உடனடிச்செய்திகள்

Tuesday, September 27, 2011

கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை இழுத்து மூடுக - ஓசூர் த.தே.பொ.க. மாநாட்டில் தீர்மானம்!

கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை இழுத்து மூடுக என வலியுறுத்தி ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 25.09.2011 அன்று நடத்திய தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு:
 
 கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை இழுத்து மூடுக!

 

கூடங்குளத்தில் இரசியா நாட்டு உதவியுடன் இந்திய அரசு கட்டி வரும் அணுஉலைகள் வரும் திசம்பர் மாதத்திலிருந்து மின் உற்பத்தியைத் தொடங்கவிருந்த நிலையில், அணுமின் நிலையத்திற்கு எதிராக பெருந்திரள் மக்கள் போராட்டம் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ளது.

 

கடந்த 1987ஆம் ஆண்டு சோவியத் இரசியாவுடன் இந்திய அரசு இதற்கான ஒப்பந்தத்தை இயற்றியதிலிருந்தே நாம் இதற்காக கண்டனக் குரல்களை எழுப்பி வந்திருக்கிறோம். 1989ஆம் ஆண்டில்   கூடங்குளம் பகுதியில் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்தின் கீழ் .தே.பொ.. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அணுஉலைத் திட்டத்தை எதிர்த்துப் போராடின.

 

2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானில் எழுந்த ஆழிப்பேரலைகள் அங்கிருந்த புகுஷிமா அணுஉலையை விழுங்கிய நிகழ்வு உலகளாவிய அளவில் அணுசக்திக்கு எதிரான விவாதங்களை வலுவாக எழுப்பியது. இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் மீனவ மக்கள் 127 பேர் ஆண்களும் பெண்களுமாய் சாகும் வரை உண்ணாப்போரை தொடங்கி நடத்தினர். அது வெகு மக்கள் போராட்டமாக எழுச்சி பெற்று பல்வேறு கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் ஆதரவைப் பெற்றது..

 

மக்கள் போராட்ட வீச்சின் விளைவாக, தமிழக முதலமைச்சர் செயலலிதா போராட்ட அமைப்புப் பேராளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மக்களின் அச்சம் நீங்கும் வரை, கூடங்குளம் அனுமின் நிலையப் பணிகளை இந்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி தமது அமைச்சரவை  தீர்மானம் நிறைவேற்றும் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, மக்களின் உண்ணாப்போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தற்போது கூடங்குளத்தில் தற்காலிகமாகத் தான் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொண்டு, அங்குள்ள அணுஉலைகள் முற்றிலுமாக அகற்றப்படாதவரை மக்களுக்கு முழுமையான வெற்றி கிடையாது என்பதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

 

அணுமின் நிலையங்களில் வெடிப்பு ஏற்பட்டால் தான் பாதிப்புகள் வரும் என்பது கிடையாது. அணுஉலைகள் அமைக்கப்பட்டாலேயே அதிலிருந்து வெளிவந்து காற்றில் கலக்கும் கதிர்வீச்சின் மூலமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கு கல்பாக்கம் அணுமின் நிலையமே எடுத்துக்காட்டு. கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இன்றும் கூட குழந்தைகள் உடலியல் குறைபாடுகளுடனும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உடல் குறைபாடுகளுடன் பிறக்கின்றன.

 

எனவே, கூடங்குளம் அனுமின் நிலையத் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும் என்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்றும் இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

அணுசக்தி என்ற அழிவுத் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட மாற்று மின் உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மீது கவனம் செலுத்தி அவற்றை வளர்த்தெடுக்க வேண்டுமென இம்மாநாடு இந்திய, தமிழக அரசுகளை வலியுறுத்துகிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT