பரமக்குடி - மதுரை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
பரமக்குடி துப்பாக்கிக் சூட்டைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நாளை(16.09.2011) அன்று தஞ்சை, மதுரை உள்ளிட்ட இடங்களிலும், 18.09.2011 அன்று சென்னையிலும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்துகின்றது.
பரமக்குடியில் நடந்து முடிந்துள்ள சனநாயக விரோத மற்றும் மனித உரிமைப் பறிப்பு நிகழ்வுகளுக்குத் தீர்வு காண பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதலமைச்சரை வலியுறுத்தியும் இவ்வார்ப்பட்டம் நடக்கிறது.
1. பரமக்குடி மற்றும் மதுரை துப்பாக்கிச் சூடுகளுக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து அவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்யவேண்டும்.
2. பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்
3. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கவேண்டும்.
தஞ்சை
தஞ்சை இரயிலடியில் நாளை மாலை நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் அயன்புரம் சி.முருகேசன் தலைமை தாங்குகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருட்டிணன், த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் கோ.உதயக்குமார், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திருஞானம், வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவள்ளுவர் சிலை அருகில், மாலை 5 மணியளவில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் ரெ.இராசு, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், பெ.தி.க. அமைப்பாளர் மாயாண்டி, சி.பி.ஐ.–எம்-எல்.பொதுச் செயலாளர் மீ.த.பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பாளர் சரவண பாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சி சூரிய தேவ், தமிழ்ப் புலிகள் இயக்க பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன், த.தே.வி.இ. அமைப்பாளர் கதிர்நிலவன், தமிழர் தேசிய இயக்கம் கணேசன், சித்திரை தானி ஓட்டுநர் சங்கத் தலைவர் இராசேந்திரன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றுகின்றனர்.
சென்னை
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு 19.09.2011 அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் க.அருணபாரதி, தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழக்கனல் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
இவ்வார்ப்பாட்டங்களில், திரளான தமிழ் உணர்வாளர்களும், மனித நேயர்களும் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
செய்தி:
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு
Post a Comment