உடனடிச்செய்திகள்

Wednesday, August 26, 2020

“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை!” “தினத்தந்தி” ஏடு தலையங்கம்!



“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை!”
“தினத்தந்தி” ஏடு தலையங்கம்!


தமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் பணிகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம், தொடர்ந்து போராடி வருகின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஈரோட்டில் நாம் நடத்திய “வெளியாரை வெளியேற்றுவோம்!” மாநாடும், அதைத் தொடர்ந்து நாம் தமிழ்நாட்டின் பல்வேறு நடுவண் அரசு நிறுவனங்களின் முன்பு நடத்திய போராட்டங்களும், பரப்புரைகளும் இன்றைக்கு நம் முழக்கத்தை, தமிழ் மக்களின் முழக்கமாக்கியுள்ளது. தி.மு.க. உள்ளிட்ட தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சிகள் தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசுப் பணிகளில் 90 விழுக்காட்டுப் பணிகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, இன்றைய (26.08.2020) “தினத்தந்தி” நாளேட்டில், “தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை!” என்ற முழக்கத்தை ஆதரித்து, பாராட்டத்தக்க வகையில் தலையங்கம் தீட்டியுள்ளனர். அத்தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :

"வேலையில்லாத, வருமானமில்லாத வாழ்க்கை என்பது, கப்பல் இல்லாத கடல் யாத்திரை போன்றது. பூக்கள், பழங்கள் இல்லாத மரத்தை போன்றது என்பார்கள். அந்தவகையில், மத்திய அரசு என்றாலும் சரி, தமிழக அரசு என்றாலும் சரி, வேலைவாய்ப்புகளை பெருக்க மிகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இங்கே கல்வி வளர்ச்சி அதிகம். படித்து முடித்த இளைஞர்கள் வேலையில்லை என்றால் சோர்ந்து விடுகிறார்கள். சமீப காலங்களாக மத்திய அரசாங்கப் பணிகளில், அது ரெயில்வே பணி என்றாலும் சரி, தபால் அலுவலகப்பணி என்றாலும் சரி மற்றும் எந்த மத்திய அரசு அலுவலகங்கள் என்றாலும் சரி, வங்கிகள் என்றாலும் சரி, ஏராளமானவர்கள் தமிழ் தெரியாதவர்களாகவும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

பல மாநிலங்களில் இவ்வாறு தங்கள் மாநில மொழி தெரியாமல், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து பணியாற்றுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், இனி அந்த மாநில அரசுப் பணிகள், அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துவிட்டார். இதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக கூறியிருக்கிறார். “மத்திய பிரதேசத்தின் வளங்கள், அந்த மாநிலங்களின் குழந்தைகளுக்குத்தான். இந்த மாநில வளர்ச்சியில் அவர்களின் திறமையை பயன்படுத்தப்போகிறோம். இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அரசுப் பணிகளில் சேர்ந்து மாநிலத்தின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதுதான் என் கனவு” என்று கூறியிருக்கிறார். முன்னாள் முதல்-மந்திரியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத்தும் இதற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.

மத்திய பிரதேசம் மட்டுமல்ல, மற்ற சில மாநிலங்களிலும் இந்த கருத்து இப்போது எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பணிகளில் சேர்ந்துவிடுகிறார்கள் என்ற குறை இளைஞர்களிடையே இருக்கிறது. இதற்கு காரணம், அரசியல் சட்டத்தில் இந்தியாவிலுள்ள இளைஞர்கள் யாரும், எந்த மாநிலத்திலுள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் கலந்துகொள்ள வழியிருக்கிறது. ஆனால், அந்தப்பணிக்கு தேர்வாகி 2 ஆண்டுகளுக்குள், அந்த மாநில மொழியில் தேர்ச்சிபெற வேண்டும் என்று இருக்கிறது. இந்த ஒரு சட்டத்தின் உட்பிரிவுகளை பயன்படுத்தி, தமிழக அரசு பணிகளிலும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்துவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளிலும், தமிழக அரசுப் பணிகளிலும், பிற மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்த வேலைவாய்ப்புகளை பறிகொடுத்த தமிழக இளைஞர்கள் மத்தியில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. இது நமக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு அல்லவா?, இதை எங்கிருந்தோ வந்த இவர்கள் தட்டிப்பறித்துவிட்டார்களே? என்ற மனக்குறை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்போது, மத்திய அரசாங்கத்தின் அனைத்து பணிகளுக்கும் ஒரே தேர்வை நடத்தும் வகையில், தேசிய பணியாளர் நியமனத்தேர்வு முகமை என்ற அமைப்பை ரூ.1,517 கோடியில் புதிதாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆக, மத்திய அரசுப் பணிக்கான தேர்வில், தமிழக இளைஞர்கள் உள்பட அனைத்து மாநில இளைஞர்களும் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டிலும் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தநிலையில், மத்திய பிரதேச அரசு எடுத்த முடிவைப்போல மாநில அரசுப் பணிகளில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்ற துணிச்சலான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவேண்டும். அதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்பதுதான் வேலைவாய்ப்புகளைத் தேடி அலையும் இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

இது ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம், அனைத்து போட்டித் தேர்வுகளிலும், அது மத்திய அரசாங்க போட்டித்தேர்வு என்றாலும் சரி, தமிழக அரசு போட்டித்தேர்வு என்றாலும் சரி, அதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் வகையில் தங்கள் திறமைகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும், அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்".

இவ்வாறு “தினத்தந்தி” ஏடு தலையங்கம் தீட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே எனத் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT