|
“கர்நாடக முதல்வர்
உச்சநீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையா?”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்
தலைவர் தோழர் பெ.மணியரசன் கேள்வி
கர்நாடக அரசு காவிரியில்,
தமிழகத்திற்கு உடனடியாக 2.44 ஆ.மி.க. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று 07.02.2013
அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த ஆணையை உடனடியாக நிறைவேற்றாமல் 3 நாள்
காலம் தாழ்த்தி, 10.02.2013 அன்று தண்ணீர் திறந்து விட்டதாகச் சொன்னது கர்நாடக
அரசு. மிக மிக்க் குறைவான தண்ணீர் 5 நாட்கள் கழித்து பில்லுகுண்டுலுவுக்கு
வந்த்து. வந்ததும் உடனே தண்ணீர் நின்று விட்டது. கர்நாடகம் ஒரு பாவனை காட்டி
விட்டு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தி விட்டது.
நேற்று(17.02.2013) கர்நாடக
மாநிலம் ஹூப்ளியில், அம்மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், உச்சநீதிமன்றத்
தீர்ப்புப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஒளிவு மறைவின்றி
அறிவித்துள்ளார். ஏற்கெனவே பலமுறை உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த அவர்
மறுத்துவிட்டார். அம்மறுப்பை பகிரங்கமாகவும் தெரிவித்துள்ளார். இம்முறை தமிழக அரசு
அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து, அது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்
உள்ளது. இந்த நிலையில் தான், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று
உரத்துப் பேசுகிறார் ஷெட்டர்.
அவரது இவ்வறிவிப்பு ஏடுகளில்
வந்துள்ளது. ஏடுகளில் வந்துள்ளதை வைத்து, உச்சநீதிமன்றம் தன்முயற்சியாக(Suo Moto) ஷெட்டர் மீது
நீதிமன்ற வழக்குப் பதிவு செய்து அவரை உச்சநீதிமன்றத்தில் நேர் நிற்க ஆணையிட்டிருக்க
வேண்டும். ஆனால் அதைச செய்யவில்லை.
ஜெகதீஷ் ஷெட்டர்
உச்சநீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையா என்ற ஐயம் ஏற்படுகிறது. அவர் எத்தனை முறை
உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படத்தவில்லை என்றாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும்
உச்சநீதிமன்றம் எடுக்காது என்ற கருத்து மக்களிடம் மலர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின்
இப்போக்கு, இந்தியாவின் இறுதி அதிகாரம் படைத்த நீதிமன்றத்தின் மீது மக்களின்
நம்பிக்கையை வெகுவாக குறைத்து வருகிறது.
இனியாவது உச்சநீதிமன்றம், தனது
மதிப்பைக் காத்துக் கொள்ள, நீதியை நிலைநாட்ட, ஜெகதீஷ் ஷெட்டர் மீது நீதிமன்ற
அவமதிப்பு வழக்குத் தொடுத்து, அவரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்,
|
Post a Comment