உடனடிச்செய்திகள்

Saturday, February 9, 2013

அப்சல் குருவுக்கு தூக்கு: சட்ட நெறியைத் தூக்கிலிட்டதற்கு சமம் தோழர் பெ.மணியரசன் அறிக்கை





அப்சல் குருவுக்கு தூக்கு:
சட்ட நெறியைத் தூக்கிலிட்டதற்கு சமம்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் தொடர்புபடுத்தப்பட்ட அப்சல் குருவை, இந்தியக் காங்கிரசு அரசு இன்று (09.02.2013) காலை யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டுக் கொன்றுள்ளது.

2001ஆம் ஆண்டு திசம்பரில் நடைபெற்ற, நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரும் அவ்வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு ஆகத்து மாதம், இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், பேராசிரியர் கிலானி விடுவிக்கப்பட்டார். அப்சான் குருவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்சல் குருவுக்கு மட்டும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

தூக்குத் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம், “அப்சல் குரு, பயங்கரவாத அமைப்பு எதிலும் உறுப்பினராக இல்லை; நாடாளுமன்றத் தாக்குதலில் நேரடியாக கலந்து கொள்ளவில்லைஎன்று கூறியது. அத்துடன், “நாடாளுமன்றத்தைத் தாக்குவதற்கான சதித்திட்டம் நடைபெற்றக் கூட்டத்தில், அப்சல் குரு கலந்து கொண்டதற்கும் சான்று எதுவுமில்லை. ஆனால், நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தியவர்களோடு அப்சல் குருவுக்குத் தொடர்பு இருந்திருக்கிறதுஎன்று கூறியுள்ளது. ஆனாலும், தேசத்தின் கூட்டு மனச்சான்றை திருப்திப் படுத்த அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை வழங்குவது தேவையாக உள்ளதுஎன்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் இக்கூற்றின்படி பார்த்தால், அப்சல் குருவுக்கு சட்டநெறிப்படி தூக்குத் தண்டனை வழங்கப்படவில்லை. மக்கள் உணர்ச்சியை சமாதானப்படுத்தவே தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறார்கள்.

உலகத்தில் இரண்டு வகைப்பட்ட நீதிமன்ற முறைகள் இருக்கின்றன. ஒன்று, நீதியை முதன்மைப்படுத்தும் நீதிமன்ற முறை. இதனை, Court of Justice என்பார்கள். இன்னொன்று, சட்ட நெறிக்கு முதன்மை கொடுக்கும் நீதிமன்ற முறை. இதனை, Court of Law என்பார்கள். இந்தியாவில் இருப்பது Court Of Law.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை விசாரிக்கும்போது, அந்நபர் குற்றம் செய்திருப்பார் என்பது நீதிபதிகளுக்குத் தெளிவாகத் தெரிய வந்த போதிலும், அதை மெய்பிக்கும் சாட்சியங்களும், சூழல்களும் இல்லாத போதும், பிறழ்சாட்சிகள் உருவாகிவிட்ட நிலையிலும், நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை வழங்க முடியாது. இது தான், சட்டமுறைப்பட்ட நீதிமன்ற அமைப்பாகும். இந்தியாவில் இருப்பது, சட்டவழிமுறைக்கு முதன்மை கொடுக்கும் Court of Law முறையாகும்.

ஆனால், அப்சல் குருவுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது, சட்டவழிப்பட்ட நீதிமன்ற முறையில் அல்ல. நீதிபதிகள், மக்கள் உணர்ச்சி மற்றும் தங்களுக்கு இருந்த நாட்டுப்பற்று ஆகியவற்றின் காரணமாக, தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறார்கள். இத்தண்டனை, Court of Justice முறையிலும் வரவில்லை. Court of Law முறையிலும் வரவில்லை. நீதிபதியின் விருப்பு – வெறுப்பு சார்ந்த, வழிமுறையில் வந்துள்ளது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, இந்தியா உள்பட உலகெங்கும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அந்த நிலையிலும், அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்க்கிறோம். அத்துடன், இந்தியாவில் உள்ள சட்டவழிமுறைகளுக்குப் புறம்பாக நீதிபதிகள் விருப்பம் சார்ந்து தூக்குத்தண்டனை வழங்கப்பட்டதையும் எதிர்க்கிறோம்.  

அப்சல் குருவுக்கு சட்டவழிமுறைக்குப் புறம்பாக மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும் தவற்றை, குடியரசுத் தலைவர் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் திருத்தியிருக்க வேண்டும். அந்தக் கழுவாயையும் கடைபிடிக்காமல், அவசர அவசரமாக, அவருடைய மனைவிக்குக் கூட தெரிவிக்காமல், இன்று (09.02.2013) காலையில் தூக்கிலிட்டிருப்பது, சட்டநெறிகளைத் தூக்கிலிட்டதற்கு சமமாகும். இந்த அரச அராஜகத்தைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் கூறிய கூட்டு மனசாட்சி என்பது, இந்துத்வா வெறி சக்திகளின் மனசாட்சி தவிர வேறல்ல. இந்துத்வா வெறியில் பாரதிய சனதா கட்சியுடன் போட்டியிட்டு, கூடுதல் வாக்கு வாங்க வேண்டும் என்ற பதவி வெறிதான் காங்கிரசு ஆட்சியாளர்களிடம் மிகுதியாக உள்ளது என்பதை அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றிய முறை வெளிப்படுத்துகிறது.

நீதிபதிகளின் விருப்பு வெறுப்பு சார்ந்தும், இந்துத்வா வெறி சக்திகளின் கூச்சலுக்குப் பணிந்தும், தூக்குத் தண்டனை வழங்குவதும் நிறைவேற்றுவதும் எதிர்காலத்தில், எத்தனையோ அப்பாவி மக்களை, பழிவாங்குவதற்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது.

இந்தியா உட்பட உலகெங்கும் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பது த.தே.பொ.க.வின் உறுதியான நிலைபாடு. இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது அப்சல் குருவுக்குத் தூக்கு தண்டனை வழங்கியதும் அதை நிறை வேற்றியதும் இந்தியாவில் உள்ள சட்ட நடைமுறை பின் பற்றப்படவில்லை என்பதாகும்.

இந்திய நாட்டு மக்கள், இவ்வாறான பழிவாங்கும் சட்டக் கொலைகள் இனியும் தொடராமல் தடுக்க கிளர்ந்தெழ வேண்டும். அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியதிலும், அதை நிறைவேற்றியதிலும் நடந்த சட்ட விரோதச் செயல்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, குடியரசுத் தலைவர் தற்சார்புள்ள, உயரதிகாரம் படைத்த விசாரைணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொள்கிறேன்.


இவண்,                                                                                 
                                                                           பெ.மணியரசன்
இடம்: சென்னை
 
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி



(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT