உடனடிச்செய்திகள்

Friday, September 9, 2011

தினமலரின் தமிழின எதிர்ப்பு நஞ்சு - பெ.மணியரசன் கண்டன அறிக்கை!


 தினமலரின் தமிழின எதிர்ப்பு நஞ்சு

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி பொதுச் செயலாளர்

பெ.மணியரசன்  கண்டன அறிக்கை

 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஆரியர்களின் தமிழ் இனப்பகை நடவடிக்கைகளை நாம் மாற்றிட முயன்றாலும், மறந்திட முயன்றாலும் ஆரியர்கள் தங்களை தமிழர்களோடு இணக்கப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. என்பதற்குத் தினமலர் ஏடு தக்க எடுத்துக்காட்டு.

 

ஆரிய ஊதுகுழல் ஏடான தினமலர் 5.9.2011 அன்று ''ராஜீவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள துணுக்குத் தோரணங்கள் மேலே கூறிய நமது கருத்துக்கு சான்றாகும்.

 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர் உயிர்காக்க காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த வீரப்பெண் செங்கொடி 28.8.2011 அன்று மாலை காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தீக்குளித்து உயிர் ஈகம் செய்தார். ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி இளைஞர்கள் இராசீவ் கொலையில் சிக்கவைக்கப்பட்டு அநியாயமாகத் தூக்கிலிடப்பட உள்ளார்களே என்று சொல்லொண்ணா வேதனையுற்று, தனது தீக்குளிப்பு தமிழ் மக்களை தட்டி எழுப்பி சாவு தண்டனையை தடுக்கும் என்று நம்பினார் அத்தகைய உயர்ந்த மனித நேயத்தோடும், தமிழ் இனப்பற்றோடும் 21 அகவை இளம்கொழுந்து செய்த ஈகத்தை ஆரிய நஞ்சால் நிரம்பி வழியும் தினமலர் கொச்சைப்படுத்துகிறது. காதல் தோல்வியால்தான் செங்கொடி தீக்குளித்தார் என்று தொடர்ந்து எழுதிவருகிறது.

 

சங்கர மடத்தலைவர் ஜெயேந்திர சரஸ்வதியின் காம விளையாட்டுக்கள் பல்வேறு ஏடுகளில், தொலைக்காட்சி ஊடகங்களில் அடுக்கடுக்காக வந்து நாறிய போது அதுகுறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை தினமலர். ஜெயேந்திரர் துறவுக்கு செய்த துரோகத்தை கண்டு கொள்ளவில்லை. இப்போது இளம்பிஞ்சு ஒன்று இனஉணர்வு மேலீட்டால் ஏதாவது செய்து மூவர் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று கொந்தளித்த மனதோடு தீக் குளித்ததை கொச்சைப்படுத்துகிறது அவ்வேடு. தமிழ் இனத்துக்கெதிரான அவர்களின் குரூரமும் வன்மமும் எவ்வளவு கொடுமை நிறைந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது.

 

அப்ஸல் குருவிற்கும், அஜ்மல் கசாப்பிற்கும், தருமபுரி பேருந்தை எரித்து மூன்று மாணவிகளைக் கொன்றவர்களுக்கும் சாவுத் தண்டனையை நீக்கக் கோருவார்களா தமிழின உணர்வாளர்கள் என்று அவ்வேடு கேட்கிறது. அவர்களுக்கும் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்பதே நமது குழப்பமற்ற நிலைபாடாகும். அவர்களுக்கு வாழ்நாள் தண்டனை போதும். சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள ஜெயேந்திர சரஸ்வதிக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை வழங்கினால் அதையும் நாம் எதிர்ப்போம்.

 

இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இராசபட் சேவுக்கும் பன்னாட்டு நீதிமன்றம் வாழ்நாள் தண்டனை வழங்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம். நமது மனிதநேயத்தில் எந்தப் பாகுபாடும் கிடையாது. வர்ணத்திற்கு ஒரு நீதியும், ஜாதிக்கு ஒரு தர்மமும் கடைபிடிக்கும் தினமலரின் வர்ணாசிர்ம தர்மம் தமிழர்  நீதியில் கிடையாது.

 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதே தமிழினத்தின் அறம். "பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்செ பகைவனுக்கருள்வாய்" ''பகை நடுவினில் அன்புறுவான நம் பரமன் வாழ்கிறான்" என்றார் பாரதியார் பார்ப்பன வகுப்பில் பிறந்தார் என்பதற்காக மட்டுமே பாரதியை தூக்கிப் பிடிக்கும் தினமலர் அவரது மனித நேயக் கருத்தை ஏற்க மறுக்கிறது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது தமிழ்நெறி அன்று.

 

ராசீவ் காந்தி கொலை வழக்கை புலனாய்வு செய்து குற்ற அறிக்கையை தாக்கல் செய்த தலைமை அதிகாரியான கார்த்திகேயன், பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்றும் அவர்களுக்கு வாழ்நாள் தண்டனை போதும் என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

 

அவர் தமிழினத்தில் பிறந்தவர் என்பதால்  தினமலரின் ஆரியப் பார்வையில் அவரும்  தமிழின வெறியராகத் தோன்றலாம்.

 

இராசீவ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி கே.டி. தாமஸ் பணி ஓய்வு பெற்றுள்ளார். அவர் 5.9.2011 அன்று தி ஏசியன் ஏஜ் என்ற ஆங்கில ஏட்டில், "மரண தண்டனை என்பது அரசு நடத்தும் காட்டுமிராண்டித் தனமான கொலை தவிர வேறன்று.'' என்ற தலைப்பில் சாவுத் தண்டனைக்கு எதிரான கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் "இராசீவ் கொலை வழக்கை விசாரித்து நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கிய மூன்று நீதிபதிகளின் அமருவுக்கு நான் தலைமையேற்கவேண்டிய  கெடுவாய்ப்பு இருந்தது'' என்று மிகவும் வருந்திக் கூறியுள்ளார். மேலும் அவ்வழக்கில் தண்டனை பெற்ற மூவருக்கும் மற்றும் அப்சல் குரு உள்ளிட்டோருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

சாவு தண்டனையை நீக்க வேண்டும் என்ற கருத்து, இந்திய உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதிகள் வி.ஆர் கிருஷ்ணய்யர், பி.என்.பகவதி ஆகி யோருக்கு உண்டு. அவர்கள் தங்கள் தீர்ப்புரைகளிலும், கருத்தரங்க உரைகளிலும் அக்கருத்தை வலுவாக வைத்துள்ளனர்.

 

 உலகில் 139 நாடுகளில் சட்ட புத்தகத்திலிருந்து சாவுத் தண்டனையை நீக்கிவிட்டனர். அமெரிக்க நாட்டில் 15 மாநிலங்கள் சாவுத் தண்டனையை நீக்கிவிட்டன. சாவு தண்டனை நீக்கப்பட்ட 15 மாநிலங்களிலும் கூடுதலாகக் கொலைக் குற்றங்கள் நடக்கவில்லை என்றும், சாவுத் தண்டனை  நீக்கப்படாத ஏனைய 35  மாநிலங்களில் கொலைக் குற்றம் குறைந்து விடவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொலைக் குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கூடாது என்பதன்று நம் வாதம். 14 ஆண்டுகள் சிறையில் இருக்கதக்க வகையில் வாழ்நாள் தண்டனை வழங்கினால் போதும் என்பதே நம் வாதம்.

 

தமிழினத்திற்கெதிராக அவதூறுகளை அள்ளி வீசுவது தினமலரின் நிரந்தர ''தர்மமாகும்.'' அது தனது ஆசையை செய்தியாக வெளியிட்டு அவ்வப்போது மூக்குடைபட்டு வருகிறது. இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஆக்கிரமிப்புபோர்  நடத்திய காலத்தில், பதவிச் சண்டையில் பிரபாகரன் விடுதலைப்புலிகளின் ஒரு பிரிவினரால் கொல்லப்பட்டார்  என்றும், அவரின் உடலுக்கு மக்கள் இறுதி மரியாதை செய்து வருகிறார்கள் என்றும் தினமலர்  பொய் செய்தி வெளியிட்டதை உலகம் அறியும்.

 

இப்போது தேர்தல் அரசியலுக்கு வெளியே தமிழின உணர்வும், தமிழ்த் தேசிய அரசியலும் கிளர்ந்து எழுகிறது. தமிழ்நாட்டில் சமூக - அரசியல் சிக்கல்களின் தீர்வுக்குத் திசைகாட்டும் அளவில் இன உணர்ச்சி வளர்ந்துள்ளது. தமிழினக் காப்பிற்கென்று பல்வேறு அமைப்புகள் தோன்றி போராடுகின்றன. இந்த இன எழுச்சியைக் கண்டு கிலி பிடித்து கிடக்கிறது தினமலர் கூட்டம். அப்பாவித் தமிழர்களை திசை திருப்ப பாரதமாதா பஜனை பாடுகிறது. குற்றமற்றவர்களைப் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கிறது. இராசீவ் காந்தி கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும் அவ்வழக்கிற்குத் தடா சட்டம் பொருந்தாது என்றும்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

சாவுத் தண்டனையை நீக்கிவிட்டால் கொலைகள் பெருகிவிடும் என்று சான்று எதுவும் தராமல் பூச்சாண்டிக் காட்டுகிறது தினமலர். கொள்கை அரிமாக்களின் உறுமலைக் கோட்டான்களின் கூச்சல் தடுத்துவிட முடியாது.

 

ஆரியர் - தமிழர் என்ற முரண்பாட்டை இப்போதும் இணக்கப்படுத்த முடியாமல்  அதை மேலும் தீவரப்படுத்துவோர் தினமலர் போன்ற பார்ப்பனிய சக்திகள்தாம் என்பதை நடுநிலையாளர்கள் உணரவேண்டும். தினமலர் கும்பலுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

 
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
சென்னை, 06.09.2011.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT