உடனடிச்செய்திகள்

Friday, February 8, 2013

முகநூல் விவாதம் எதிரொலி : மதுரையில் இந்தி பலகைகள் அகற்றம்!


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் உணர்வாளர்களின் கோரிக்கையை ஏற்று
மதுரை மாநகரில் இந்தி பலகைகள் வைக்கப்படமாட்டாது
என மாவட்ட ஆட்சியர் முகநூல் வழியாக அறிவிப்பு

போராடிய தோழர்களுக்கு த.தே.பொ.க. நன்றி!


மதுரை மாநகரில், இந்தி - ஆங்கிலம் - தமிழ் ஆகிய மும்மொழிகளிலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பெயர் பலகைகள் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் திரு. ஆர்.நந்தகோபால் அவர்கள் 20.01.2013 அன்று கூறியதாக தினமணி நாளேட்டில் 21.01.2013 அன்று செய்தி வெளிவந்தது. 


ங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் வீதிகளில் இந்திப் பெயர் பலகைகள் வைப்பது தமிழ் உணர்வாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1938லும் 1965லும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படக் கூடாது என உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாளான, மொழிப் போர் நாள் அன்று(25.01.2013), தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரையில் தமிழ் உணர்வாளர்களை ஒன்று திரட்டி, ஆணையரின் அறிவிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. 



மேலும், இது குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைகைம கட்சி சார்பில், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு முகநூல் வழியாக நான் கடிதமும் அனுப்பினேன். இணையத்தில் பகிரப்பட்ட நமது கடிதத்தை, கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக, பலரும் ஆதரித்து விருப்பங்களும், கருத்துகளும் தெரிவித்தனர். 




தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பாளர் திரு ராஜ்குமார் பழனிசாமி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கா.திருமுருகன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட தமிழின ஆதரவு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் நமது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக கருத்துகளை பேஸ்புக் இணையப் க்கத்தில் எழுதி ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், முகநூல் வழியாக பதில் அளித்த, மதுரை மாவட்ட ஆட்சியர், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத்தான் அத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அதில் வேறு உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் முதலில் பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், 04.02.2013 அன்று மாலை, இந்திப் பெயர் பலகைகள் வைக்கும் முடிவை கைவிடுவதாக மாவட்ட ஆட்சியர் திரு மிஸ்ரா, முகநூல் வழியாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர ஆணையர் திரு. ஆர்.நந்தகோபால் அவர்கள், மும்மொழிகளில் பெயர் பலகை வைக்கும் தனியார் மீது காவல்துறையில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இவ்வறிவிப்புகளைத் தொடர்ந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகிலிருந்த இந்தி எழுத்துகள் பொறித்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.  

மேலும், மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் சார்பில் வைக்கப்பட்டிருந்த பின்வரும் பெயர் பலகையும் சில இடங்களில் மட்டும் அகற்றப்பட்டது. எனினும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையான நேதாஜி சாலையில், இப்பலகை பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ளன. அவையும் முறையாக அகற்றப்பட வேண்டும் எனக் கோருகிறோம்.

இந்தி பெயர் பலகைகளைக் கைவிடும் நிர்வாகத்தின் முடிவை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மகிழ்வுடன் வரவேற்கிறோம். இக்கோரிக்கைக்காக மதுரையில் 25.01.2013 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. மற்றும் தோழமை அமைப்புத் தோழர்களுக்கும், முகநூல் வழியாக கருத்துப் போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்களுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
அ.ஆனந்தன்

இடம் : மதுரை-1.

 
தலைமைச் செயற்குழு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT