இவ்வாண்டின் தமிழ்நாடு நாளை (01.11.2020) இருண்ட நாளாக மாற்றிவிட்டனர் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள். பா.ச.க., காங்கிரசு ஆளும் மாநிலங்களில் மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கான அரசாணைகள், சட்டங்கள் இயற்றி, தங்கள் மாநில மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கிறார்கள். அவ்வாறு சட்டமியற்றுமாறு தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து துண்டறிக்கை கொடுத்தவர்களை அ.இ.அ.தி.மு.க. அரசு கைது செய்துள்ளது.
பலநாடுகள் இருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் – பிரித்தானிய வணிக வேட்டையாடிகள் வெடிமருந்து பீரங்கிகளுடன் வந்து அந்தந்த அரண்மனைகளைத் தகர்த்தும், அரசர்களைத் தூக்கில் போட்டும், சிறைப்பிடித்தும் இந்தியா என்ற ஒற்றை நிர்வாகக் கட்டமைப்புபை உருவாக்கினர்.
இந்த உண்மையை உணர்ந்து கொண்ட காங்கிரசுக் கட்சி, தனது விடுதலைப் போராட்ட காலத்தில் மொழி – இன மாநிலங்களாக இந்தியாவை பிரித்து கூட்டாட்சி நடத்தும் திட்டத்தை முன்வைத்தது. அதே போல் விடுதலைக்குபின் மொழி – இன மாநிலங்களை அமைத்தார்கள். அதற்குச் சட்டம் இயற்றினார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில், இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே, 90 விழுக்காட்டிற்கு மேல் வேலையில் சேர்க்கிறார்கள். அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வட நாட்டினரும் பிற வெளிமாநிலத்தவரும் வந்து தமிழ்நாட்டில் குவிகின்றனர். அமைப்புசாராப் பணிகளிலும் பெருமளவு வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள்.
வெளியார் வெள்ளம் இதே அளவுக்குத் தமிழ்நாட்டில் அன்றாடம் புகுந்தால், பின்னர் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இருக்காது. இந்திக் காரர்களின் மாநிலமாகவோ – கலப்பின மண்டலமாகவோ மாறிவிடும்.
நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் போய்த் தங்க அம்மாநிலங்களின் உள் அனுமதி (Inner Line Permit) வாங்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இவ்வாண்டு இச்சட்டத்தை மணிப்பூர் மாநிலத்திற்கும் இந்திய அரசு நீட்டித்துள்ளது. அதே சட்டம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும் என்கிறோம்.
மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இச்சட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த வலியுறுத்தியும், இச்சட்டங்கள் இயற்றப்படும் வரை வெளிமாநிலத்தவர்களைப் புறக்கணிக்கும் ஒத்துழையாமையைக் கடைபிடிக்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் வைக்கிறோம். அதன்படி, தனியார்துறையில் வெளிமாநிலத்தவரைச் சேர்க்காமல் தமிழர்களைச் சேர்க்கக் கேட்டுக் கொள்கிறோம்.
இக்கோரிக்கைகள் அடங்கிய துண்டறிக்கைகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் தமிழ்நாடு நாளில் (01.11.2020) தொடங்கி பத்து நாள் தொடர்ந்து மக்களிடம் கொடுத்து வேண்டுகோள் வைக்க முடிவு செய்தோம்.
இன்று (01.11.2020) வேண்டுகோள் துண்டறிக்கை கொடுத்தவர்களை தஞ்சாவூர், கும்பகோணம், செங்கிப்பட்டி, திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர், நெல்லை மாவட்டம் கடையம் ஆகிய ஊர்களில் கைது செய்து மண்டபங்களில் வைத்துள்ளார்கள்.
தென்காசி மாவட்டம் - புளியங்குடியில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. பாண்டியன் அவர்களின் இல்லத்திலிருந்த ஒத்துழையாமை இயக்கத் துண்டறிக்கைகளை காவல்துறையினர் அத்துமீறி எடுத்துச் சென்றுள்ளனர்.
சென்னை கே.கே. நகரில் எங்கள் தோழர்கள் துண்டறிக்கை கொடுத்த போது காவல் துறையினர் கூடவே சூழ்ந்து சென்று காணொலி (வீடியோ) எடுத்தார்கள். துண்டறிக்கையை வாங்கிய மக்களும் கடைக்காரர்களும் அச்சப்பட்டதால் – அத்துடன் துண்டறிகை கொடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள்.
திருச்சி, மதுரை, தருமபுரி, ஓசூர், சிதம்பரம், பெண்ணாடம், முருகன் குடி, கோவை போன்ற பல ஊர்களில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினர்களுக்கு 31.10.2020திலிருந்து காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடியேற்றக் கூடாது என்று தடை அறிவிப்புகளை கொடுத்து நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இன்றும் அந்நெருக்கடிகள் அங்கெல்லாம் தொடர்ந்தன.
தமிழ்நாடு அரசின் இந்தத் தடை விதிப்புகளும், கைதுகளும், நெருக்கடிகளும் தமிழர் வாழ்வுரிமையில் மண்ணை அள்ளிப் போடும் செயலாகும். மறுபக்கம் இத்தடைகளும் கைதுகளும் அரசமைப்புச் சட்டம் வழங்கும் கருத்துரிமைக்கு எதிரானவையாகும்!
தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் தமிழர் உரிமைகளுக்கு எதிரான இந்த அடக்கு முறைகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஒத்துழையாமைத் துண்டறிக்கைகள் வழங்கத் தடை போடக் கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுத் கொள்கிறேன்.
Post a Comment