மாநில உரிமைப் பறிப்பு - ஆரியத்துவக் கல்வி
“தேசியக் கல்விக் கொள்கை – 2020”-ஐ
தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும்!
“தேசியக் கல்விக் கொள்கை – 2020”-ஐ
தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும்!
கி. வெங்கட்ராமன்,
பொதுச்செயலாளர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பொதுச்செயலாளர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
எந்தவொரு மாற்றுக் கருத்தையும், அது எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் கேட்டுக் கொள்வதில்லை என்ற முடிவோடுதான் நரேந்திர மோடி அரசு பல சட்ட வரைவுகளின் மீது கருத்துக் கேட்பை ஒரு சடங்காக நடத்துகிறது. கல்விக் கொள்கையிலும் இது வெளிப்பட்டிருக்கிறது.
“தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு (2019) மே மாதத்தில் முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் 484 பக்க அறிக்கையை இந்திய அரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், சில அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு - 2019-இன் மீது மிக விரிவான கருத்துரை யாடல்கள் நடைபெற்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனி நபர்களாகவும் ஏராளமான கருத்துகள் இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.
இவை எதையுமே சட்டை செய்யாமல், தாங்கள் ஏற்காததன் காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் இன்னும் மோசமாக வடிவமைத்து, 29.07.2020 அன்று இந்திய அமைச்சரவை “தேசியக் கல்விக் கொள்கை - 2020 (NEP - 2020)” என்ற பெயரால் இறுதி செய்து அறிவித்துவிட்டது.
தலைமுறை தலைமுறையாக மிகப்பெரும் விளைவு களை ஏற்படுத்தும் கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல் அரசின் கொள்கை அறிவிப்பாக அறிவித்திருப்பது, பா.ச.க. அரசு எந்தவித சனநாயகப் பண்பையும் மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்தக் கல்விக் கொள்கை வரைவு, கடந்தாண்டு முன்வைக்கப்பட்டபோது இதுகுறித்த விரிவான மறுப்பு அறிக்கையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வெளியிட்டது. கல்விக் கூடங்களிலும், கல்வியாளர்களிடையேயும், இதுகுறித்து நடைபெற்ற ஆய்வரங்கங்களிலும், கருத்துக் கேட்புகளிலும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முகாமை யான பங்காற்றியது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் கல்வியாளர்களும் மாணவர் இயக்கங்களும் மக்கள் இயக்கங்களும் இக்கல்விக் கொள்கை வரைவை முற்றிலும் நிராகரித்து, அதற்கான காரணங்களை விரிவாக முன்வைத்து மாற்றுக் கல்விக் கொள்கைகளையும் முன்வைத்தனர்.
இக்கருத்துகள் எதையும் ஆய்வுக்குக் கூட எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத்தான் இறுதி செய்யப்பட்ட “தேசியக் கல்விக் கொள்கை - 2020” வெளிப்படுத்துகிறது.
ஆரிய - சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி ஆதிக்கம், பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, கல்வியை மேலும் மேலும் தனியார்மயமாக்குவது, இவற்றிற்கேற்ப இந்திய அரசின் கைகளில் கல்வித்துறை அதிகாரத்தை முழுவதுமாகக் குவித்துக் கொள்வது என்ற நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் கல்வித்துறை இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இந்திய அரசின் கைகளுக்கு கல்வி குறித்த முழு அதிகாரத்தையும் மாற்றிக் கொள்வது என்ற சூதானத் திட்டம் இக்கல்விக் கொள்கையின் வழியாக செயல்படுத்தப்படுகிறது.
சமற்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் வேட்டைக்கு வழிதிறப்பது, மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய “நீட்” தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில் “தேசியத் தேர்வு முகமை” (National Testing Agency) உருவாக்குவது, கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் பறிப்பது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் இந்திய அரசின் முற்றதிகாரத்தை நிறுவும் வகையில் “இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்” என்ற பெயரில் இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் பிற்போக்கான கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பா.ச.க. ஆட்சி முனைகிறது.
ஆரியத்துவ ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும், குருகுலங்களையும் பாடசாலைகளையும் “அற நிறுவனங்கள் - அரசுக் கூட்டாண்மை” என்ற பெயரில் திணிப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு விட்டன. (கல்விக் கொள்கை பத்தி 3.6).
அதேபோல், “கல்விச் செயல்பாட்டாளர்கள்”, “தன்னார்வலர்கள்” என்ற பெயரால் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஊடுருவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (பத்தி 5.6 - 5.7)
கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு பி.எச்.டி. வலியுறுத்தப்படுகிறது. அதேநேரம், “சிறந்த கல்வி யாளர்கள்” என்ற பெயரால் பி.எச்.டி. ஆய்வுப் பட்டம் பெறாத ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நுழைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. (பத்தி 15.8).
ஏற்கெனவே, இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்களில் யோகா என்ற பெயரிலும், “பக்குவப் பயிற்சி”, “மன அழுத்தக் குறைப்பு” என்ற பெயராலும், விவேகானந்தர் மையத்தைச் சேர்ந்த சர்வப்பிரியானந்தா, பிருந்தா போன்றவர்கள் வகுப்புகள் நடத்தி வருவதைப் பார்க்கிறோம். இனி, இது இன்னும் விரிந்த அளவில் நடைபெறும்.
“இந்தியப் பண்பாட்டு ஒற்றுமைக்கான மொழி” என்றும், முதன்மையான செம்மொழி என்றும் சமற்கிருதத்திற்கு முடிசூட்டப்பட்டு அம்மொழியை ஆறாம் வகுப்பிலிருந்தே திணிப்பதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன (பத்தி 4.15 - 4.16).
மும்மொழிக் கொள்கை என்று இந்தித் திணிக்கப் படுகிறது. மூன்றாம் வகுப்பிலிருந்து தமிழ், ஆங்கிலத்தோடு இன்னொரு “இந்திய மொழி” - மூன்றாவது மொழிப் பாடமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்று இக்கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. (பத்தி 4.11).
நேரடியாக “இந்தி” என்று சொல்லாவிட்டாலும், இந்திய மொழிகளில் ஒன்று கட்டாயமாக்கப்படும்போது அது பெரிதும் இந்தியாகத்தான் இருக்க முடியும். ஏற்கெனவே, தமிழ்நாட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படுவதற்கு மட்டுமே ஏற்பாடுகள் உள்ளன. வேறு இந்திய மொழி என்பதற்கெல்லாம் ஆசிரியர்கள் கிடையாது.
இந்த சூதான ஏற்பாடு, திருத்தப்பட்ட வரைவுக் கொள்கையிலேயே சென்றாண்டு முன்வைக்கப்பட்டு விட்டது. வெளிப்படையாக இந்தி என்ற சொல்லை எடுத்துவிட்டு, மூன்றாவது மொழி என்ற பெயரால் இந்தியைத் திணிப்பதற்கான வரைவு சென்ற ஆண்டே அறிவிக்கப்பட்டது. அதைக் கூர்ந்து கவனிக்க அரசியல் உறுதியும், தெளிவும் இல்லாத தமிழ்நாட்டுக் கட்சிகள், இந்தித் திணிப்பை மோடி அரசு திரும்பப் பெற்றுவிட்டது என்று வெற்றிவிழாக் கொண்டாடினர். அதே வரிகள் தான் இறுதி செய்யப்பட்ட கல்விக் கொள்கையிலும் இடம் பெற்றுள்ளன.
இது போதாதென்று, 8ஆம் வகுப்பிலிருந்து சமற்கிருதம் படிப்பதை ஊக்குவிப்பதற்கு மாநில அரசுகள் சிறப்பு நிதியளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது (பத்தி 4.16).
“கவின் கலை” என்ற வகையில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழிசையும், நாட்டுப்புற இசையையும் புறந்தள்ளிவிட்டு, கர்நாடக இசையை “தெய்வீக இசை” என்ற பெயரால் திணிக்கிறது, இக்கல்விக் கொள்கை! (பள்ளிக்கல்வி குறித்த வெவ்வேறு பத்திகள்).
இன்னொருபுறம், “அறிவார்ந்த கல்விச் சீர்திருத்தம்” என்ற பெயரால் குழந்தை உளவியலுக்குப் பொருந்தாத ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஏற்கெனவே, 10 + 2 என்ற பள்ளிக் கல்வியின் பொதுவகைப் பிரிவினைக்குள் 5 + 3 + 2 + 2 என்பது இருந்து வருகிறது.
ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் முறையான பள்ளிக் கல்வி தொடங்குகிறது. கல்விச் சூதாடிகள் தங்கள் பண வேட்டைக்காக மழலையர் வகுப்புகளை (Pre KG, LKG, UKG) புகுத்தினார்கள். தங்களது குழந்தைகள் கல்வியில் பின்தங்கிவிடுமோ என்று பயந்த பெற்றோர்கள் இலட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, 2 வயது பிள்ளைகளிலிருந்து பள்ளிக்கு அனுப்பி வருகிறார்கள். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு, தமிழ்நாடு அரசும் ஆங்கிலவழி மழலையர் வகுப்புகள் தொடங்கி விட்டது.
