"ஆபத்தில்லாத புற்றுநோய் கிடையாது! ஆபத்தில்லாத அணுஉலை கிடையாது"
கூடங்குளம் பட்டினிப்போர் திடலில் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேச்சு!
"ஆபத்தில்லாத புற்றுநோய் என்பது கிடையாது. அது போல ஆபத்தில்லாத அணு உலை கிடையாது" என கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் நடைபெற்று வரும் பட்டின் போராட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.
கருப்புக் கொடி ஏற்றல், சாலை மறியல், கடையடைப்பு, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு என கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து கூடங்குளத்தில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்புடன் போர்க்குணமிக்கப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 127 பேர் காலவரையற்ற உண்ணாப்போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டினிப்போரின் 8வது நாளான நேற்று(18.09.2011), அப்போராட்டத்தை ஆதரித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை அ.ஆனந்தன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் திருச்செந்தூர் தமிழ்மணி உள்ளிட்ட தோழர்கள் உண்ணாப்போராட்டம் நடைபெற்றத் திடலுக்க நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, போராட்ட மேடையில் உரையாற்றிய த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், "'வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரம் கொள் கூட்டம்' என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் வரிகளை நினைவூட்டும் வகையில் இங்கு பெருந்திரளாக்க் கூடியிருக்கிறீர்கள். அதிலும் மகளிர் கூட்டம் மிக அதிகமாக இருக்கிறது. நம்முடைய கிராம மக்களுக்கு அணு உலைகளால் நேரும் ஆபத்துகளை விளக்கிப் புரிய வைத்தவர்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அணு உலைகளை ஆபத்திலாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்று இங்கு குழப்பி வருகிறார்கள். கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம் 1988ஆம் ஆண்டு சோவியத் இரசியாவுடன் போட்ட பிறகு அதனை எதிர்த்து அப்போதே அணு உலை எதிர்ப்பு இயக்கம் போராடியது. அந்த இயக்கங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கலந்து கொண்டது. 1989ஆம் ஆண்டு கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் நாங்கள் கலந்து கொண்டோம். அதில் சிறப்பு பேச்சாளராக ஜார்ஜ் பெர்ணான்டஸ் கலந்து கொண்டோர். அதே போல புதுச்சேரியிலும் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்திலும் நாங்கள் கலந்து கொண்டோம்.
அப்பொழுதெல்லாம் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் "கத்தியை காய்கறி நறுக்கவும் பயன்படுத்தலாம், ஆளை கொலை செய்யவும் பயன்படுத்தலாம். நாம் நல்ல காரியத்துக்கு பயன்படுத்துவோம். அணுசக்தியை மின்சார உற்பத்திக்கு பயன்படுத்துவோம்" என மக்களை குழப்பி வந்தார்கள். புற்றுநோயில் ஆபத்தில்லாத புற்றுநோய் உண்டா? என்று நாங்கள் திருப்பிக் கேட்டோம். ஆபத்தில்லாத புற்றுநோய் என்பது கிடையாது. அதே போல், ஆபத்தில்லாத அணுஉலைக் கிடையாது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நான்கு அடுக்கு குளிரூட்டிகள் இருக்கின்றன, அது கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் உள்ளது, முதன்மையான நில நடுக்கப்பகுதியில் கூடங்குளம் இல்லை என்றெல்லாம் சொல்லி கூடங்குளம் அணுஉலையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அணுஉலையால் ஏற்படும் ஆபத்து என்பது சுனாமியால் தான் வர வேண்டும் என்பதல்ல. ஆழிப்பேரலை வராமலும் நிலநடுக்கம் இல்லாமலும் சாதாரணமாக இருக்கும் போதே அணுஉலைகள் ஆபத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே அணுமின் நிலையம் அமைந்திருக்கும் கல்பாக்கத்தில் ஆய்வு செய்தவர்கள், குறிப்பாக அவ்விடத்தைச் சுற்றியுள்ள 30 கிலோ மீட்டர் பகுதியில் குழந்தைகள் ஊனமுற்று பிறப்பதையும், பலருக்கு புற்றுநோய் வந்திருப்பதையும், ஆடு-மாடுகள் ஊனமுற்று பிறப்பதையும் கணக்கெடுத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மருத்துவர் கு.புகழேந்தி இது குறத்து களஆய்வுகள் செய்து கல்பாக்கம் அணுமின் நிலையம் சாதாரண காலத்தில் வெளியிடும் கதிர்வீச்சு மேற்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்று மெய்ப்பித்துள்ளார்.
எனவே, அணுஉலை இருக்கிறது என்பதே ஆபத்தானது தான். உலகம் முழுவதும் உள்ள அணு உலைகளை மூட வேண்டும். வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளான ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம், நார்வே, டென்மார்க் போன்ற நாடுகள் நிரந்தரமாக அணு உலைகளை மூடிவிட்டன. இன்றும் சில நாடுகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அணுஉலைகளை மூடப்போவதாக அறித்துள்ளன. அமெரிக்காவின் சில மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் அணு உலையை நிறுவக் கூடாது என தடுத்து வருகின்றன. இது தான் இன்றைய உலகப் போக்கு.
ஆனால், இந்தியப் பிரதமர் சீனாவில் அணு மின் நிலையங்கள் இருப்பதை எடுத்துக் காட்டுகிறார். நாங்களும் கம்யூனிஸ்டுகள் தான். ஆனால், இரசிய கம்யூனிஸ்டுகளுக்கு முரட்டுத்தனமான விஞ்ஞான பக்தி இருந்தது. அதனால் அவர்கள் அணுஉலைகளால் ஏற்படும் ஆபத்துகளை விஞ்ஞானிகளில் ஒருசாரார் கூறியதைக் கூட ஏற்க மறுத்தனர். அதன் தீய விளைவை சோவியத் ஒன்றியத்தில் செர்னோபில் அணுவெடிப்பு மூலம் மக்கள் இன்றும் அணுபவிக்கின்றனர்.
சீனாவில் தொழிற்சாலை விபத்துகள் ஏராளமாக நடக்கின்றன. அணுக்கதிர் வீச்சுப் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. உலகிலேயே தொழிற்சாலை விபத்துகளும் மரணங்களும் அதிகமாக நடக்கும் நாடு சீனா தான். திரும்பத் திரும்ப சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிகின்றனர். ஆனால் அந்நாட்டு ஆட்சியாளர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல் மக்களுக்கு பேரிழப்பு தரும் பழைய பாணியிலேயே செயல்படுகிறார்கள். அந்த கெட்ட உதாரணத்தை யாரும் பின்பற்ற வேண்டியதில்லை.
அணு உலைகளால் மக்கள் அழிக்கப்படுவார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் பின்பற்றுகிற உலகமயம், உலகத்தில் மக்கள் தொகையை குறைக்க வேண்டும என்ற சிந்தாந்தத்தை வைத்திருக்கிறது. ஏழை எளிய நாடுகளில் உள்ள மக்கள் தொகையை போரின் மூலமோ அணு வெடிப்பின் மூலமோ இயற்கை பேரழிவின் மூலமோ குறைக்க வேண்டும் என்பது உலகமய சித்தாந்தம். ஏனெனில், ஏழை எளிய மக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அவர்கள் தங்கள் வாழ்க்கை நெருக்கடி காரணமாக புரட்சி செய்வார்கள். அப்புரட்சி முதலாளிய ஆட்சியாளர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆபத்தாக முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் இந்தக் கோட்பாட்டை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டவர்கள். உலகமயக் கோட்பாடு வாங்கும் சக்தியுள்ள ஒரு நடுத்தர வர்க்கம் இருந்தால் போதுமெனக் கருதுகிறது. பன்னாட்டு முதலாளிகளுக்கு வாடிக்கையாளர்களாகவும், அவர்களை சார்ந்த தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்களாகவும் மக்கள் இருந்தால் போதும் என்பதே உலகமயப் கோட்பாடு.
விழிப்புணர்ச்சி அடைந்த மக்கள் அணுஉலையை எதிர்த்துப் போராட வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியைப் பொறுத்தவரை அணு உலைகள் எந்தக் காரணம் கொண்டும் திறக்கப்படக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. விரைவில், உங்கள் போராட்டத்தை ஆதரித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் போராட்டங்களை நடத்தும்
நீங்கள் பட்டினிப் போர் நடத்தும் இடிந்தகரை ஆட்சியாளர்களை இடிக்கும் கரையாக, அணுஉலையை இடிக்கும் கரையாக, அணுஉலைகளை மூடு என்று இடிஇடிக்கும் கரையாக உள்ளது. இந்தப் போராட்டம் ஒரு வட்டார போராட்டமாக இல்லாமல் தமிழகம் எங்கும் ஆர்த்தெழுகின்ற போராட்டமாக மாற வேண்டும்.
8 நாளாக பட்டினிப் போர் நடத்திக் கொண்டிருக்கும் 127 சகோதர சகோதரிளுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டு மக்கள் போராட்டம் வென்றேத் தீரும் என்று கூறி விடைபெறுகிறேன்" என்று பேசினார்.
Post a Comment