உடனடிச்செய்திகள்

Sunday, February 24, 2013

அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு முற்றுகை!

அடியக்க மங்கலத்தில் இந்திய அரசு பெட்ரோல் கிணறு முற்றுகை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, இந்திய அரசை வலியுறுத்தி, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 23-02-2013 அன்று காலை திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் இந்திய அரசின் பெட்ரோல் கிணறுகள் முற்றுகையிடப்பட்டன.

உழவர்கள், உணர்வாளர்கள் என ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடியக்கமங்கலம் முதன்மைச் சாலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இயங்கிவரும் இந்திய அரசின் பெட்ரோல் கிணறு நிறுவனம் நோக்கி பேரணியாக சென்றனர். சிகப்புச் சீருடையணிந்த தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் முன்னணியாகச் செல்ல, உழவர்களும், உணர்வாளர்களும் பின் தொடர, மாபெரும் மக்கள் வெள்ளமாக வீதிகள் நிரம்பி வழிந்தன. வழி நெடுக “காவிரி தமிழர் செவிலித்தாய், காவிரி தமிழர் உரிமை சொத்து”, “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை! காவிரி வாரியம் இல்லாத இறுதித் தீர்ப்பு ஏட்டுச் சுரைக்காய்! ஏட்டுச் சுரைக்காய்!”, “காவிரி இல்லாமல் வாழ்வில்லை! களம் காணாமல் காவிரியில்லை!”, “வெளியேறு! வெளியேறு! காவிரி உரிமையை காத்திடாத இந்திய அரசே வெளியேறு” என்று உழவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கங்கள் அதிரச் செய்தன.

முற்றுகைப் போராட்டத்தையொட்டி பெட்ரோல் கிணறு நிறுவன முகப்பு வாயிலருகே மூன்று அடுக்கு பாதுகாப்புப் படையினர் நின்றுக் கொண்டு இருந்தனர். நடுவண் தொழிற் பாதுகாப்புப் படை, கலவரத் தடுப்புப் படை, அதிவிரைவுப் படை என காவல்துறையினர் தயார் நிலையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

தோழர்கள் பெட்ரோல் கிணறு நிறுவன வாயிற்கதவுகள் அருகே முன்னேறினர். முன்னெச்சரிக்கையாக வாயிற் கதவுகளை காவல்துறையினர் இழுத்து மூடினார். தடுத்து நிறுத்தப்பட்ட உழவர்களும் உணர்வாளர்களும், திரளான பெண்கள் உள்ளிடோர் வாயிற்கதவருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப, தோழர்கள் அனைவரும் அதை எதிரொலித்தனர். போராட்டத்திற்கு தலைமையேற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசுகையில், “தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு பெட்ரோல் எடுக்கின்ற பணி நடைபெறக்கூடாது என்று தான் முற்றுகை போராட்டத்தை அறிவித்தோம். இப்போரட்டத்திற்கு பயந்தும், பணிந்தும் அரசே முழுவதுமாக இன்று இந்நிறுவனத்தை மூடி, முற்றுகைப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்துள்ளது” என்று அறிவித்தவுடன் தோழர்கள் பலத்த கரவோலி எழுப்பி ஆர்ப்பரித்தனர்.

அங்கே கூடியிருந்த திரளானத் தோழர்களிடம் ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் திரு. துரை.பாலகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும் தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர்.கி.வெங்கட்ராமன், தஞ்சை – திருவாரூர் – நாகை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சேரன், காவிரி விவசாய பாசனப் பாதுகாப்பு சங்கப் பொறுப்பாளர் திரு. தனபால், பாரம்பரிய நெல் விவசாய சங்கத் தலைவர் திரு. செயராமன், தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. மணிமொழியன், நாம் தமிழர் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் கந்தன், இயற்கை வேளாண்மை இயக்கத் தலைவர் தோழர் கே.கே.ஆர்.லெனின், தாளாண்மை உழவர் இயக்க பொறுப்பாளர் பொறியாளர் கோ.திருநாவுக்கரசு, தமிழர் தேசிய இயக்கம் பொது செயலாளர் தோழர் அய்யனாபுரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தஞ்சை மாவட்டத் துணை தலைவர் திரு இரவிச்சந்திரன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக தமிழர் நீதிக் கட்சி தோழர் இராசேந்திரன் நன்றி கூறினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, தோழர் அ.ஆனந்தன், தோழர் க.முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் ம.கோ.தேவராசன், தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச்செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைத்தலைவர் தோழர் கெ.செந்தில்கமரன், துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

போராட்டத்தில் பங்கெடுக்க, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக இளைஞர் முன்னணி, மயிலாடுதுறை தமிழர் உரிமை மீட்பு இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட தமிழின உணர்வாளர் அமைப்புத் தோழர்களும், தமிழக உழவர் முன்னணி உள்ளிட்ட உழவர் அமைப்புத் தோழர்களும் ஊர்திகளில் வந்திருந்தனர்.














(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT