உடனடிச்செய்திகள்

Saturday, September 17, 2011

ஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு - பெ.மணியரசன் அறிக்கை!

ஓசூரில் ஒன்று கூடுவோம்

உண்மையான திருப்புமுனையை உருவாக்குவோம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை!

ஓசூர் மாநாடு உண்மையில் எதிர்காலப் பலன் தருவதாக அமைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் உறுதி பூண்டுள்ளோம். அதற்காக உழைத்து வருகிறோம். பெரும் கூட்டத்தைத் திரட்டி, ஆவேசமாக எழுச்சியுரை ஆற்றி, கலைந்து, பின்னர் வரலாற்றில் காணாமல் போன மாநாடுகள் ஏராளமாகத் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. அந்த வரிசையில் மேலும் ஒரு மாநாடாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தும் தமிழினத் தற்காப்பு மாநாடு அமைந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக உள்ளோம்.

ஒரு மாநாட்டின் வெற்றிக்கும், அதன் வரலாற்று வாழ்வுக்கும் இரண்டு முகாமைக் கூறுகள் வேண்டும். ஒன்று, அது எதிர்கால வேலைத் திட்டமாக எதை முடிவு செய்கிறது என்பது. இரண்டு, அந்த மாநாட்டிற்கு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், இயக்கத்திற்கு வெளியே உள்ள உணர்வாளர்களும், எந்த அளவிற்குப் பெருந்திரளாகத் திரண்டார்கள் என்பது.

தமிழகத்தின் வரலாறு, எதை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும் என்பதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தெளிவாக உள்ளது. மாநாட்டுத் தீர்மானங்கள் தமிழ் மக்களின் அரசியல், பொருளியல், பண்பியல், தேவைகள் என்ன என்பது பற்றியும், அதற்காக நடத்த வேண்டிய இயக்கங்கள் போராட்டங்கள் குறித்தும் குழப்பமில்லாமல் தெளிவாகத் திசைகாட்டும்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தேர்தல் அரசியலில் ஈடுபடாத தற்சார்பும் புரட்சிகர உள்ளடக்கமும் கொண்ட தமிழ்த் தேசிய அமைப்பாகும். ஆய்ந்து முடிவு செய்த இலட்சியங்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் உறுதியாகப் பற்றி நிற்கும் இயக்கமாகும். பணம், பதவி, விளம்பரம் ஆகியவற்றுக்கு ஆசைப்படாமல் இலட்சியத்தின் மீது மட்டுமே பற்று கொண்டு இயங்க வேண்டுமென்ற அரிச்சுவடியைத் தன் உறுப்பினர்களுக்குக் கற்றுத் தரும் அமைப்பாகும். தங்க நகை செய்யும்பொழுது சேதாரம் ஏற்படுவது போல், தமிழ்த் தேசத்திற்காகப் போராடும்போது த.தே.பொ.க. தோழர்களுக்கு சேதாரம் ஏற்படலாமே தவிர, தமிழ்த் தேசியத்திற்கு சேதாரம் ஏற்படக் கூடாது என்று முடிவெடுத்துள்ள இயக்கம். தமிழினத்தின் விடியலுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ள அமைப்பு என்ற வகையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உண்மையான பொருளில் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுமையான இயக்கம். வர்ண-சாதி, வர்க்க ஒடுக்குமுறைகள் தமிழ்த் தேசத்தில் ஒழிய வேண்டும் என்று போராடுவதால் இது பொதுவுடைமை இயக்கமுமாகும்.

ஓசூரில் 2011 செப்டம்பர் 25 ஞாயிறு காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை தமிழினத் தற்காப்பு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஓசூர்த் தோழர்கள் ஓய்வறியாது உழைத்து வருகிறார்கள். ஓசூர் வாழ் இன உணர்வாளர்கள் இம்மாநாடு சிறக்க எல்லா வகையிலும் உதவி வருகிறார்கள்.

மாநாட்டின் முதல் நிகழ்வாக தழல் ஈகி செங்கொடியின் படத்தைப் பேராசிரியர் அறிவரசன் திறந்து வைத்துப் பேசுகிறார்.

தற்காப்பு முயற்சிகளில் முதன்மையானதாக வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ்நாட்டைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்று ஒரு கருத்தரங்கு நடைபெறுகிறது. தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை தலைமையேற்க திரைப்பட இயக்குநர் வெ. சேகர், முனைவர் த. செயராமன், தோழர் அருணா (ஒருங்கிணைப்பாளர் மகளிர் ஆயம்), பொறியாளர் க.அருணபாரதி ஆகியோர் இக்கருத்தரங்கத்தில் கருத்துரை வழங்குகிறார்கள். இது குறித்து செயல் வடிவம் எடுக்கக்கூடிய கூர்மையான தீர்மானமும் நிறைவேற்றப்படும்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர் உயிர் காக்கவும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தவும், ஒட்டு மொத்தமாகச் சாவுத் தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கவும் மனித உரிமைச் சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் கலந்து கொள்ளும் மற்றுமொரு கருத்தரங்கம் நடைபெறுகிறது. வழக்கறிஞர் த.பானுமதி (மக்கள் உரிமைப் பேரவை) தலைமையில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் (மக்கள் கண்காணிப்பகம்), வழக்கறிஞர் ப.பா.மோகன், தோழர் கண.குறிஞ்சி, தோழர் அமரந்தா ஆகியோர் இக்கருத்தரங் கத்தில் உரையாற்றுகிறார்கள்.

பாவலர் மு.வ.பரணர் தலைமையில் பாக்களம் நடைபெறுகிறது. பாவலர்கள் கவிபாஸ்கர், ப. செம்பரிதி, இரா.சு.நடவரசன், இராசா ரகுநாதன் ஆகியோர் பாப் போர்ப்பறை எழுப்ப உள்ளார்கள்.

தமிழ் இலக்கியத்திற்கும், தமிழர் மெய்யியலுக்கும், தமிழர் ஓவியக் கலைக்கும் வரலாற்றுப் பங்கு வழங்கியுள்ள தோழர் தி.க.சி., முனைவர் க.நெடுஞ்செழியன், ஓவியர் மருது ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்வு எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் அவ்வப்போது தீர்மானங்களை முன்மொழிவார்கள் – வழிமொழிவார்கள். தமிழ் ஈழம் குறித்த தீர்மானம், தமிழ்நாட்டின் முகாமைச் சிக்கல்கள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இடையிடையே கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையில் நடைபெறும் நிறைவுக் களத்தில் தோழர் பெ.மணியரசன், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் எழுச்சியுரையாற்றுவார்கள்.

இழப்புகளும், ஏளனங்களும், அவமானங்களும் தாக்கியதால் இதயம் காயம்பட்டுப் பொருமிக்கொண்டிருக்கும் தமிழர்களே, இவற்றுக்கெல்லாம் இப்பொழுதே முடிவு கட்டியாக வேண்டும் என்று குமுறிக் கொண்டிருக்கும் இளம் ஏந்தல்களே, இதுவரை பகைவர்கள் தீர்மானித்த வரலாறு நம்மை வழிநடத்தியது. இனிமேல் நமது வரலாற்றை நாமே வழிநடத்துவோம். இலக்கில்லாத ஆரவார முழக்கங்களை நம்பி ஏமாந்த காலம் முடிந்துவிட்டது. இது இயக்கங்களை எடைபோட்டுத் தீர்மானிக்கும் இளைஞர்களின் காலம். இலக்குகளை அடையாளப்படுத்துவோம்! தீர்வுகளைத் துல்லியப்படுத்துவோம்! போராட்டங்களைக் கூர்மைப்படுத்துவோம்! ஓசூரில் ஒன்றுகூடுவோம்!

ஆடவரே வாருங்கள்! ஆம்,ஆம் நிகரென்று மகளிரே வாருங்கள்!


தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT