இந்தியா தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும்
ஓசூர் தமிழினத் தற்காப்பு மாநாட்டில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தீர்மானம்!
"இந்தியா தமிழ்நாட்டை விடுக்க வேண்டும்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஓசூரில் ஞாயிறு அன்று(26.09.2011) நடத்திய தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் கி.வெங்கட்ராமன் இத்தீர்மானத்தை முன்மொழிய, தலைவர் பெ.மணியரசன் அதனை வழிமொழிந்து விளக்கிப் பேசினார்.
சிறப்புப் பொதுக்குழு
ஓசூர் வசந்த நகர் தாயப்பா திருமண நிலையத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் 6ஆவது சிறப்புப் பொதுக்குழு கூட்டம் கடந்த 23, 24 ஆகிய நாட்களில் நடந்தது. இச்சிறப்புப் பொதுக்குழுவை குழ.பால்ராசு, க.முருகன், அருணா ஆகிய மூவரைக் கொண்ட மாநாட்டுத் தலைமைக்குழு வழிநடத்தியது. இச்சிறப்புப் பொதுக்குழுவில், தமிழகமெங்குமிருந்து பொதுக் குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர். இதில், கட்சியின் புதிய கொள்கை அறிக்கை, திருத்தப்பட்ட அமைப்பு விதிகள் ஆகியவை விவாதிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டன.
தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக தோழர் பெ.மணியரசன் அவர்களும், பொதுச் செயலாளராக தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களும் நா.வைகறை, குழ.பால்ராசு, அ.ஆனந்தன், கோ.மாரிமுத்து, பழ.இராசேந்திரன், பா.தமிழரசன், க.அருணபாரதி ஆகிய தோழர்கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 32 பேர் கொண்ட தலைமைப் பொதுக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறப்புப் பொதுக்குழுவின் தொடர்ச்சியாக த.தே.பொ.க. நடத்தும் தமிழினத் தற்காப்பு மாநாடு ஞாயிறு(25.09.2011) அன்று அதே மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் ஈகியர் நினைவரங்கில் நடைபெற்றுதுது. இதில் தமிழகமெங்குமிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும் தமிழின உணர்வாளர்களும் ஆண்களும் பெண்களுமாய பெருந்திரளாகக் கூடினர்.
\
செங்கொடி படத்திறப்பு
மாநாட்டின் தொடக்க நிகழ்வாக காலை 9 மணியளவில் முள்ளிவாய்க்கால் ஈகியர் நினைவரங்கத்தில், தழல் ஈகி செங்கொடியின் படத்திறப்பு நடந்தது. த.தே.பொ.க. ஓசூர் தோழர் முருகப்பெருமாள் வரவேற்புரை நிகழ்த்த, பேராசிரியர் அறிவரசன் செங்கொடியின் படத்தைத் திறந்து வைத்தார்.
கவிவீச்சு
அதனைத் தொடர்ந்து, 'போர்ப்பறை' என்ற தலைப்பில், பாவலர் மு.வ.பரணர் தலைமையில் பாக்களம் நடந்த்து. அதில், கவிஞர்கள் கவிபாஸ்கர் 'வர்ண சாதியிலிருந்து விடுதலை' என்ற தலைப்பிலும், ப.செம்பரிதி 'இன விடுதலை' குறித்தும், இரா.சு.நடவரசன் 'மொழி விடுதலை' குறித்தும், இராசா இரகுநாதன் 'பெண் விடுதலை' குறித்தும் கவிதைகள் படித்தனர்.
தூக்குத் தண்டனையை எதிர்த்து கருத்தரங்கம்
சாதனையாளர் பாராட்டுக்களம்
மதியம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில், 'வாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக் களம்' நடந்தது. அதில், இலக்கியத்திற்காக தோழர் தி.க.சி., தமிழர் மெய்யியல் ஆய்வுக்காக முனைவர் க.நெடுஞ்செழியன், ஓவியத்துறை சாதனைக்காக ஓவியர் மருது ஆகியோருக்கு 'தமிழ்த் தேசியப் புகழொளி' விருதுகள் வழங்கப்பட்டன. தோழர் தி.க.சி. உடல் நலக்குறைவு காரணமாக நேரில் வர இயலாததால், அவருடைய விருது பேராசிரியர் அறிவரசனிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் விருதுகளை வழங்கி சிறப்பு செய்தார்.
தமிழகத்தில் அயலார் ஆதிக்கம் - கருத்தரங்கம்
இந்நிகழ்வைத் தொடர்ந்து, 'தமிழர் தாயகத்தில் அயலார் ஆதிக்கம்' என்ற தலைப்பில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. அவர், தமிழகத்தை கலப்பினத் தாயகமாக மாற்ற இந்திய அரசு செய்யும் சூழ்ச்சிகரமான முயற்சிகளை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய, பொறியாளர் க.அருணபாரதி, தமிழக மாணவர்களிடையே அயல் இன மாணவர்களால் ஏற்பட்டுள்ள வெளியார் பண்பாட்டுத் திணிப்பு குறித்தும், அயல் இனத்தாரால் கொலை, கொள்ளை போன்ற குற்ற நிகழ்வுகள் மேலும் அதிகரித்து விட்டன, வெளியார் ஆதிக்கம் குறித்துப் பேசிக் கொண்டு மட்டும் இருக்க்க்கூடாது நாம் செயல்பாடுகளில் இறங்க வேண்டும், இம்மாநாட்டின் நோக்கம் நாம் கேட்டு விட்டு கலைந்து செல்வது அல்ல, எங்காவது மார்வாடி சேட்டுகளும் மலையாளிகளும் அடித்து விரட்டப்பட்டால் அது தான் இம்மாநாட்டின் உண்மையான வெற்றி என்று அவர் மேலும் பேசினார். மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, அயலார் ஆதிக்கம் பெருத்து விட்டதால் நமது உள்ளுர் பொருட்கள் கூட கிடைப்பதில்லை என்றார். முனைவர் த.செயராமன், அயலாருக்கு வாக்காளர் அடையாள அட்டையும், குடும்ப அட்டையும் கொடுக்கப்பட்டால் 1956 மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மக்கள் இயக்குநர் வெ.சேகர், திரைத்துறையில் அயல் இனத்தாரின் ஆதிக்கம் குறித்து கருத்துரை வழங்கினார்.
மாநாட்டுத் தீர்மானங்கள்
மாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையிடையே தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, பலத்த கரவொலிகளுக்கிடையே அவை வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. இனப்படுகொலைக் குற்றவாளி இராசபட்சேயைக் கூண்டிலேற்றுக! இராசபட்சே மீதான பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணையை நடத்த தடை ஏற்படுத்தும் இந்திய அரசுக்கு கண்டனம்!
2. இந்தியா தமிழக மீனவர்களை பாதுகாக்க முன்வராத நிலையில், தமிழக மீனவர்களை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசால் மீனவர் தற்காப்புப் படை(ஹோம் கார்டு) ஏற்படுத்தப்பட்டு, மீனவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
3. 1956க்குப் பிறகு தமிழகத்தில் குடியேறிய வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்க்க் கூடாது.
4. முல்லைப் பெரியாறு அணை உரிமையை பறிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.
5. பரமக்குடி – மதுரையில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் படி கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
6. தமிழக உழவர்களின் வேளாண் சந்தையைப் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசு, தமிழகத்தை தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
7. மூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்கி விடுதலை செய்ய வேண்டும்.
8. கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை இழுத்து மூட வேண்டும்.
9. ஐ.நா.வில் பாலஸ்தீனத்திற்கு உறுப்பு நாடு தகுதி வழங்க ஆதரவு.
10. தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
11. உழவர்களின் வாழ்வுரிமையைக் பறிக்கும் உயிரித் தொழில்நுட்ப சட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்.
நிறைவுக்களம்
மாநாட்டின் நிறைவுக் களத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமை தாங்கினார். அதன் பின், மாநாட்டின் முதன்மைத் தீர்மானமாக, இந்திய அரசு தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார். அதன் பின் பேசிய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழீழப் பகுதிகளில் சிங்களர் ஆக்கிரமிப்பு குறித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் மாநாட்டு நிறைவுரையாற்றினார்.
"1990 பிப்ரவரி 25 அன்று சென்னையில், நாங்கள் முயற்சி செய்து தமிழர் தன்னுரிமை மாநாட்டை நடத்தினோம். அதில், சுப.வீரபாண்டியன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், அறிவுமதி, இன்குலாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் தான் தமிழ்நாட்டுக்கு இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானம் போட்டோம். இந்திய வெறியர்கள் பதறித் துடித்தனர்.
என் மீது வழக்குப் போட்டனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கிலிருந்து என்னை விடுதலை செய்தனர். நான் தீர்மானம் போட்டதை நீதிமன்றத்தில் மறுத்துப் பேசவில்லை. அப்படித் தான் போட்டேன், அதற்கு எனக்கு சனநாயக உரிமையில்லையா? என்று நீதிமன்றத்தைக் கேட்டேன். அவர்கள் என்னை விடுதலை செய்தனர்.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகளை இந்திய அரசு மறுக்கிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி, சேலம் இரும்பு, நரிமணம் பெட்ரோல், குத்தாலம் எரிவளி என தமிழகத்தின் இயற்கை வளங்களை இந்திய அரசு கொள்ளையிட்டுச் செல்கிறது. ஈழத்தமிழர்கள் மீது போர் தொடுத்து சிங்களனைக் கொண்டு 1 இலட்சம் தமிழர்களை இந்தியா கொன்றொழித்தது. தமிழர்களுக்கென்று தமிழ்நாடு என்ற தாயகம் அரசுரிமை பெற்ற இறையாண்மையுள்ள தனிநாடாக இருந்திருந்தால், நாம் படை அனுப்பி ஈழப்படுகொலையைத் தடுத்திருப்போம். உலகில் எங்காவது தமிழர்களுக்கு சிக்கல் என்றால் நாம் படை அனுப்புவோம்.
ஆனால், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் நாடுகளை விட மிகப்பெரிய, 7 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு இந்தியச் சிறையில் ஒரு சிறுபான்மை இனம் என்ற முத்திரையுடன் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. உத்திரப்பிரதேசக் காரனுக்கும், எமக்கும் என்ன சம்பந்தம்? பீகார் காரணுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இவர்களால் 7 கோடி தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டார்கள்?
எனவே, இந்திய அரசு தமிழகத்தை விடுக்க வேண்டும் என்று இம்மாநாட்டின் வாயிலாக கோரிக்கை வைக்கிறோம். இல்லையெனில், அதனை நாமே விடுவிப்போம்" என்று பேசினார்.
செய்தி:
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு
Post a Comment