பரமக்குடி – மதுரை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்!
கடந்த 11.09.2011 அன்று பரமக்குடியிலும், மதுரையிலும் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாயினர். பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 54வது நினைவு தினத்தில் பங்கெடுக்கச் சென்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் அவர்களை முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தமிழக அரசு கைது செய்தது தவறு. பரமக்குடிக்கு ஜான் பாண்டியன் வருகையால் பதற்றம் ஏற்படும் என்று கருதிய தமிழக அரசு, அவரை கைது செய்ததன் மூலம் தேவையில்லாமல் அப்பகுதியில் பதற்றத்தை தானே உருவாக்கியது. கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பரமக்குடி ஐந்து முனை சாலையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய தாழ்த்தப்பட்ட மக்கள் மீது காவல்துறை ஏவிய வன்முறை காட்டுமிராண்டித்தனமானது.
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூட அனுமதி பெறாமல் அங்கு காவல்துறை நடத்திய சட்டவிரோத துப்பாக்கிச் சூட்டில் 7 தமிழர்கள் பலியானது துயரத்திற்குரியது. முறையான எச்சரிக்கையின்றி நடத்தப்பட்ட அத்துப்பாக்கிச் சூட்டில் மறியலில் கலந்து கொள்ளாதவர்கள் கூட பலியாக நேரிட்டது அங்கு காவல்துறை நடத்திய வன்முறை வெறியாட்டத்தை அம்பலப்படுத்துகின்றது. பரமக்குடியை போல், மதுரையில் சாலை மறியலோ முற்றுகைப் போராட்டமோ நடத்தப்படாத சூழலில் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடு, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காவல்துறையினருக்கு இருந்த வன்மத்தைக் காட்டியது.
ஒடுக்கப்பட்டத் தமிழர்கள் ஏழு பேரின் உயிர்களை பலிவாங்கிய காவல்துறை அதிகாரிகளின் தவறுகளுக்காக அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டிய தமிழக முதல்வர், காவல்துறை அதிகாரிகளின் குற்றங்களை நியாயப்படுத்தும் வகையில் சட்டப் பேரவையில் வாசித்த அறிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது.
துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின்படி கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இந்நிகழ்வு குறித்த உண்மைகளை அறிய தமிழக முதல்வர் தற்போது நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவைக் கலைத்து விட்டு, பணியில் உள்ள நீதிபதி தலைமையில் புதிய விசாரணைக் குழு அமைத்து முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 5 இலட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
பரமக்குடி ஐந்துமுனை சாலையில் மறியல் செய்தவர்கள் வெறும் 500 பேர் தான் என முதல்வர் செயலலிதா சட்டப் பேரவையிலேயே தெரிவித்துவிட்டப் பின்னர், தமிழகக் காவல்துறை 1000 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது மிகவும் கண்டனத்திற்குரியது. காவல்துறை தேடுதல் வேட்டைக்கு அஞ்சி கிராமங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மறைந்து வாழும் அவலம் நடக்கிறது. இதனால் 2 பேர் இறந்திருப்பதும் வருத்தத்திற்குரியது.
காவல்துறையின் இந்நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்கள் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
Post a Comment