உடனடிச்செய்திகள்

Wednesday, December 24, 2008

செங்கிப்பட்டியில் காவல்துறை இன்றும் அட்டூழியம்

கி.வெங்கட்ராமன் அறிக்கை

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 14-12-2008 அன்று ஈரோட்டில் நடந்திய "தமிழர் எழுச்சி உரைவீச்சு" பொதுக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் த.செ. மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

சிங்கள அரசின் இனவெறியால் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது தெரிந்திருந்தும் இந்திய அரசு சிங்கள அரசிற்கு ஆய்தங்கள் வழங்கி இப்போரை ஊக்குவிக்கின்றது. இந்திய அரசின் இப்போக்கைக் கண்டித்தும் இந்திய அரசின் இச்செயலை நியாயப்படுத்தி ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பிரதிநிதியாகவே செயல்படும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும், கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் தன்னெழுச்சியாக போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களில் ஈடுபட்ட பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் புதலூர் ஒன்றியம் சார்பாக கண்டன ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் 22-12-2008 அன்று மாலை நடந்தது. இந்நிகழ்வின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் அமைச்சர் இளங்கோவன் ஆகியோரது உருவப்படங்கள் கொளுத்தப்பட்டன. இதனால் காவல்துறை முதலில் 5 த.தே.பொ.க.வினரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

பின்னர், தீடீரென அங்கு வந்த அதிரடிப்படையினர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை பயன்படுத்தி அதில் கண்ணில்படுபவர்களையெல்லாம் கைது செய்ய வேண்டும் என்ற நோக்குடன் செங்கிப்பட்டியில் வீடு வீடாக "தேடுதல் வேட்டை" என்ற பெயரில் பெண்களையும் குழந்தைகளையும் மிரட்டி அச்சுறுத்தி அட்டூழியங்களில் ஈடுபட்டது. அதன் முடிவில் 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்றும்(24-12-2008) அதிரடிப்படை மற்றும் காவல்துறையினர் த.தே.பொ.க. அமைப்பு அமைந்துள்ள செங்கிப்பட்டி, புதுக்குடி, காமாட்சிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் வீடு வீடாக சென்று உள்ள பெண்களை குழந்தைகளையும் மிரட்டி அச்சுறுத்தி அத்து மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இன்று மட்டும் 8 பேர் இந்நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கிப்பட்டியில் தமிழக அரசின் காவல்துறை மற்றும் அதிரடிப்படையின் இந்த அத்துமீறியச் செயலை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவ்வகை அடாவடி நடவடிக்கைகளை மனித உரிமை ஆர்வலர்களும் தமிழ் உணர்வாளர்களும் கண்டிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கி.வெங்கட்ராமன்,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம் : தஞ்சை,
நாள் : 24-12-2008.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT