள் மகளுக்கும் நீதி கிடைக்க பாசக எதுவும் பேசவில்லை. அந்த வழக்கைத் திசை திருப்பவே சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது” என்றார் ரெளத்.(தினமணி, 14.11.2020)
ஒட்டு மொத்த பாசகவை சேட்ஜி கட்சி என்கிறார் சிவசேனை செய்தித் தொடர்பாளர். சேட்ஜி என்பது குசராத்தி வணிகர்களைக் குறிக்கும். மோடியும் அமித்சாவும் குசராத்தைச் சேர்ந்தவர்கள். மராத்தி X குசராத்தி இன முரண்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் சிவசேனைத் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர்.
கடந்த 2019 – இல், மராட்டிய மாநிலத்தின் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி நிறுவகத் தலைவர் சரத்பவார் மீது இந்திய அரசின் அமலாக்கத்துறை – ஊழல் விசாரணை நடத்தப் போவதாக அறிவித்தது. அப்போது சரத்பவார் “வீர சிவாஜி மரபிலே வந்த மராட்டியன் ஒரு போதும் புது தில்லிக்குத் தலைவணங்க மாட்டான்” என்று செய்தியாளர்களிடம் கூறினார். இச்செய்தி ஏடுகளில் வந்தது.
இப்போது சிவசேனைத் தலைவர்களில் ஒருவர், அதே மராட்டியப் பெருமிதத்தோடு, குசராத்தி இனத்தைச் சேர்ந்த பாசக தலைவர்களைக் கண்டிக்கிறார்!
இந்தியத் தேசியத்தின் உள் மோதல்கள் ஒவ்வொரு வடிவில் வெளிவந்து கொண்டுள்ளன.
------------------------
=====================================================
“உச்ச நீதி மன்றத்தில் பாசக கொடியைப் பறக்க விடலாம்” – சிரிப்பு நடிகர் விமர்சனம்
==========================================
அருணாப் கோசுவாமி, தளைப்பட்ட பின் நேரடியாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பிணை மனு போட்டார்கள். கீழ்நீதி மன்றத்தை அணுகு மாறு கூறி, அது பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது.
மாவட்ட நீதி மன்றத்தில் பிணை மனு போட்டார்கள். ஆனால் அது விசாரிக்கும் முன்பாகவே உச்சநீதி மன்றத்திலும் பிணை மனு போட்டார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்திரா முகர்ஜி ஆகியோர் அமர்வு உடனடியாகப் பிணை கொடுத்தது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பைப் பலரும் விமர்சிக்கிறார்கள். ஓராண்டுக்கும் மேலாக காசுமீர் உரிமைப் பறிப்பு வழக்கை – அதில் சிறையில் உள்ளோர் பிணை வழக்கை – பீமா கொரேகான் – வழக்கில் – மோடியைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டினார்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போன்ற முதியவர்களின் பிணை மனுவைப் பல மாதங்களாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைக்கும் உச்சநீதி மன்றம் பாசகவின் பரப்புரை வம்பர் அருணாப் கோசுவாமி பிணை மனுவை, கீழ் நீதிமன்றத்தில் அப்பிணை மனு விசாரணையில் இருக்கும் நிலையில் மரபுகளைக் கைவிட்டு, உடனடியாகப் பிணை வழங்கியதை பலரும் விமர்சிக்கின்றனர்.
இந்தித் திரைப்பட சிரிப்பு நடிகர் குணால் கம்ரா, காரசாரமாக விமர்சித்துவிட்டார். உச்சநீதிமன்றக் கட்டடத்தின் உச்சியில் பாசக கொடியை ஏற்றிவையுங்கள் என்று சுட்டுரையில் கூறிவிட்டார். அதே போல் நீதிபதி சந்திசூட் பற்றியும் விமர்சித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடிகர் குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உள்ளார்கள். இந்திய அரசின் சட்டத்தலைவர் கே.கே.வேணுகோபால் அவர்களும் அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய தமது ஒப்புதலைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் குணால் கம்ரா – இந்தியத் தேசியத்தை ஏற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment