பிப்ரவரி 23 திருவாரூர், அடியக்க மங்கலத்தில்
இந்திய அரசின் பெட்ரோல் கிணறு முற்றுகை:
காவிரி மீட்க கட்சி கடந்து களம் காண்போம் !
- மயிலாடுதுறை பொதுக் கூட்டத்தில் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு.
தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் ”இனி என்ன செய்யப் போகிறோம் ?”
விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம் 06-02-2013 மாலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை சின்னக்கடைத் தெரு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டததுக்கு தமிழர்
உரிமை மீட்பு இயக்க அமைப்பாளர் இரா.முரளிதரன் தலைமைத் தாங்கினார். ச.ஞானசேகரன் (மாநில தலைவர், தமிழ் நாடு வணிகர்
சங்கங்களின் பேரவை), எஸ்.என்.சேகர் (நாகை மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்கம்)
கோ.திருநாவுக்கரசு (தலைவர், தாளாண்மை உழவர் இயக்கம்), எழிலன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), ப.பெரியார்
செல்வம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), இரா.இளங்கோவன் (நாம் தமிழர் கட்சி),
எஸ், கார்திகேயன் (மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர இளைஞர் கழகம் ) ப.சுகுமாறன் (மாநில
துணைச் செயலாளர், குறளரசுக் கழகம்) த.பன்னீர் செல்வம் ( நகர செயலாளர், ம.தி.மு.க )
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
”தமிழக மின்வெட்டும் மின் கட்டண உயர்வும்” என்பது குறித்து தமிழ்நாடு மின் பொறியாளர்கள்
அமைப்பின் தலைவர், பொறியாளர் சா.காந்தி அவர்களும், “சில்லரை
வணிகத்தில் நேரடி அயல் முதலீடு” குறித்து
முனைவர் த.செயராமன் அவர்களும் சிறப்புரையாற்றினர். காவிரி நீர் சிக்கல்
குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர், தோழர்
கி.வெங்கட்ராமன் அவர்கள் நிறைவுரையாற்றினார்.
தோழர் கி.வெங்கட்ராமன் பேசும்போது “ காவிரி தீர்ப்பாயம் ஆணையிட்டும், உச்ச நீதிமன்றம்
தீர்ப்பு கூறியும் கூட ஒரு சொட்டு தண்ணீரும் தர முடியாது என கர்நாடகம் கொக்கரிக்கிறது. இந்திய அரசின் வலுவான துணையோடு காவிரி உரிமையை
கர்நாடகம் மறுத்துள்ளது. காவிரி சிக்கல் வெறும் தண்ணீர் பிரச்சினையல்ல, அது
அடிப்படையில் ஒரு இனப் பிரச்சினை. தமிழினத்தின் மீதான ஆரிய இந்தியத்தின் இனப்பகை
அரசியலின் வெளிப்பாடு இது.
இதனை வெறும் தண்ணீர் பகிர்வுப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் இதிலுள்ள இனப்பகையை
நாம் புரிந்து கொண்டால் தான் காவிரியை மீட்க முடியும். பொருளாதரத்தின் இன்றியமையாத
கூறு நீர் வளம். தமிழகத்தின் உயிர் நீரான காவிரியைத் தடுத்து தமிழகத்தின் மீது கர்நாடகம் பொருளாதார தடையை செயல்படுத்திக்
கொண்டிருக்கிறது. இந்திய அரசு அதற்குத் துணைபோகிறது.
காவிரி உரிமை மறுக்கும் இந்திய, கர்நாடகம் அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும்
போராட்டத்தில் தமிழர்கள் இறங்கவேண்டும். தமிழ் நாட்டிலிருந்து கர்நாடகம் செல்லும்
பாதைகளை மூடி பொருளாதார தடை ஏற்படுத்த வேண்டும். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து
மட்டும் நாள்தோறும் கர்நாடகத்துக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் போய்க்கொண்டிருக்கிறது.
கர்நாடகத்துக்கு செல்லும் தமிழக மின்சாரத்தை நிறுத்த வேண்டும். இலங்கையில் சிங்கள
அரசோடு கை கோத்து தமிழினத்தைக் கொன்று குவித்த இந்திய அரசு, அதே இனப் பகையோடு கர்நாடகத்தோடு இணைந்துகொண்டு
தமிழினத்தை வஞ்சிக்கிறது. இந்திய அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
காவிரி ஆற்றுப் படுகையான திருவாரூர் அருகே அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு
பெட்ரோல் கிணறு (ONGC) நிறுவனம் அமைத்து
பெட்ரோல் - எரிவளி வளத்தை கொள்ளையிட்டு வருகிறது.
வருகிற பிரவரி 23 அன்று திருவாரூர் - அடியக்க மங்கலத்தில் இந்திய அரசின்
பெட்ரோல் கிணறுகளை (ONGC) முற்றுகையிடும்
போராட்டத்தை ‘காவிரி உரிமை மீட்புக் குழு’
அறிவித்துள்ளது .
”காவிரி என்னும் தமிழரின் இயற்கை வளத்தை பாதுகாத்துத் தராத தில்லி அரசே!
காவிரி படுகையிலிருந்து கிடைக்கும் மற்றொரு இயற்கை வளமான பெட்ரோலியத்தை எடுக்காதே” என்ற முழக்கத்தோடு கட்சி வண்ணங்களை கடந்து சாதி வேற்றுமை பாராமல் தமிழர்களாக ஒன்றுபட்டு காவிரியை மீட்க களம்
காணவேண்டும்” என அப்போது அவர் பேசினார்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
Post a Comment