”தமிழர் எழுச்சி உரை வீச்சு” என்ற தலைப்பில் ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 14-12-2008 அன்று நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோர் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலையிலுள்ள மர்மங்களை தெளிவாக எடுத்துக்கூறியும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய இந்திய அரசு உதவி செய்வதையும் கண்டித்து உரையாற்றினார்கள்.
இவர்கள் பேச்சுக்கு தமிழக காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இயக்குனர் சீமான் வத்தலகுண்டு அருகே காவல்துறையால் 19.12.2008 வெள்ளியன்று கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நண்பகலில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியையும் காவலர்கள் கைது செய்தனர். இரவு 7 மணியளவில் சென்னையில் தமதுக் கட்சித் தலைமையகத்தில் வைத்து பெ.மணியரசன் கைது செய்யப்பட்டார்.
இதனை அறிந்த தமிழுணர்வாளர்கள் தமிழகம் முழுவதும் கைதைக்கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - மறியல் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இக்கைது நடவடிக்கைகளை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ., இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Post a Comment