உடனடிச்செய்திகள்

Tuesday, September 27, 2011

தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - ஓசூர் த.தே.பொ.க. மாநாட்டில் தீர்மானம்!

இந்திய அரசு தமிழ்நாட்டை தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 25.09.2011 அன்று நடத்திய தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு:
 

  இந்திய அரசே! தமிழகத்தை தனி வேளாண் மண்டலமாக அறிவி

 

தமிழ்நாட்டு உழவர்களின் சந்தையாக தமிழகத்தை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாட்டைத் தனி வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.  இவ்வேளாண் மண்டலத்தை நிர்வகிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் வேளாண் பிரதிநிதிகளையும் உரிய வல்லுநர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஆணையம் அமைக்க வேண்டும்.

 

இவ்வாணையம் வேளாண் விளைபொருள்களின் விலையை, உற்பத்திச் செலவை மட்டும் கணக்கில் கொண்டு தீர்மானிக்காமல் அவற்றின் உற்பத்தியாளர்களின் குடும்ப அடிப்படைச் செலவுகளையும் இணைத்து தீர்மானிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கண்ட விபரங்களின் அடிப்படையில் விலையை மாற்றி அமைக்க வேண்டும்.

 

தமிழக உழவர்கள் விளைவிக்கும் வேளாண் விளைபொருள்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். வெளியிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய வேளாண் விளை பொருள்களின் அளவை இவ்வாணையம் தீர்மானிக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாட்டிற்கோ ஏற்றுமதி செய்ய வேண்டிய விளைபொருட்களையும் அவற்றின் அளவையும் தீர்மானிக்க வேண்டும்.

 

ஆணையம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தும் போராட்டங்களை முன்னெடுக்குமாறு தமிழக வேளாண் மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT