முனைவர் சௌ. வேணுகோபால் பங்களிப்பு
என்றும் வாழும்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தொடக்ககால அமைப்பாளர்களில் ஒருவரும், மொழியியல் அறிஞருமான முனைவர் சௌ. வேணுகோபால் அவாகள், இன்று (24.08.2020) விடியற்காலை 12.10 மணிக்கு சிதம்பரத்தில் தமது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி, பெரும் துயரமளிக்கிறது.
மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியில் வந்து, தனி இயக்கம் நிறுவிய போது சிதம்பரம் தோழர்கள் அந்த அமைப்பின் முதுகெலும்பு போல் இருந்து செயல்பட்டார்கள். புதிய அமைப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம் 1985இல் சிதம்பரத்தில்தான் நடந்தது. அங்கு தான் புதிய அமைப்பு பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்தோம்.
அமைப்பின் தலைமையகத்தை சிதம்பரம் லால்கான் தெரு சந்தில் பல ஆண்டுகள் வைத்திருந்தோம். இப்பொழுது அது மாவட்ட அலுவலகமாக உள்ளது. அப்பொழுது தொடக்கத்திலிருந்து இயக்கத்திற்கான கருத்தியல்களை வளர்த்தல், செயல் திட்டங்களை வகுத்தல், களப்பணியாற்றல் ஆகிய மூன்றிலும் காத்திரமான பங்களிப்பு வழங்கியவர், முனைவர் சௌ. வேணுகோபால் அவர்கள். இயக்கத்தின் முழுநேரச் செயல்பாட்டாளராகப் பணியாற்றினார்.
இன்றைக்கும் நாங்கள் புதிய கருத்துகளை சிந்திக்கும்போது, தருக்கங்கள் நடத்தும்போது தோழர் சௌ.வே. அவர்கள் வழங்கிய கூர்மையான தருக்கங்களை நினைவு கொள்கிறோம்.
முனைவர் சௌ.வே. அவர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர். அவர் பணிக்குப் போக விரும்பவில்லை. மக்கள் பணிக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். மார்க்சிய நூல்களை நன்கு கற்றவர். மண்ணுக்கேற்ப மார்க்சியத்தை மறுவார்ப்பு செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர். தமிழ்த்தேசியத்தை வரையறுத்து, முதன்மைப்படுத்த நாங்கள் செய்த தருக்கங்களில் நல்ல வண்ணம் கருத்தியல் பங்களிப்பு வழங்கினார்.
உடல் நலம் குன்றிய நிலையில், மூப்பும் ஏற்பட்ட சூழலில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பணிகளை செய்ய இயலாமல், வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவர் செயல்பட்ட காலத்தில், தன் குடும்பத்தினரை இயக்கச் செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுத்தினார். அவருடைய மகன்களான ஆதிவராகன், இரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இயக்கப் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டார்கள். அவருடைய மகள் சாந்தி இயக்க ஆதரவாளராக இருந்தார்.
சிறந்த அறிவாளரை – கருத்துப் பங்களிப்பாளரை எமது இயக்கத்தை நிலைநிறுத்தக் களப்பணி ஆற்றிய வீரரை இழந்த பெரும் சோகம் என் மனத்தைக் கவ்விக் கொண்டுள்ளது. முனைவர் சௌ. வேணுகோபால் அவர்களுடைய பண்பும், தோழமைச் சிறப்பும் கருத்துப் பங்களிப்பும் என்றும் எங்கள் நினைவிலிருக்கும்; வழிகாட்டும்!
முனைவர் சௌ.வே. அவர்களுடைய மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/ Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment