காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்பி ஆட்சி நடத்துவது சனநாயகமல்ல!
பரமக்குடி - மதுரை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில்
பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேச்சு!
"காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்பி ஆட்சி நடத்துவது சனநாயகமல்ல" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.
பரமக்குடியில் காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. தஞ்சை இரயிலடியில் இன்று(16.09.2011) மாலை நடந்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் அயன்புரம் சி.முருகேசன் தலைமை தாங்கினார்.
தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்ப, குழுமியிருந்த தோழர்கள் அதனை எதிரொலித்தனர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பாக்கியராஜ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, சி.பிஐ. எம்-எல் அமைப்பின் மதிவாணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார். அப்போது அவர், "காவல்துறை அதிகாரிகள் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டு ஏழு அப்பாவிகளை பரமக்குடியில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பலரை படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். மதுரையில் எந்த வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை சுட்டு படுகாயப் படுத்தியிருக்கிறார்கள். இது சட்டப்படி குற்றம். வருவாய்துறை அதிகாரிகளின் உத்தரவில்லாமலும் முன்னெரிச்சரிக்கை இல்லாமலும் காவல்துறை தன் ஆத்திரத்தை காட்டுமிராண்டித்தனமாக காட்டியிருக்கின்றனர்.
குற்றமிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நடந்து விட்ட தவறுக்கு பரிகாரம் தேடுவதற்கு பதிலாக அந்தக் குற்றங்களை நியாயப்படுத்துகிறார், முதலமைச்சர் செயலலிதா. அதிகாரிகள் செய்த குற்றத்தை தன் தலையில் சுமக்கிறார். காவல்துறையினர் தவறு செய்தாலும் அவர்களைக் காப்பாற்றி தனக்கு விசுவாசமுள்ளவர்களாக அவர்களை வைத்துக் கொள்ள கருதும் தவறான நடவடிக்கை இது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் 7 பேரைக் கொன்ற பாவ மூட்டையை தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டுள்ளார் செயலலிதா.
யாரையும் சட்டை செய்யாமல் இதே போக்கில் போனால், கடந்த காலங்களைப் போலவே கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேற அவரே காரணமாகி விடுவார். காவல்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை நம்பி ஆட்சி நடத்துவது சனநாயகமல்ல. அப்பாவி மக்களைக் கொன்ற காவல்துறையினரையும், அதை நியாயப்படுத்தும் செயலலிதாவையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு எண் 302இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை உடனடியாக இடை நீக்கம் செய்ய வேண்டும். சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் செயலலிதா, மறியலில் வெறும் 500 பேர் தான் ஈடுபட்டனர் என்று கூறினார். ஆனால், அதற்கு நேர் மாறாக காவல்துறையோ 1000 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. உடனடியாக இந்த வழக்கை இரத்த செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்"
என்று பேசினார். இவ்வார்ப்பாட்டத்தில், திரளான இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
மதுரையில் ஆர்ப்பாட்டம்
மதுரை அண்ணா பேருந்து திருவள்ளுவர் சிலை அருகில், இன்று மாலை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் ரெ.இராசு, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், வழக்கறிஞர் பகத்சிங், பெ.தி.க. அமைப்பாளர் மாயாண்டி, சி.பி.ஐ.–எம்-எல். மாவட்டச் செயலாளர் மேரி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பாளர் சரவண பாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சி சூரிய தேவ், தமிழ்ப் புலிகள் இயக்கம் பேரறிவாளன், தமிழர் தேசிய இயக்கம் கணேசன், சித்திரை தானி ஓட்டுநர் சங்கத் தலைவர் இராசேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
மேலும், இதே போன்று வரும் திங்களன்று மாலையில் சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்தி:
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு, சென்னை.
Post a Comment