உடனடிச்செய்திகள்

Thursday, February 7, 2013

“தமிழ்த் தேசியத்தின் மனித வடிவமாக வாழ்ந்தவர் தோழர் திருநாவுக்கரசு” - தோழர் பெ.மணியரசன் புகழாரம்!

“தமிழ்த் தேசியத்தின் மனித வடிவமாக வாழ்ந்தவர் தோழர் திருநாவுக்கரசு”
த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் புகழாரம்!


சென்னை – செங்குன்றம் பகுதியில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வளர்ச்சியிலும், தமிழர் கண்ணோட்டம் இதழ் வளர்ச்சியிலும் திறம்பட பங்காற்றி, மறைவுற்ற தோழர் ஆ.ந.திருநாவுக்கரசு அவர்களது உருவப்படத் திறப்பு - நினைவேந்தல் பொதுக்கூட்டம் 06.02.2013 அன்று மாலை 5 மணியளவில் செங்குன்றம் பேருந்து நிலையம் கடைவீதியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சி.பி.எம்.எல். – மக்கள் விடுதலை மாவட்டக் குழுத் தோழர் க.செங்கொடி அப்பு தலைமையேற்கிறார். தமிழக இளைஞர் முண்ணனி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செங்குன்றம் அமைப்பாளர் தோழர் பி.ஏ.சங்கர்பாபு, தோழர் திலீபன், தோழர் மாஜினி, தோழர் அனுமந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தோழர் ஆ.ந.திருநாவுக்கரசு அவர்களது உருவப்படத்தை திறந்து வைத்து நிறைவுரையாற்றினார். தோழர் திருநாவுக்கரசு அவர்களின் மகன்கள் திரு. தமிழ்ச்செல்வன் மற்றும் திரு சரவணன் ஆகியோரிடம், தோழரது உருவப்படம் கையளிக்கப்பட்டது.

பின்னர், நினைவேந்தல் உரையாற்றிய, ஆத்தூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவரும், மக்கள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவருமான தோழர் ஆர்.முருகன், தோழர் திருநாவுக்கரசு ஆத்தூர் பகுதி மக்களுக்காக எப்படியெல்லாம் உழைத்தார் என நினைவுகூர்ந்தார். மக்கள் விடுதலை அமைப்பில் தோழர் திருநாவுக்கரசு செயலாற்றிய போது நடைபெற்ற ஊராட்சித் தேர்தல்களின் போது, தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த தோழர் திருநாவுக்கரசு, நம்முடைய உழைப்பு ஒரு தலித்தை ஊராட்சித் தலைவராக வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டுமென முனைப்புக் காட்டியதை தோழர் முருகன் குறிப்பிட்டார்.

தி.மு.க. கழக தலைமைக் கழகப் பேச்சாளர் திரு ஏ.திராவிடமணி பேசும் போது, “பலமுறை தோழர் திருநாவுக்கரசு அவர்களிடம் நான் புத்தகங்கள் வாங்குகின்ற போது, சில்லறை இல்லாமல் அவர் தவித்த வேளையில், அந்த தள்ளாத வயதிலும் பக்கத்திலிருக்கும் கடைகளுக்கு தானே நடந்து சென்று சில்லறை பெற்று, மீதித் தொகையை அளித்துவிட்டு செல்வார். நான் வேண்டாம் எனச் சொன்னாலும், அடுத்தவர் காசு என்னிடம் ஒரு ரூபாய் கூட இருக்கக் கூடாது என மிகவும் நேர்மையாக சொன்னவர் தோழர் திருநாவுக்கரசு. அவரது நேர்மையும், கொள்கை உறுதியும் நமக்கு பாடமாக விளங்குகின்றது” எனக் குறிப்பிட்டார்.
அ.தி.மு.க. இலக்கிய அணிப் பேச்சாளர் திரு. சோ.மு.இரவி பேசும்போது, “தோழர் திருநாவுக்கரசை அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள் என நான் பலமுறைக் கேட்டுக் கொண்ட போதும் கூட, ‘எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் கூட நான் வாக்களிக்கமாட்டேன்’ என கொள்கை உறுதியுடன் தெரிவித்த தோழர் திருநாவுக்கரசு, நமக்கெல்லாம் பாடமாக நெஞ்சில் நிற்கிறார்” என பேசினார்.

சி.பி.எம்.எல் – மக்கள் விடுதலை செயற்குழுத் தோழர் தங்கத்தமிழ்வேலன் பேசும் போது, ”உழைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டுகின்ற இந்தச் சமூகத்தில், மற்றவர்களுக்காக உழைக்க வேண்டியது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரது கடமை. அந்தக் கடமையை தோழர் திருநாவுக்கரசு சிறப்பாகவே செய்துள்ளார்” என பேசினார்.

நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “தமிழர்கள் என்றைக்கும் பிறந்தநாளை போற்றியதில்லை. ஆரியர்களின் மரபுதான் பிறந்தநாளை போற்றுவதென்பது. தமிழர்கள் என்றைக்கும் இறந்த நாளை, இறந்தவர்களின் பெருமையைப் போற்றும் வகையில், நடுகல் வைத்து வழிபடுகின்ற மரபை உடையவர்கள் ஆவர். அந்த வகையில், செங்குன்றம் தோழா ஆ.ந.திருநாவுக்கரசு அவர்களது நினைவைப் போற்றும் வகையில், அவரது நல்ல குணங்களை எடுத்துக்காட்டி, இந்த நினைவேந்தல் – படத்திறப்புக் கூட்டத்தில் பேசிய தலைவர்களுக்கு மிக்க நன்றி!

மனிதர்கள் பலர் உயிருடன் இருக்கும் போதே இறக்கிறார்கள். ஆனால் பலர், மரணத்தின் போதும் கூட பிறக்கிறார்கள். பாரதியார் இறந்த பின், 1940இல் பாரதிதாசன், “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ” என்று பாடினாரே, அதைப்போல, உண்மையாக தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் பாடுபட்டவர்கள் என்றைக்கும் இறப்பதில்லை. அவர்கள், மரணத்தின் போது மீண்டும் பிறக்கிறார்கள். தோழர் திருநாவுக்கரசு அவர்களைப் போல, நமது உள்ளங்களில் அவர்கள் வாழ்கிறார்கள்.

தோழர் திருநாவுக்கரசு அவர்களைப் பற்றி இங்குள்ளவர்கள் பேசும் போது தான், நிறைய செய்திகள் அறிந்து கொள்ள முடிகின்றது. என்றைக்கும் தன்னை பற்றியும், தான் செய்த பணிகள் பற்றியும், மற்ற தோழர்களிடம் அவர் பெருமையுடன் பகிர்ந்து கொண்டவரல்ல. எவ்வளவோ நல்ல பணிகளை செய்துள்ள தோழர் திருநாவுக்கரசு அவர்களுடைய தன்னடக்கம், தமிழ்த் தேசியக் கொள்கையாக அவர் மனதில் பதிந்த்து தான் இதற்குக் காரணம். அவரது நல்ல குணங்கள் இப்போது மாற்றுக் கட்சியினரால் கூட போற்றப்படுவதை நினைத்து, உண்மையில் மிகவும் பெருமிதமாகவும் இருக்கிறது.

ஏகாதிபத்திய இந்திய அரசு நடத்துகின்ற தேர்தல்களில், அடிமை இனமான தமிழ் இனம் பங்கேற்கக் கூடாது என்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கையை, அவர் முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டுள்ளார் என இங்கு பேசிய தோழர்கள் குறிப்பிட்டனர். சாதி விடுதலை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களிலும் நல்ல கருத்துகளைக் கொண்டிருந்தவர் தோழர் திருநாவுக்கரசு.

தமிழ்த்தேசியம் என்பது, கட்சி எல்லைகளைக் கடந்து, சாதி வேற்றுமைகளைக் கடந்து, மனிதர்களை ஒருங்கிணைத்து தமிழ்த் தேசிய அரசியலின் பால், தமிழ் இனம் – மொழி நலன்களின் பால் ஈர்த்துச் செல்லும் அரசியலாகும். அந்த திசையில் இங்குள்ள பல்வேறு கட்சியனரிடமும், அன்பு பாராட்டி, அவர்களை உணர்வாளர்களாக ஒருங்கிணைத்து பணிசெய்த தோழர் திருநாவுக்கரசு, இப்பகுதியில் தமிழ்த் தேசியத்தின் மனித வடிவமாகவே அவர் வாழந்திருக்கிறார்.

தோழர் திருநாவுக்கரசு அவர்களது இழப்பு, அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு மட்டுமின்றி, தமிழ்த் தேசிய அரசியலுக்கும், செங்குன்றம் பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தோழர் திருநாவுக்கரசு அவர்கள் விட்டுச் சென்ற தமிழ்த் தேசியப் பணியை, அவரது நினைவோடு நாம் வேகப்படுத்திச் செய்வதே அவருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான வீரவணக்கமாகும்” என பேசினார்.

இந்நிகழ்வில், நாராவாரிக்குப்பம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜி.இராசேந்திரன்(தி.மு.க.), 7ஆவது வார்டு உறுப்பினர் திரு. எஸ்.வைத்தீசுவரன்(அ.தி.மு.க.), 11ஆவது வார்டு உறுப்பினர் (அ.தி.மு.க.), கலை பகுத்தறிவாளர் பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் திரு க.கு.இலக்கியன், திரு அரிகிருஷ்ணன்(விடுதலை சிறுத்தைகள்), ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு. ஆர்.வேல்முருகன், பெரியார் தொண்டர் மு.சு.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தோழர்களும் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினர்.

நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில், செங்குன்றம் வாழ் பொதுமக்களும்,தமிழ் உணர்வாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

(செய்தி: த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT