காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்க , இந்திய அரசை
வலியுறுத்தி, அடியக்கமங்கலத்தில்
பெட்ரோல் கிணறு முற்றுகைப் போராட்டம் பங்கேற்க வாரீர்
தமிழர்களே..!
காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அழைப்பு
காவிரித் தீர்ப்பாயத்தின்
இறுதித் தீர்ப்பை மிகவும் காலம் கடந்து, உச்சநீதிமன்றத்தின்
கட்டளைக்குக் கட்டுப்பட்டு வேறுவழியின்றி, கடந்த 20.02.2013 அன்று நடுவண் அரசு, தனது அரசிதழில் வெளியிட்டது.
இறுதித் தீர்ப்பில், தமிழக, கர்நாடக, கேரள, புதுவை
மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வு எவ்வளவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகிர்வைச்
செயல்படுத்தத், தன்னாட்சி
அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை
உடனடியாக அமைக்க வேண்டும் என்று காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இவ்வமைப்புகளை
உருவாக்கவில்லை என்றால், இத்தீர்ப்பினால்
எந்தப் பயனும் இல்லையென்று காவிரித் தீர்ப்பாயமே கூறியுள்ளது. எனவே, இவ்விருக்குழுக்களையும் அவசரச் சட்டம் இயற்றி
நடுவண் அரசு நிறுவ வேண்டும்.
தீர்ப்பாயத்தின் தீர்ப்பில்
கூறியுள்ளபடி, கர்நாடகத்தில் உள்ள
கிருஷ்ணராஜ் சாகர், ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய அணைகள், தமிழகத்திலுள்ள மேட்டூர், பவானி சாகர்,
அமராவதி அணைகள், கேரளத்திலுள்ள
பானாசுர சாகர் அணை ஆகியவற்றில், தண்ணீர் திறந்து
மூடும் நிர்வாகம் மேற்படி காவிரி மேலாண்மை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு ஒப்படைக்காதவரை, “காவிரியிலிருந்து
கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட திறந்து விட முடியாது” என்று கூறும் அடாவடித்தனம் தொடரும். அரசிதழில்
வெளியிடப்பட்ட, காவிரித் தீர்ப்பு
வெறும் ஏட்டுச்சுரைக்காய் ஆகவே இருக்கும்.
காவிரித் தீர்ப்பாயம்
வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை 1991 திசம்பரில் நடுவண்
அரசு, அரசிதழில்
வெளியிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்கவில்லை. கர்நாடகத்தின் கருணையை நம்பியிருக்கும்படி தமிழகம்
விடப்பட்டது. கர்நாடகம் இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்தவே இல்லை.
இறுதித் தீர்ப்பு அரசிதழில்
வெளியிடப்பட்டப் பிறகு, இடைக்காலத்
தீர்ப்புக்கு ஏற்பட்ட அதே கதி ஏற்படாமல் இருக்க, அவசரச்சட்டம் இயற்றி, காவிரி மேலாண்மை
வாரியம் அமைக்க வலியறுத்தி, நாளை(23.02.2013) காரி(சனி)க்கிழமை காலை 10 மணிக்கு, திருவாரூர் மாவட்டம்
அடியக்க மங்கலத்தில் உள்ள நடுவண் அரசின் பெட்ரோல் கிணறுகளை முற்றுகையிடும்
போராட்டத்தை காவிரி உரிமை மீட்புக் குழு நடத்துகிறது.
பல்வேறு கட்சிகளும், உழவர் அமைப்புகளும் இணைந்து உருவாக்கியுள்ள காவிரி
உரிமை மீட்புக்குழு நடத்தும் இப்போராட்டத்தில்,
தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய
மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களும், உணர்வாளர்களும்
பெருந்திரளாகக் கலந்து கொள்கிறார்கள். இதையே அழைப்பாக ஏற்றுத் தமிழ் மக்கள், அடியக்க மங்கலம் போராட்டத்திற்கு, எழுச்சியுடள் வருமாறு அன்போடு அழைக்கிறேன்.
இவன்,
|
பெ.மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு
Post a Comment