அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு வலம் வருகிற இஸ்ரேல் நாட்டை எதிர்த்து, பாலஸ்தீனம் தனது வீறுமிக்க விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவு பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு இருந்த போதிலும், பாலஸ்தீன தனி நாட்டிற்கு ஐ.நா. சபையில் இதுவரை நிரந்தர உறுப்பு நாட்டுத் தகுதி இதுவரை வழங்கப்படவில்லை. அமைதி, சமாதானம், சனநாயகம் என்று பேசி வரும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பாலஸ்தீன விடுதலையை தடுத்து வைப்பதிலும், இஸ்ரேலில் தமது இராணுவ பங்களிப்பை அதிகரித்தும் வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களான ஹாமாஸ், பி.எல்.ஓ. ஆகியவை ஒன்றிணைந்து சுதந்திர பாலஸ்தீன அரசை அறிவிக்க முடிவெடுத்துள்ளன. பாலஸ்தீன விடுதலையை ஏற்று, அந்நாட்டை ஐ.நா. மன்றத்தில் 194ஆவது உறுப்பு நாடாக உலக நாடுகள் ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை பாலஸ்தீன நிர்வாக ஆணையம் ஐ.நா.வில் முன்வைத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் இம்முயற்சிக்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகளில் பெரும்பான்மையாக உள்ள ஏறத்தாழ 125க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆயினும், வட அமெரிக்க வல்லரசு ஐ.நா. பாதுகாப்பு அவையின் தனக்குள்ள இரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தை முறியடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. இதனை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
பாலஸ்தீனம் விடுதலை பெற்ற நாடாக மலர்வதற்கும், ஐ.நா.வில் உறுப்பு நாடாக இடம் பெறுவதற்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு இம்மாநாடு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. பாலஸ்தீன விடுதலைப் போர் வெற்றிபெற வாழ்த்துகிறது!
Post a Comment