உடனடிச்செய்திகள்

Tuesday, September 27, 2011

மூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்கி விடுலை செய்க - ஓசூர் த.தே.பொ.க. மாநாட்டில் தீர்மானம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து அவாகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 25.09.2011 அன்று நடத்திய தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு:
 

மூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்கி விடுதலை செய்க!

 

இராசீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் தூக்கு மரநிழலில் நின்றிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்களை நிராகரித்து இம்மூவரையும் தூக்கிலிட இந்திய அரசு உத்தரவிட்டது.

 

ஈழத்தில் சிங்கள அரசுடன் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்களை தம் கண்முன்னே பலிவாங்கியது போதாதென்று இந்திய அரசு, இம்மூன்று தமிழர்களின் உயிரையும் பறிக்க இரத்த வெறியுடன் நின்றதைக் கண்டு தமிழகம் கொதித்தெழுந்தது. மூவர் தூக்கை எதிர்த்து முதலில் களமிறங்கியது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு எண் 161ன்படி மாநில ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசு இம்மூவரையும் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்க வேண்டுமென வலியுறுத்தியது.  

 

தமிழகமெங்கிலும் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள், பெரியாரிய இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் இம்மூவரின் மரண தண்டனைக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். தமிழகமே கொந்தளித்தது. இதன் உச்சமாக காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி 28.08.2011 அன்று காஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் மூவர் விடுதலைக்காக தீக்குளித்து ஈகம் செய்தார்.

 

மூவர் தூக்கு தண்டனை குறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இவர்களின் சாவுத் தண்டனைக்கு 8 வார கால இடைக்காலத் தடை விதித்து ஆணையிட்டது. அதே நேரம், சட்டப்பேரவையில் மூவர் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தமிழக முதலமைச்சர்  தீர்மானம் மொழிந்தார். அனைத்துக் கட்சி ஆதரவோடு அத்தீர்மானம் நிறைவேறியது. தமிழக அரசின் இந்நிலைப்பாடு அரசியல் வகையில் முக்கியமான ஒன்றாகும். இதற்காக நமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஆயினும், 1991 மார்ச் 5 அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அனுப்பிய அறிவிக்கையைக் -காரணம் காட்டி இப்போதைய நிலையில் தமிழக அரசுக்கு மூவர் தூக்கு தண்டனையை இரத்து செய்ய அதிகாரமில்லை என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளதை இம்மாநாடு ஏற்கவில்லை.

 

அரசமைப்புச் சட்டத்திற்கும், பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் முரணாக இந்திய உள்துறை அமைச்சகம் 1991இல் அனுப்பிய அறிவுறுத்தலைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

 

தமது அமைச்சரவையைக் கூட்டி மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி, அரசமைப்புச் சட்ட விதி 161இன் படி, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

சட்டத்தின் பெயரால் நடத்தப்படும் கொலைத் தண்டனையை உலகில், 139 நாடுகள் நீக்கி விட்டதை கருத்தில் கொண்டு, இந்தியா இத்தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோர் 21 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடி வருவதை கருத்தில் கொண்டு, இவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT