உடனடிச்செய்திகள்

Wednesday, February 20, 2013

பாலச்சந்திரன் இனப்படுகொலை: பன்னாட்டு விசாரணை மன்றமும் கருத்து வாக்கெடுப்பும் தேவை! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை


பாலகன் பாலச்சந்திரன் இனப்படுகொலை: 
பன்னாட்டு விசாரணை மன்றமும் 
கருத்து வாக்கெடுப்பும் தேவை!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் 
தோழர் பெ.மணியரசன் அறிக்கை


பன்னிரெண்டு வயது பாலகனான பாலச்சந்திரன் சிங்கள இனவெறி இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்ட படங்களைப் பார்த்த போது ஏற்பட்ட மன பதைப்பு இன்னும் அடங்கவில்லை.

பால் வடியும் முகம்; சிங்கள இராணுவத்தின் பதுங்கு குழியில் வைப்பட்டிருந்த போது, திருவிழாக் கூட்டத்தில் காணமல் போன சிறுவன் பெற்றோரைத் தேடி திகைப்பது போன்ற பார்வை; சிங்கள இராணுவத்தினர் கொடுத்த ஒரு தின்பண்டத்தை தின்றுகொன்றிருந்த அப்பாவித்தனம்; சிறிது நேரத்தில் பதுங்கு குழியிலிருந்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு தன்னோடிருந்த விடுதலைப்புலிகள் சுட்டுக் கொல்லப்படுவதை அதே சிறுவன் தன் கண்ணால் காண்கிறான். அதன் பிறகு பாலச்சந்திரனை நிற்க வைத்து அவன் கை தொட்டு விடும் தூரத்தில் துப்பாக்கியை நீட்டி மார்பிலே சுட்டுச் சாய்க்கிறார்கள் கொடியவர்கள்.

மல்லாந்து விழுகின்ற அவன் மார்பில் நான்கு தடவை மீண்டும் துப்பாக்கியால் சுடுகிறார்கள். என்ன துடித்துடித்திருப்பான் அந்த பாலகன்? அவன் செய்தக் குற்றமென்ன? இரு தரப்பினர் போரிட்டு கொண்டபோது இடையிலே சிக்கி பலியானவனல்ல பாலச்சந்திரன். கைப்பற்றிக் கொண்டு வந்து திட்டமிட்டு சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது போல் ஆயிரக்கணக்கான தமிழீழக் குழந்தைகளை சிங்கள இராணுவம் சுட்டுக் கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களை அழித்திருக்கிறது. இது போர்க்குற்றமல்ல. திட்டமிட்ட இனப்படுகொலை என்பதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய இளையமகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட முறையே நூற்றுக்கு நூறு நம்பத் தகுந்த சாட்சியமாகும்.

இப்பொழுதுதாவது, மனித உரிமையில் அக்கறையுள்ள உலக நாடுகள், பன்னாட்டுச் சமூகம் இதில் தலையிட வேண்டும். இலங்கை அரசே அமைத்த “கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்” என்ற உள்நாட்டு விசாரணை ஆணையம் இனப்படுகொலையை விசாரிப் பதற்கு உரிய அமைப்பு அல்ல என்பதை உலகம் உணர வேண்டும். தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் ஐ.நா. மன்றத்தால் நிறுவப்பட்டு அது விசாரணை செய்து அறிக்கை அளித்ததே ஈழத்தில் நடத்தப்பட்ட இனப் பேரழிப்பிற்கு உரிய விசாரணையாகும்.

வருகின்ற மார்ச்சு மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் தர்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்க முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர வேண்டும். அதற்கு மாறாக இலங்கை அரசே தனது “எல்.எல்.ஆர்.சி.” மூலம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தால் அது மனித குலப் பகைவன் இராசபட்சேவுக்கு, அமெரிக்காவும் அதை ஆதரிக்கும் நாடுகளும் முட்டுக் கொடுப்பதாகவே அமையும்.

பாலச்சந்திரன் போன்ற பாலகர்களை இனப்படுகொலை செய்த மனிதகுல அழிப்புக் குற்றத்தில் இந்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபட்சே கும்பலுடன் மன்மோகன் கும்பலையும் நிறுத்த வேண்டும். அதே போல் தமிழின அழிப்புப் போர் நடத்திய சிங்கள இனவெறி அரசுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமுன், ஐ.நா. அதிகாரியான மலையாளி விஜய் நம்பியார், அவருடைய அண்ணன் சதீஷ் நம்பியார் உள்ளிட்டவர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. 

பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழ்மக்கள் குண்டு போட்டுக் கொல்லப்பட இருக்கிறார்கள் என்ற தகவலை 2009 மார்ச்சு மாதமே தமிழீழப் பகுதியில் செயல்பட்ட ஐ.நா. அதிகாரிகள் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அறிக்கையாக கொடுத்துவிட்டார்கள். அந்த அறிக்கையை வெளியே தெரியாமல் மறைத்து சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்குத் துணை நின்றவர்கள் பான்கீமுன், விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் உள்ளிட்ட நபர்கள் ஆவர்.

எனவே ஈழத்தில் நடத்தப்பட்ட தமிழின அழிப்புப் போரில் இராசபட்சே கும்பலோடு சேர்ந்து செயல்பட்ட இந்திய ஆட்சியாளர்கள், ஐ.நா. அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணை மன்றம் அமைத்து அறிக்கைத் தரவேண்டும். குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஈழத்தமிழர் தங்களுக்குரிய இறையாண்மையுள்ள தேசம் அமைத்துக் கொள்வது குறித்து வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டும். இனப்படுகொலை நடந்த கிழக்கு திமோர், தெற்கு சூடான் ஆகியவற்றில் ஐ.நா. மன்றத்தில் பன்னாட்டு விசாரணைக்குப் பிறகு அங்கு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தனித் தனி தேசங்களாக அங்கீகரிக்கப்பட்டன. அதே ஞாயத்தைத் தான் ஈழத்திற்கும் வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை குழப்பமின்றி தமிழர் சர்வதேசியம் உலக மக்களிடம் முன் வைக்க வேண்டும். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இனப் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் குறித்து நெஞ்சம் பதைபதைக்கும் அனைத்து தமிழர்களும் உலகச் சமூகத்திடம் இந்த கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட வேண்டும்.

இந்த கொடூரங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்த சேனல்-4 தொலைக்காட்சிக்கும், “போரில்லா மண்டலத்தில் இலங்கையில் கொலைக் களம்” என்ற ஆவணப்படம் எடுத்த கல்லம் மக்காரே அவர்களுக்கும் தமிழர்கள் நன்றி கூறுவோம்.

இவண்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

இடம்: தஞ்சை  
போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT