
தமிழகத்தில் இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை தமிழினத்திற்கு விடிவில்லை: இயக்குநர் சீமான்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2008, 02:06.32 AM GMT +05:30 ]
ஈரோட்டில் தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில், "தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம்” 18-12-2008 அன்று நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், தமிழ்த் திரை இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு உரைவீச்சு நடத்தினர்.
சீமானின் உரைவீச்சு மக்களை பெருமளவில் கவர்ந்தது. அப்பொதுக் கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியதாவது:
இராமேஸ்வரத்தில் பேசியதற்காக என்னைக் கைது செய்தனர். என்ன பேசினேன் என்று எவனுக்கும் தெரியவில்லை. என்னை எதற்காக கைது செய்கிறீர்கள் என பொலிஸ் அதிகாரியிடம் கேட்ட போது, "நல்லா பேசுனீங்க சார் எல்லாம் எங்க தலையெழுத்து' என்று அழைத்துச் சென்றார். கைது செய்து உள்ளே வைத்தனர். இதோ இப்போது வெளியே வந்து விட்டேன்.
ஈழ விடுதலை தீபம் அணைக்க முடியாமல் எரிகிறது. தடை செய்யப்பட்ட இயக்கம் எனக் கூறப்படும் விடுதலைப் புலிகள் பற்றி பேசக் கூடாது என்கின்றனர். யாரைக் கேட்டு தடை செய்தீர்கள்? அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த அந்த நான்கு ஆண்டுகளில், அவசர அவசரமாக விடுதலைப் புலிகள் மீது தடை போட வேண்டிய அவசியம் என்ன? நான் பேச வேண்டும் சொந்த அண்ணனான பிரபாகரனைப் பற்றி பேசுவதை தடுக்க என்ன சட்டம் போடுவாய்? என் கனவு, சிந்தனை, உணர்வு அனைத்தும் பிரபாகரனுடன் ஒன்றிவிட்டது அதை ஒன்றும் பண்ண முடியாது.
உள்ளே போட்டால் இன்னும் அதிகமாகப் பேசுவேன். சீமான் பேசுவதை நிறுத்தினான் என்றால், தனி ஈழம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அவன் இறந்திருக்க வேண்டும். உலகிலேயே பிரபாகரனைப் போன்ற வீரன் இல்லை. அவனை விட்டால் உலகத்தில் வலிமைமிக்க இராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என பயப்படுகின்றனர். "ராஜிவை விடுதலைப்புலி கொன்னுட்டாங்க'ன்னு காங்கிரஸ்காரர்கள் பல்லவி பாடுகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜிவ் இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா?
இலங்கையில் போரை நிறுத்தும் வரை யாருக்கும் ஓட்டு போடாதீர்கள். ஓட்டு கேட்டு வருபவர்களை துரத்தியடியுங்கள். காந்தி, இந்திரா ஆகியோர் கொல்லப்பட்டனர். கொலைகாரர்களை என்ன செய்தாய்? பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து துப்பாக்கியாக பிரபாகரன் கையில் உள்ளது. அவன் நமது குலதெய்வம்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசம் மீது எப்படி நேசம் வரும்? தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, கேரளாவை யாராவது கண்டித்தார்களா? 406 தமிழக மீனவர்களை, இலங்கை இராணுவம் கொன்றது. இதை இந்திய தேசம் கண்டித்ததா? இல்லை. நவீன துப்பாக்கி, தொலைநோக்குக் கருவி, தோட்டாக்களை இலங்கை இராணுவத்துக்கு கொடுக்கும் இந்தியா தான் தமிழினத் துரோகி.
இந்தியா கண்டுகொள்ளாமல் இருந்தால், இலங்கையை ஒரு கை பார்த்து விடுவான் எங்கள் அண்ணன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கொளத்தூர் மணி ஆகியோரின் பேச்சுக்களும் அங்கிருந்த மக்களிடம் பெரும் வீச்சை ஏற்படுத்தியது. மக்கள் தெருவெங்கும் கூடி நின்று இப்பேச்சைக் கேட்டனர்.
இப்பேச்சையடுத்து இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி ஆகியோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி மொடக்குறிச்சிக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனச்சாமி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டவாகள் 18-12-2008 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
படங்களுக்கு நன்றி : தமிழ் செய்தி மையம் இணையதளம்
Post a Comment