ஆயினும், தொடக்கக் கல்வி என்பது ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான கல்வியைத் தான் இன்றும் குறிக்கிறது.
ஆனால், மோடி அரசின் இக்கல்விக் கொள்கை 5 + 3 + 3 + 4 என்று வகுப்புகளைப் பிரிக்கிறது. இதில், முதலில் வரும் “5” - பிரீ கே.ஜி. தொடங்கி 2ஆம் வகுப்பு வரையிலுள்ள ஐந்தாண்டு வகுப்புகளைக் குறிக்கிறது. அடுத்துள்ள 3 ஆண்டு படிப்பிலேயே, அதாவது மூன்றாம் வகுப்பிலிருந்தே இந்தித் திணிப்பு தொடங்கி விடுகிறது. அடுத்த மூன்றாண்டு படிப்பில் சமற்கிருதமும் சேர்ந்து விடுகிறது.
5 + 3 + 3 என்ற இந்தத் திட்டத்தில் பாடச் சுமை தாளாமல், எட்டாம் வகுப்பில் இடை நிற்கும் பிள்ளை களுக்கு “தொழிற்கல்வி” என்ற பெயரால் மடைமாற்றத் திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த வடிகட்டலுக்கு ஏற்றாற்போல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் தாய்மொழிவழிக் கல்வி என்பது கூறப்படுகிறது. அதுவும்கூட, பல ஏடுகளில் வந்திருப்பது போல கட்டாயமல்ல! கூடுமானவரை தாய்மொழிவழிக் கல்வி இருக்கட்டும் என்றுதான் இக்கொள்கை கூறுகிறது. அதற்குப் பிறகு, எட்டாம் வகுப்பு வரை முடிந்தால் தாய் மொழிவழிக் கல்வியை நீட்டிக்கலாம் என்று சொல்கிறது.
ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகு பண வேட்டைக்காக ஆங்கில வழிக் கல்வி திணிக்கப்படும்போது, தாழ்த்தப் பட்ட - பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், பெண்களுக்கும் அது பெரும் சுமையாக மாறி, எட்டாம் வகுப்போடு இடை நிற்றல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதை மடைமாற்றுவதற்காகவே, எட்டாம் வகுப்பிற்குப் பிறகு “உழைப்புத் திறன் மேம்பாடு” என்று சொல்லப்படுகிறது.
தொழிற்சாலைகளுக்குத் தேவையான குழந்தைத் தொழிலாளிகளை உருவாக்கும் உள்நோக்கம் இதில் உள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் குழந்தைத் தொழிலாளர் சட்டத்திலும் திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.
ஒடுக்குண்ட சாதியினர், பெண்கள், கிராமப்புற ஏழைகள் ஆகிய பெரும்பகுதி மக்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆரியத்துவ சூழ்ச்சித் திட்டம் இது!
அதற்கேற்ப பள்ளிகளில் உள்ள மதிய உணவுத் திட்டத்தை அரசுப் பொறுப்பிலிருந்து எடுத்து, தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்பதையும் இக்கொள்கை வரையறுக்கிறது. இந்தத் திட்டத்தை விரைவுபடுத்தும் வகையில், குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடிவிட்டு, அக்கம்பக்கத்திலுள்ள பெரிய பள்ளிகளோடு இணைத்து, பள்ளி வளாகங்கள் (School Complexes) உருவாக்கப்படும் என இக்கல்விக் கொள்கை அறிவிக்கிறது (7).
தங்கள் ஊரிலுள்ள பள்ளிகளிலேயே சேர முடியாத சூழலில் உள்ள பிள்ளைகள், 4 - 5 கிலோ மீட்டர் பயணம் செய்து அடைய வேண்டிய பள்ளிகளுக்குச் செல்வது மிக அரிது. இதன் வழியாகவும் எளிய மக்கள் கல்வியிலிருந்து துரத்தப்படுகிறார்கள்.
இவர்களுக்கென்று “திறந்த பள்ளிக்கூடங்கள்” என்ற பெயரால், ஏனோதானோவென்று கல்வி வழங்கும் முறைசாரா ஏற்பாடுகள் விரிவாக்கப்படுகின்றன. “தேசிய திறந்தப் பள்ளி நிறுவனம்” (National Institute of Open Schooling) வலுப்படுத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் கூறப்பட்டுள்ளன.
இன்னொருபுறம், பள்ளிக் கல்வியிலிருந்தே கற்றல் - கற்பித்தலுக்கு நவீனத் தொழில்நுட்பங்களை கூடுதலாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பெயரால், இணையவழி (ஆன்லைன்) வகுப்புகளையும், அதற்கும் வழியில்லாத போது தொலைக்காட்சி வழி இணையமில்லா (ஆப்லைன்) வகுப்புகளையும் விரிவாக்குவது என்று கல்விக் கொள்கை கூறிச் செல்கிறது.
இது பள்ளிக் கல்வியை முற்றிலும் குட்டிச்சுவராக்கும் ஏற்பாடாகும்! எளிய மக்கள்தான் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டு, விரைவில் கல்வியிலிருந்து வெளியேறு வார்கள்.
ஆரியத்துவத்தின் சாதியவாதமும், பெருங்குழும முதலாளிகளின் குறைகூலி வேட்டையும் தடையின்றி நடப்பதற்கு இதன் வழியாக ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
இவை எல்லாவற்றிலும் போராடி, மேல்நிலைப் பள்ளி முடித்தவர்களை கல்லூரிப் படிப்புக்குச் செல்ல விடாமல் அடுத்த வடிகட்டல் கூறப்படுகிறது. அதுதான் “அனைத்திந்திய நுழைவுத் தேர்வு”!
இப்போது, மருத்துவக் கல்விக்கு அனைத்திந்திய அளவில் தகுதி - நுழைவுத் தேர்வு “நீட்” என்ற பெயரால் செயலுக்கு வந்ததிலிருந்தே, தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் வடமாநில மாணவர்கள் குவிந்து வருவதையும், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்படுவதையும் பார்க்கிறோம். அதிலும், தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட ஏழை எளிய மக்கள் வெளியே விரட்டப்படுவதையும் பார்க்கிறோம்.
இதேபோல, “அனைத்திந்திய நுழைவுத் தேர்வு” - பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்குக் கொண்டு வருவதற்கு “தேசியத் தேர்வு முகமை” (National Testing Agency) என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படுகிறது (4.38).
இந்தத் தேர்வு முகமை, தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிடும். அந்த நிறுவனங்கள்தான் இந்த நுழைவுத் தேர்வுகளை நடத்தும்.
இப்போது தமிழ்நாட்டிலுள்ள கலை - அறிவியல் கல்லூரிகளில் பெரும்பாலும் தமிழ்நாட்டு மாணவர்களே படிக்கிறார்கள். இனி, இந்திக்காரர்களும் பிற மாநிலத்தவர்களும் கிராமப்புறக் கல்லூரிகள் வரை படையெடுத்து வருவார்கள்.
இந்த நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெறுவதற்கு இலட்சக்கணக்கில் செலவு செய்து, “தனிப்பயிற்சி”க்கு செல்ல வேண்டுமென்ற நெருக்கடி ஏற்படும். பி.எட். பட்டப்படிப்பை நான்காண்டு படிப்பாக மாற்றிவிட வேண்டும் என்ற இந்தக் கல்விக் கொள்கை அறிவிப்பு கூறுகிறது (5.2).
பள்ளிக் கல்வியிலிருந்து நேரடியாகவே இந்த பி.எட்., வகுப்பில் சேரலாம் என்கிறபோது, தமிழ், ஆங்கிலம், கணக்கு, வேதியியல், கணக்குப் பதிவியல் போன்ற எந்த சிறப்புப் பாடப் பயிற்சியும் உரியவாறு இல்லாமல் ஆசிரியப் பயிற்சியில் சேருபவர்கள் எதிலும் தனித் திறமையற்ற ஆசிரியர்களாகத்தான் வெளி வருவார்கள். இது பள்ளிக் கல்வியைப் பாழ்படுத்திவிடும். அதுபற்றி அரசுக்குக் கவலையில்லை!
ஏனென்றால், கல்லூரிக் கல்விக்கு மேல்நிலை வகுப்பில் பெறும் மதிப்பெண் கணக்கில் கொள்ளப் படாமல் “நீட்” தேர்வு போன்ற அனைத்திந்திய நுழைவுத் தேர்வு மதிப்பெண் மட்டுமே தேவை என்றாகிறபோது, பள்ளிப் படிப்பு என்பதே ஆண்டுகளை ஓட்டுவதற்கான ஏற்பாடாக சுருங்கி விடுகிறது.
பள்ளி வகுப்புகளை 5 + 3 + 3 + 4 என்று பிரிப்பதிலும், பி.எட்., ஆசிரியப் பட்டப்படிப்பை வரையறுப்பதிலும் மோடி ஆட்சியின் கல்வி குறித்த அக்கறையின்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் கல்விக் கொள்கை எந்த இடத்திலும் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மாணவர்களுக்கோ, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கோ உதவித் தொகை வழங்குவதைப் பற்றி பேச மறுக்கிறது. மாறாக, தகுதி அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்குவதைப் பற்றி மட்டுமே விளக்குகிறது.
இன்னொருபுறம், கல்லூரிகளை பல்கலைக்கழக இணைப்பிலிருந்து வெளியேற்றி, தன்னாட்சிக் கல்லூரி களாக மாற்ற வேண்டுமென்று அறிவிப்பதிலும், இந்திய மற்றும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் கல்லூரிகளையும் உயர்கல்வி நிறுவனங்களையும் நடத்த முன்வர வேண்டும் என அழைப்பதிலும் கல்லூரிக் கல்வியை தனியார்மயமாக்க மோடி அரசு துடியாய்த் துடிப்பது தெளிவாகிறது. (பத்தி 20.11 - 20.12).
பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை எந்த இடத்திலும் மாநில அரசுகளின் பங்கேற்பு இல்லாமல், மாநில அரசுகளை வெறும் கருத்துக் கூறும் பார்வையாளராக கீழ்ப்படுத்தி வைப்பதில் இக்கல்விக் கொள்கை குறியாக இருக்கிறது. அதற்கேற்ப கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மழலையர் நிலையிலிருந்து ஆய்வு நிறுவனங்கள் வரையிலும் கல்வி தொடர்பான மொத்த அதிகாரமும் இந்திய அரசின் கைகளில் இறுக்கமாக வைக்கப்படுகிறது. அதை உறுதி செய்ய இதுவரை “மனித வள மேம்பாட்டு அமைச்சர்” என்றிருந்தவர், இனி “கல்வித்துறை அமைச்சர்” என மாற்றம் பெறுகிறார்.
இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் “இராஷ்ட்டிரிய சர்வசிக்ஷா அபியான்” என்ற பெயரால் “தேசியக் கல்வி ஆணையம்” உருவாக்கப்படுகிறது (24.2). இதற்குக் கீழ்ப்படிந்த நிறுவனமாக - இதன் முடிவுகளை செயல் படுத்தும் அமைப்பாக மாநிலக் கல்வி ஆணையம் (இராஜ்ஜிய சர்வசிக்ஷா அபியான்) நிறுவப்படும் என்கிறது (24.4).
இந்த இரண்டு ஆணையங்களிலும் தனியார் முதலாளி களும், கல்வியாளர்கள் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். காரர்களும் இருப்பதற்கான உறுதியான வரைவிலக் கணங்கள் பிரிவு 24இல் பல பத்திகளில் கூறப்பட்டுள்ளன.
இந்த இந்திய அரசின் கல்வி ஆணையத்துக்கு உட்பட்ட இன்னொரு உயரதிகார அமைப்பாக “தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம்” (National Higher Education Regulatory Authority) உருவாக்கப்படுவ தாகவும், இனி யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.சி. போன்றவை கலைக்கப்படும் என்றும் இந்தக் கல்விக் கொள்கை கூறுகிறது (19).
மொத்தத்தில், கல்வியில் மாநில அதிகாரத்தை முற்றிலும் துடைத்தெறிவது, ஆரியத்துவ மேலாதிக்கம், சமற்கிருத - இந்தித் திணிப்பு, பெருங்குழும வேட்டைக்குக் கல்வித்துறையை அகலத் திறந்துவிடுவது, பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை கல்வி யிலிருந்து விலக்கி குறைகூலி உழைப்பாளர்களை உருவாக்குவது, ஒட்டுமொத்தக் கல்விச் சூழலை சீர்குலைப்பது என்ற வடிகட்டிய பிற்போக்கான இக் கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
ஆனால், இக்கல்விக் கொள்கை வரைவு நிலையில் விவாதத்தில் இருந்தபோதே இதன் பல்வேறு கூறுகளை மோடி அரசும், அதற்கு அடிபணிந்து போகிற எடப்பாடி பழனிச்சாமி அரசும் ஏற்கெனவே செயல்படுத்தத் தொடங்கிவிட்டன.
இவை அனைத்தையும் எதிர்த்து, களம் காண வேண்டிய பெரும் பொறுப்பு இந்திய மக்கள் அனைவருக்கும் இருந்தாலும் தமிழ்நாட்டு இளையோருக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு, இக்கல்விக் கொள்கையிலுள்ள மும்மொழித் திட்டத்தை எதிர்த்தால் மட்டும் போதாது! முற்றிலும் மக்களுக்கும் - மாநில உரிமைகளுக்கும் எதிரான “தேசியக் கல்விக் கொள்கை - 2020”-ஐ முழுவதுமாகக் கைவிட வலியுறுத்த வேண்டும்! இப்பிற்போக்குக் கொள்கையை தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக அறிவிக்க வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment