உடனடிச்செய்திகள்

Saturday, December 5, 2020

மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துக் கோயில்களிலும் தமிழ் வழிப்பாட்டைச் செயல்படுக! முதலமைச்சர்க்கு வேண்டுகோள்! - ஐயா பெ. மணியரசன்



மதுரை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி
அனைத்துக் கோயில்களிலும்
தமிழ் வழிப்பாட்டைச் செயல்படுக!


முதலமைச்சர்க்கு வேண்டுகோள்!

பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்



கரூர் ஆநிலையப்பர் ( பசுபதீசுவரர் ) கோயில் குடமுழுக்கில் (04.12.2020) தமிழ் மந்திரங்களை எல்லா இடங்களிலும் ஓதிட ஆணையிட்டுத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் - புகழேந்தி அமர்வு, தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கின் போது (05.12.2020) மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்வதைக் கடைப்பிடிக்க வேண்டும், அவ்வாறு ஏன் செயல்படவில்லை என்று அறநிலையத் துறை அதிகாரிகளைக் கடிந்து கொண்டது.

இனியும் தமிழ் வழிபாட்டு முறையைக் கடைபிடிக்காமல் ஏதாவதொரு கோயில் தொடர்பாக வழக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறையிடம் பத்து இலட்ச ரூபாய் நீதி மன்றச் செலவு தொகையாக வசூலிக்கப்படும் என்று நீதிபதி கிருபாகரன் எச்சரித்தார்.

கரூர் குடமுழுக்கு அழைப்பிதழில் சமற்கிருத மந்திரம் ஓதுவோர் பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. தமிழ் மந்திரம் ஓதுவார் பெயர்கள் ஏன் அச்சிடப்படவில்லை என்று கேட்ட நீதிபதி கிருபாகரன் இனிமேல் அழைப்பிதழ்களில் அவர்கள் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்றார். தமிழ் மந்திரங்களை ஓதி வழிபாடு செய்வதற்கும் – ஓதுவார்கள் பெயர்களை அச்சிடுவதற்கும் இந்து சமய அறநிலையத் துறை எல்லாக் கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

நீதிபதிகளின் இந்தக் கண்டனங்களும் வழிகாட்டல்களும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மட்டும் என்று ஆட்சியாளர்கள் கருதக்கூடாது. தமிழ் வழிபாட்டு உரிமையைச் செயல்படுத்த அக்கறை காட்டாத தங்களின் கடமை தவறிய குற்றத்தைத்தான் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் என்பதைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

தமிழ்நாடு அரசு சட்டப்படியான தனது கடமைகளைச் சரிவர செயல்படுத்த வேண்டும்.

1. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அன்றாடக் கருவறை அர்ச்சனை தமிழில் செய்வதைக் கண்கானித்து ஊக்க மூட்ட வேண்டும். வழிபட வருவோர் கேட்டால்தான் தமிழில் அர்ச்சனை என்ற நிலையைக் கைவிட்டு, கோயில் சார்பில் அன்றாடம் கருவறையில் நடத்தப்படும் பூசைகளில் தமிழ்மந்திரமும் ஓதி நடத்த வேண்டும். தமிழ்வழிபாட்டை ஊக்கப்படுத்தும் அறிவிப்புகளையும் கருத்துகளையும் கோயில் வளாகத்தில் ஆங்காங்கே எழுதி வைக்க வேண்டும்.

தமிழ் மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதற்கான அரசு ஆணையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.

2. குடமுழுக்கு மற்றுமுள்ள மாதாந்திர சிறப்பு நாட்களுக்கான பூசைகள் நடைபெறும் போது கருவறையில் தாமாகவே தமிழ் மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்ய ஆணை இட வேண்டும்.

3. தமிழ்நாடு அரசு 2006 ஆம் ஆண்டு இயற்றிய அனைத்து சாதியினரும் அர்ச்சரகலாம் என்ற சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 2015 திசம்பர் 16 இல் தீர்ப்பளித்தது.

தமிழ்நாடு அரசு தமிழ்வழி அர்ச்சனைக்குப் பயிற்சி கொடுத்து, பட்டயச் சான்றிதழ் கொடுத்து இருநூறுக்கும் மேற்பட்டோர் வேலை தரப்படாமல் உள்ளனர். அவர்களை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் உடனடியாக அர்ச்சகர்களாக அமர்த்த வேண்டும்.

4. அறநிலையத் துறையின் கீ்ழ் உள்ள அனைத்து சிவநெறிக் கோயில்களிலும் திருமால் நெறிக்கோயில்களிலும் சைவ ஓதுவார்களையும் வைணவ அரையர்களையும் உடனே அமர்த்த வேண்டும்.

5. தகுதி அடிப்படையில் அமர்த்தப்படும் இந்த ஓதுவார்களுக்கும் அரையர்களுக்கும் அரசுப் பள்ளித் தமிழாசிரியருக்கு இணையான மாதச் சம்பளம் அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மதுரை உயர் நீதிமன்றத்தி்ன் வழிகாட்டல்களை ஆய்வு செய்து மேற்கண்ட எமது கோரிக்கைகளையும் செயல்படுத்தி, அறநிலையத் துறைக் கோயில்களில் தமிழர் ஆன்மிகம் செழிக்கச் செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT