பரமக்குடி படுகொலையைக் கண்டித்து கோவையில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!
பரமக்குடி - மதுரையில் தமிழகக் காவல்துறையினரால் ஒடுக்கப்பட்ட மக்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதலை மேற்கொண்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட வேண்டும், பலியானோர் குடும்பத்திற்கு 10 இலட்சமும் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றது.
கடந்த 16.09.2011 அன்று தஞ்சை மற்றும் மதுரையில் த.தே.பொ.க. சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புத் தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதன் ஒரு பகுதியாக, இன்று(18.09.2011) கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் அருகில், காலை 11 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் பா.தமிழரசன் தலைமை தாங்கினார். அவர், "பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறையினர் நடத்தியத் தாக்குதல் தமிழ் இனத்தின் மீதான தாக்குதலே" என்று வலியுறுத்திப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக இளைஞர் முன்னணி மாநகர அமைப்பாளர் பா.சங்கர், த.இ.மு. பெரிய கடை வீதி கிளைச் செயலாளர் பொன் லிங்கம், காந்திப் பூங்கா கிளைச் செயலாளர் கு.ராஜேஷ்குமார், செல்வபுரம் கிளைச் செயலாளர் பி.சுரேஷ் மற்றும் தோழர்கள் தமிழரசன்(புரட்சிகர இளைஞர் முன்னணி), கருப்பசாமி(தமிழர் உரிமை முன்னணி), அசோக் மள்ளர்(மள்ளர் மீட்புக் கழகம்) ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம்
இதே கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாளை(19.09.2011) மாலை 5 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் க.அருணபாரதி, தமிழுரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழ்க்கனல், வழக்கறிஞர் இளவரசன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு, சென்னை-17.
Post a Comment