தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை
காவல் சார்பு ஆய்வாளர்
பணித்தேர்வில் கடைபிடிக்காதது ஏன்?
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் வினா!
தமிழ்வழியில் பயின்றோருக்கான 20% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசே முறையாக கடைபிடிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.
கடந்த 2010ஆம் ஆண்டு, தமிழ்வழியில் கல்வி கற்றோருக்கு அரசுப் பணிகளில் 20 விழுக்காடு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டுமென அப்போதைய தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது. எனினும், அச்சட்டம் இப்போதுவரை முறையாக பின்பற்றப்படுவதில்லை. தொடக்கத்திலிருந்து தமிழ்வழிக் கல்வி கற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்காமல், கல்லூரியில் மட்டும் தமிழ்வழியில் படித்ததாக போலிச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு, இந்த இட ஒதுக்கீட்டின் வழியே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளையடுத்து பள்ளிக் கல்வியின் 6 ஆம் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்திருப்போர் மற்றும், 10 – 12ஆம் வகுப்புச் சான்றிதழ்களில் தமிழ்வழிக் கல்வியில் படித்திருப்பது குறிப்பிட்டிருப்போருக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டின் வழியே வாய்ப்பு அளிக்க வேண்டுமென கடந்த 2020 மார்ச்சு 16 அன்று – தமிழ்வழிக் கல்வியில் பயின்றோருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை திருத்தச் சட்டம் (The Tamil Nadu Appointment on preferential basis in the Services under the State of Persons studied in Tamil Medium Act) –தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது.
அண்மையில் (05.12.2020) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன் – புகழேந்தி அமர்வில் நடைபெற்று வரும் இச்சட்டச் செயலாக்கம் குறித்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்திற்கு ஏழு மாதங்கள் கடந்த பிறகும்கூட, தமிழ்நாடு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக இச்சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருவது கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடுச் சட்டம் மட்டுமின்றி, ஏழு தமிழர் விடுதலை, 7.5% இட ஒதுக்கீடு என தொடர்ந்து பல சிக்கல்களில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இவ்வாறு செயல்படுவது, இந்திய அரசின் தமிழ் – தமிழர் – தமிழ்நாடு விரோதப் போக்கின் நீட்சியே ஆகும்.
தமிழ்நாடு ஆளுநர் இப்போக்கைக் கைவிட்டு, தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தத்திற்கு உடனடியாகக் கையெழுத்திட வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, கடந்த 2020 சனவரி 13-இல் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக காவல்துறை சார்பு ஆய்வாளர் (எஸ்.ஐ.) பணிக்கு 969 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் எழுத்துத்தேர்வு, உடல் தகுதித் திறன், நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகள் உள்ளன. இத்தேர்வின் இம்மூன்று நிலைகளிலும் சாதிவாரி இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், தமிழ்வழியில் படித்தோருக்கான 20 விழுக்காடு பின்பற்றப் படவில்லை! இந்த மூன்று தகுதித் தேர்வுகளும் முடிந்த பிறகு வெளியிடப்படும் இறுதிப் பட்டியலின் போது மட்டும் தமிழ்வழியில் 20 விழுக்காட்டினருக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறுகின்றனர்.
தமிழ்வழியில் படித்தோருக்கு இத்தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் திருத்தச் சட்டத்தின்படி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதே முறையானது. இப்படி பின்பற்றாததற்கும், ஆளுநர் ஒப்புதல் இதுவரை அளிக்கபடவில்லை என்பதற்கும் நேரடித் தொடர்பேதுமில்லை! இறுதியில், இட ஒதுக்கீடு திருத்தச் சட்டப்படி வேலை வாய்ப்பு ஆணை வழங்க முடியாத நிலைக்குதான், ஆளுநரின் அடாவடி காலதாமதம் காரணமாக இருக்க முடியும். 2010 சட்டத்தையே கூட தமிழ்நாடு அரசு முறையாக பின்பற்றவில்லை.
இத்தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் தமிழ்வழியில் படித்தோருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால், தமிழ்வழியில் படித்தவர்கள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்போது – இந்த இட ஒதுக்கீட்டுப்படியான 180 இடங்களுக்குப் தமிழ்வழித் தேர்வர்கள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, மிகக் குறைவான இடங்களை மட்டும் தமிழ்வழியில் படித்தோருக்கு ஒதுக்கிவிட்டு, இந்த இட ஒதுக்கீட்டினருக்கான இடங்களை ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு (Non PSTM) பகிர்ந்து அளிக்கின்றனர்.
சார்பு ஆய்வாளர் தேர்வு போன்றே மூன்று நிலைகளான எழுத்துத் தேர்வு, உடற் தகுதிறன், நேர்முகத் தேர்வு போன்றவைகளை கொண்ட “வனவர்” பணியிடங்களுக்கானத் தேர்வில் முறையாக ஒவ்வொரு நிலையில் இருந்தே தமிழ்வழி இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு பின்பற்றப்படுவ தில்லை! இது அநீதியாகும்!
தமிழ்நாடு அரசு இச்சட்டத்திற்கு ஆளுநரிடம் ஒப்புதல் வாங்குவதுடன், தனது சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் தமிழ்வழிக் கல்வி கற்றோர் மீதான பாரபட்சமான தேர்வு முறையைக் கைவிட்டு, தமிழ்வழியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு தாங்களே இயற்றிய சட்டத்திருத்தத்தின் படியான வாய்ப்பை வழங்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment