கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 23 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழ்ந்தது பெரும் துயரச் செய்தியாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்தவர்கள். மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி ஊராட்சிப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய இவர்களின் வீடுகள், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே மலைச் சரிவுக்குக் கீழே இருந்தன.
கடந்த 06.08.2020 அன்றிரவு பெய்தப் பெருமழையினால், மலைப் பகுதி இடிந்து இந்த 20 வீடுகளையும் மூடிவிட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் மூன்று பேர் மட்டும் தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்புப் படையினர் 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு உள்ளார்கள். இன்றுவரை (09.08.2020) 42 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டோரை உயிராக அல்லது உடலாக மீட்பதற்கு 2 நாட்களுக்கு மேல் தேவைப்படுவது வியப்பாக உள்ளது.
மேலும், 08.08.2020 அன்று மீட்கப்பட்ட 27 உடல்களை உறவினர்கள் கேட்டும், அவர்களிடம் ஒப்படைக்க மறுத்து, அத்தேயிலைத் தோட்டத்தில் ஒரே குழிக்குள் அனைத்து உடல்களையும் புதைத்திருக்கிறது கேரள அரசு. இவர்கள் கொரோனா நோயாளிகள் அல்லர்; ஊர் பேர் தெரியாத வழிப் போக்கர்களும் அல்லர்! வீடுகளில் தங்கி வேலை பார்த்து குடும்பம் நடத்திய மக்கள். அப்பகுதியிலுள்ள மற்ற குடியிருப்புகளில் இவர்களின் உறவினர்களின் குடியிருப்புகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்ய வசதியாக, தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றாடிக் கேட்டுள்ளனர். ஆனால், கேரள அரசு அதிகாரிகள் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.
கேரள அரசு தமிழர்களின் மனித மாண்புகளை துச்சமாகக் கருதி, இழிவு செய்துவிட்டதாகவே கருதுகிறோம்.
இதே கேரளத்தில், 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இது மிகவும் கொடுமையான துயரச் செய்தி! இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருக்கிறது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. கோழிக்கோடு மருத்துவமனைக்கு சென்று விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்த் தொழிலாளிகளை பார்க்க முதலமைச்சர் செல்லவில்லை.
பாட்டாளி வர்க்கத்திற்காகவே கட்சி நடத்தக்கூடிய கேரளத்தின் சி.பி.எம். முதலமைச்சர், இவ்வாறான பாகுபாடுகளுக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இச்செயல் இனப்பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தமிழ்நாட்டின் குரலுக்கு செவிமடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், ஒரே புதைகுழியில் போட்டு அனைத்து உடல்களையும் புதைக்கச் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இடுக்கி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழர்கள்! இதுபோன்ற விபத்துகள் இதர குடியிருப்புகளில் நடைபெறாமல் தடுப்பதற்கு, ஆபத்தான குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தற்காலிக மாற்று ஏற்பாடு செய்து பாதுகாக்குமாறு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment