உடனடிச்செய்திகள்

Saturday, September 24, 2011

நாளை தமிழினத் தற்காப்பு மாநாடு பதிவு, சங்கதி, மீனகம் இணையதளங்களில் நேரடி ஒளிபரப்பு!


நாளை ஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு!

பதிவு, சங்கதி, மீனகம் தளங்களில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு!

 

ஓசூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் ஆறாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து நாளை(25.09.2011) காலை 9 மணியளவில் தமிழினத் தற்காப்பு மாநாடு நடக்கிறது. ஓசூர் வசந்த் நகர் தாயப்பா திருமண மண்டபத்தில் நடக்கும் மாநாட்டிற்கு தமிழகமெங்குமிருந்து இன உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொள்கிறார்கள்.

 

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக காலை 9 மணியளவில் முள்ளிவாய்க்கால் ஈகியர் நினைவரங்கத்தில், தழல் ஈகி செங்கொடியின் படத்திறப்பு நடக்கிறது. த.தே.பொ.க. ஓசூர் தோழர் முருகப்பெருமாள் வரவேற்புரை நிகழ்த்துகிறார். பேராசிரியர் அறிவரசன் செங்கொடியின் படத்தைத் திறந்து வைக்கிறார்.

 

அதனைத் தொடர்ந்து, போர்ப்பறை என்ற தலைப்பில், பாவலர் மு.வ.பரணர் தலைமையில் நடக்கும் பாக்களம் நடக்கிறது. அதில், கவிஞர்கள் கவிபாஸ்கர் வர்ண சாதியிலிருந்து விடுதலை என்ற தலைப்பிலும், ப.செம்பரிதி இன விடுதலை குறித்தும், இரா.சு.நடவரசன் மொழி விடுதலை குறித்தும், இராசா இரகுநாதன் பெண் விடுதலை குறித்தும் கவிதைகள் படிக்கிறார்கள்.

 

அதனைத் தொடர்ந்து, தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம் என்ற தலைப்பில் தமிழக மக்கள் உரிமைப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. மக்கள் கண்காணிப்பகத்தின் அமைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றிடிபேன், வழக்கறிஞர் ப.பா.மோகன், மக்கள் குடிமை உரிமைக் கழகத் தோழர் கண.குறிஞ்சி, இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழக ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் அமரந்தா ஆகியோர் இக்கருத்தரங்கில் உரையாற்றுகின்றனர். பிற்பகலில் காஞ்சி மக்கள் மன்றத்தின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

 

மதியம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில், வாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக் களம் நடக்கிறது. அதில், இலக்கியத்திற்காக தோழர் தி.க.சி., தமிழர் மெய்யியல் ஆய்வுக்காக முனைவர் க.நெடுஞ்செழியன், ஓவியத்துறை சாதனைக்காக ஓவியர் மருது ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் சிறப்பு செய்கிறார்.

 

இந்நிகழ்வைத் தொடர்ந்து, தமிழர் தாயகத்தில் அயலார் ஆதிக்கம் என்ற தலைப்பில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில், மக்கள் இயக்குநர் வெ.சேகர், முனைவர் த.செயராமன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, பொறியாளர் க.அருணபாரதி ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர். மாநாட்டுத் தீர்மானங்களை த.தே.பொ.க. முன்னணி தோழர்கள் அறிவிக்கின்றனர்.

 

மாநாட்டின் நிறைவுக் களத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்துகின்றனர். த.தே.பொ.க. ஓசூர் கிளைச் செயலாளர் தோழர் பி.சுப்பிரமணியன் நன்றியுரை நிகழ்த்துகிறார்.


தமிழ்மது said...

தமிழின தற்காப்பு மாநாடு நேரலையில் காண இதை சுட்டவும்
http://tamilmadu.blogspot.com/2011/09/blog-post_25.html

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT