உடனடிச்செய்திகள்

Tuesday, August 11, 2020

பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களின் கதி என்ன? - முதலமைச்சர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்! - ஐயா பெ. மணியரசன் அறிக்கை!


பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களின்
கதி என்ன? - முதலமைச்சர்
உடனடியாக முடிவெடுக்க வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


பள்ளிகளில் பயின்று, காலாண்டு, அரையாண்டுத் தேர்வெழுதிய மாணவர்களுக்குக் கொரோனா காரணமாக இறுதித்தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் அரசு தேர்ச்சி வழங்கியுள்ளது. இத்தேர்ச்சி முடிவுகள் 10.08.2020 அன்று வெளியிடப்பட்டது. அம்முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் சற்றொப்ப ஒரு இலட்சம் மாணவர்கள், தனித்தேர்வர்களாக, நேரடியாகத் தேர்வெழுதப் பதிவு செய்து, தங்களுக்குரிய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) வழங்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாகத் தேர்வுகளை அரசு நடத்தவில்லை.

இந்தத் தனித்தேர்வர்களுக்குத் தமிழ்நாடு அரசு, தேர்வு வைக்கப் போகிறதா அல்லது வேறு வகையில் தேர்ச்சி வழங்கப் போகிறதா என்ற விவரத்தை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இதுபற்றி எதுவும் தெரியவில்லை.

இன்று (11.08.2020) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை 24.08.2020 அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இந்நலையில், ஒரு இலட்சம் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் குழம்பிப் போய் உள்ளார்கள்.

அருள்கூர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி இந்தத் தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் எதிர்காலம் தங்கள் முடிவில் அடங்கியிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT